Thursday, September 30, 2010

பிதற்றல்கள் - 9/30/2010

இன்று பாபர் மசூதி/ராமஜென்ம பூமி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. எந்தக் கலவரமும் வெடிக்காமல் அமைதியாக முடிய அல்லாவையும் ராமரையும் வேண்டிக் கொள்கிறேன்.

***********************************************************************

நாளை எந்திரன் ரிலீஸ். ராச்செஸ்டரில் ரஜினி/கமல் படங்கள் ரீலீஸாகும் வாரத்தின் சனி அல்லது ஞாயிறு ஒரே ஒரு காட்சி மட்டும் தான் போடுவார்கள். வழக்கமாக படத்தை ஸ்கீரின் செய்யும் நிறுவனத்துக்கு போன வாரம் தொலைபேசியில் அழைத்துக் கேட்ட போது, டிஸ்ட்ரிப்யூட்டர் அதிக பணம் கேட்பதாகவும் இந்த முறை இரண்டு வாரம் கழித்துத்தான் எந்திரன் வரும் என்றும் சொன்னார்கள். எனக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது.

இந்த வாரம் திங்கட்கிழமை எங்கள் ஊரில் இருக்கும் சினிமார்க் (cinemark theaters) தியேட்டர்ஸில் ஒரு வாரம் எந்திரன் - The Robot போடப்போவதாக (ஒரு நாளைக்கு மூன்று காட்சிகள்) விளம்பரம் பார்த்ததும் முதல் வேளையாக டிக்கெட் புக் செய்துவிட்டேன். எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் ஏழு நாள் திரையிடும் அளவுக்கு ராச்செஸ்டரில் தமிழ்க்கூட்டம் இல்லையே? எந்த தைரியத்தில் போடுகிறார்கள்?

ஆனால், நியூ யார்க் மாகாணத்தில் நியூ யார்க் சிட்டியிலும் ராச்செஸ்டர் சிட்டியிலும் மட்டுமே திரையிடப்படுகிறது. அதனால் பக்கத்து ஊர் மக்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பாயிருக்கலாம். யாருக்காவது விசயம் தெரியாமல் இருந்தால் இங்கே போய் தெரிந்து கொள்ளுங்கள்.

*****************************************************************************

கடந்த சில வாரங்களாக பேசப்பட்டு வரும் அந்தப் பிரச்சனையில் என் பக்கம் நின்ற அனைவருக்கும் நன்றிகள். நானாக யாரையும் போய்ப் பார்த்து என் பக்கம் நியாயம் இருக்கிறது என்று விளக்கிக் கொண்டு இருக்கவில்லை. ஆனாலும் என் மீது நம்பிக்கை வைத்து நான் தவறிழைத்திருக்க மாட்டேன் என்று என் பக்கம் நின்றதற்கு கோடி நன்றிகள்.

தலைவர் பாணியில சொல்லணும்னா - இது “சேத்த” கூட்டமில்லை. அன்பால தானா சேர்ந்த கூட்டம்.

இதோட அவ்வளவுதான். மீண்டும் சைலண்ட் மோடுக்குப் போகிறேன்.

******************************************************************************
பரிசல் கிருஷ்ணாவும், ஆதி/தாமிராவும் இணைந்து நடத்தும் மாபெரும் சிறுகதைப் போட்டியைப் பற்றி தெரிந்து கொண்டிருந்திருப்பீர்கள். இருந்தாலும் ஒரு விளம்பரம். அதற்கான அறிவிப்பை பரிசல் பக்கத்துக்கே போய் பாருங்க.

எல்லாரும் எழுதுங்க. எதையாவது எழுதுங்க. நானே ரெண்டு கதை எழுதியிருக்கேன்னா பாருங்களேன்? மூன்று சிறந்த கதைகளுக்கு ரூ.1000/- மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாம். புத்தகத்துக்காகவாவது எழுதுங்க.

********************************************************************************

முகிலன் அப்டேட்ஸ்:

ரஜினியை நன்றாக அடையாளம் தெரிந்து கொண்டார். ரங்கா திரைப்படத்தில் வரும் ரஜினியில் இருந்து எந்திரன் புரமோசனில் வரும் ரஜினி வரை அனாயாசமாக அடையாளம் கண்டுபிடிக்கிறார். பிடித்ததும் அப்பா ரஜ்ஜி, அம்மா ரஜ்ஜி என்று இருவரையும் அழைத்து கைத்தட்டல் பெறும் வரை காட்டிக்கொண்டே இருக்கிறார்.

சமீபத்தில் ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பல ரஜினி புகைப்படங்களை வைத்து பத்மப்ரியா ஆடிய - ஸ்டைலு ஸ்டைலுதான் பாடல் முகிலனின் ரஜினிப் பசிக்கு ஏற்ற தீனி. முதல்முறையாக தியேட்டரில் ஒரு தமிழ்ப் படம் பார்க்கப் போகிறார். என்ன செய்யப்போகிறார் என்று தெரியவில்லை.

கலர்களை அடையாளம் கண்டுகொள்ளப் பழகிவிட்டார். எட் (ரெட்), கீன்(க்ரீன்), பூ(ப்ளூ), பாக்(ப்ளாக்), யெய்யோ (யெல்லோ)ஆகியவற்றை சுலபமாகக் கண்டுபிடித்துவிடுவார். ப்ரவுன், பிங்க், வொயிட் ஆகியவற்றை சொல்லத் தெரியாது, ஆனால் எதுப்பா பிரவுன் கலர் என்று கேட்டால் காட்டத்தெரியும்.
சில நாட்களாக கலரையும் பொருளையும் சேர்த்து - எட் ச்சூச்சூ, யெய்யோ டக் (யெல்லோ ட்ரக்) என்று சொல்லப் பழகியிருக்கிறார்.

பேப்பரும் பேனாவும் கொடுத்தால் கொஞ்ச நேரம் எதாவது கிறுக்குவார். பின் என்னையோ அம்மாவையோ அழைத்து எங்கள் கையில் பேனாவைக் கொடுத்து எழுதச் சொல்வார்.

முதலில் ஏப்பேன் - ஏரோப்ளேன் வரைய வேண்டும்.
அடுத்து ஃபிஷ் (சில நேரம் மீனா, சில நேரம் ஃபிஷ் அவர் மூடைப் பொறுத்து). ஃபிஷ் வரைந்ததும் அதைச் சுற்றி தண்ணினா( தண்ணீர்) வரைய வேண்டும்.  தண்ணீர் வரைந்ததும் அதன் மீது போட் ஒன்று விடவேண்டும். மீண்டும் ஏப்பேன், அடுத்து ஃபிஷ், அடுத்து தண்ணினா, அடுத்து போட், மீண்டும் ஏப்பேன்..

இப்படி ஒரு நாளைக்கு நானும் தங்கமணியும் சேர்ந்து ஒரு 100 ஏப்பேனாவது போட்டு விடுவோம்.

என்னவோ தெரியலை, சரியாக வெளியே இருட்டாகி தூங்கப் போகலாம்பா என்று சொல்லும்போது ஒரு புக்கையோ பேப்பர்/பேனாவையோ எடுத்து வைத்துக் கொண்டு படிக்கத் துவங்கிவிடுகிறார். (இந்த சமயத்தில் நான் ஏ, பி, சி, டி எழுத வேண்டும் அவர் ஒவ்வொரு எழுத்தாக சொல்வார்).

தூங்கும்போது எந்திமா (எந்திரன்+அரிமா) பாட்டு போட்டே ஆக வேண்டும். ஐ-பாடில் போட்டு அவர் கையில் கொடுத்துவிட வேண்டும். அவராக ரீவைண்ட் செய்து ரீவைண்ட் செய்து அதே பாட்டை கேட்டுக் கொண்டே இருப்பார்.  கிளிமாஞ்சாரோ பாடத்துவங்கிவிட்டால் தூங்கிவிட்டார் என்று அர்த்தம்.

Wednesday, September 29, 2010

டைமண்ட்-2 (சவால் சிறுகதை)

காமினி கட்டிலில் படுத்திருந்தாள்.

முகத்தில் பொருத்தப்பட்டிருந்த மாஸ்க்கில் துளிர்த்திருந்த நீர்த்திவலைகள் அவள் மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறாள் என்பதை சொல்லிக்கொண்டிருந்தன. அவள் உடல் முழுக்க வயர்கள் பொருத்தப்பட்டு மானிட்டர்கள் பீப்பிக்கொண்டிருந்தன. அவளைச் சுற்றிலும் டாக்டர்கள். தலை முழுக்க சில்வர் பெயிண்ட் அடித்தது போல இருந்த அந்த டாக்டர் உதட்டைப் பிதுக்கினார்.

“நோ மோர் ஹோப். சொந்தக்காரங்களுக்கு சொல்லிவிட்ற வேண்டியதுதான்” விலகி நடந்தார்.

அனைவரும் அவரைப் பின் தொடர, ஒரு டாக்டர் மட்டும் நின்று காமினியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். திறந்திருந்த அவள் கண்கள் அவரைப் பார்த்துக் கெஞ்சுவது போல இருந்தது. சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு விலகி நடந்தார்.

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்

பதினான்காவது மாடியில் இருந்து விழுந்த அவள் கீழேஏஏஏ போய்க் கொண்டே இருந்தாள்.

திடுக்கென்று படுக்கையிலிருந்து எழுந்தாள். முகமெல்லாம் வேர்த்திருந்தது. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மேஜை மீதிருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தாள். நாளை செய்யப் போகும் காரியத்தை நினைத்தால் அவள் அடிவயிற்றில் ஏதோ செய்தது.

அதற்கு மேல் தூக்கம் வராமல் ஜன்னல் வழியாக நிலவைப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

*****************************************************************************

சிவா பேட்டிங் க்ரீஸில் இடது காலை லெக் ஸ்டம்பிலும் வலது காலை ஆஃப் ஸ்டம்பிலும் வைத்து கோணலாக நின்று கொண்டிருந்தான்.

எதிர்ப்புறம் இடது கை பவுலர் ஓவர் த விக்கெட்டில் பந்து போட ஓடி வந்து கொண்டிருந்தான். “சிவா சிவா சிவா” என்ற கோஷம் ஃபோர் லைனில் உட்கார்ந்திருந்த அவன் அணி ஆட்டக்காரர்களிடம் இருந்து பலமாக வந்து கொண்டிருந்தது.

யார்க்கர் லெங்க்த்தில் இடது புறம் வீசப்பட்ட பந்தை அல்ரெடி க்ரீஸில் டீப்பாக நின்று கொண்டிருந்த படியால் ஃபுல் டாஸாக எதிர்கொண்டு மட்டையை சுழற்றி அடித்தான். பந்து மிடில் ஆஃப் த பேட்டில் பட்டு ஃபோர்லைனைத் தாண்டி பறந்து கொண்டிருந்தது. அணியின் மற்ற வீரர்கள் எழுந்து பிட்சை நோக்கி ஓடி வந்தார்கள். இருவர் அலேக்காக சிவாவைத் தலைக்கு மேல் தூக்கி சுற்றினார்கள். அவர்களின் தோளில் உட்கார்ந்திருந்த சிவா தூரத்தில் வந்து கொண்டிருந்த காமினியைத் தெளிவாகப் பார்த்தான். மெதுவாக இறங்கி நண்பர்களை விட்டு விலகி காமினியை நோக்கி நடந்தான்.

*******************************************************************************

“என்ன காமினி? பரந்தாமன் சார் கிட்ட பேசிட்டியா?” கையில் மாட்டியிருந்த கிளவுஸைக் கழட்டிக் கொண்டே கேட்டான் சிவா.

“பேசிட்டேண்டா. ஆனா எனக்கு பயமா இருக்கு...”

“பயப்படாத காமினி. பெர்ஃபெக்ட் ப்ளான். போலீஸை ஏமாத்துறதுக்கும் ரெடி பண்ணியாச்சி. நீ இப்போ போய் பயப்பட்டா எப்பிடி?”

“நீ என்ன ஈஸியா சொல்லிட்ட. ஆனா டயமண்ட எடுத்துட்டு வரப்போறது நான் தான?”

மெதுவாக பைக்குள்ளிருந்து கையை வெளியே எடுத்து “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை" என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா

“ஹேய் என்ன இது?” என்று அவன் கையிலிருந்த துப்பாக்கியை வாங்கிப் பார்த்தாள்.

“போலிஸை ஏமாத்துற திட்டத்துல இதுக்கும் ஒரு முக்கியமான பங்கு இருக்கு”

“எல்லாம் நல்லபடியா நடந்தா சரி” காமினி ஒரு பெருமூச்சை வெளிப்படுத்தினாள்.

“காமினி நீ கவலைப் படாம போ. நாம நினைச்ச மாதிரியே எல்லாம் நடக்கும். நான் இப்போ பசங்க கூட போறேன். மேட்ச் ஜெயிச்சதைக் கொண்டாடணும்னு நினைப்பாங்க”

“சரிடா. ஈவினிங் நாலு மணி மறந்துடாத..”

“ஓக்கே ஓக்கே” துப்பாக்கியை மறுபடி பேண்ட் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டு நண்பர்களை நோக்கி ஓடினான் சிவா.

******************************************************************************

டிங் டாங்..

வாசலில் மணி. கதவைத் திறந்த பரந்தாமனின் முன் மூச்சிரைக்க நின்று கொண்டிருந்தாள் காமினி. அவள் கையில் துண்டால் சுற்றப் பட்டு ஏதோ இருந்தது.

“உள்ள வா காமினி” இரு கதவுகளையும் அகலத் திறந்தார் பரந்தாமன்.

காமினி உள்ளே நுழைந்ததும் கதவைச் சாத்தினார்.

துண்டை விலக்கினாள் காமினி.

"காமினி... வெல்டன்... எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே..." என்று பாராட்டினார் பரந்தாமன்.

“அதை ஏன் சார் கேக்கறீங்க. கொண்டு வரதுக்குள்ள உயிர் போய் உயிர் வந்துருச்சி”

“எப்பிடி போலீஸை ஏமாத்தின?”

காமினி ஏதோ சொல்ல வாயைத் திறக்குமுன் டோர் பெல் மீண்டும் ஒலித்தது.

பரந்தாமனே போய் கதவைத் திறந்தார். வெளியே சிவா, பாஸ்கர், கோபி நின்றிருந்தனர்.

“வாங்கப்பா. வாங்க”

உள்ளே நுழைந்த மூவரும் காமினியைப் பார்த்ததும் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினர்.

“என்னடா சிரிக்கிறீங்க?” காமினி முறைத்தாள்.

“பின்ன என்ன காமினி ஒரு சின்ன மேட்டருக்குப் போய் வேர்த்து விறுவிறுத்துப் போயிட்ட?”

“உங்களுக்குச் சின்ன மேட்டர்டா. எனக்கு எவ்வளவு பெரிய விசயம் தெரியுமா?”

“அதெல்லாம் இருக்கட்டும்பா. எப்பிடி செஞ்சிங்க இதை?” பரந்தாமன் இடைமறித்தார்.

“நான் சொல்றேன்”

“நான் சொல்றேன்” பாஸ்கரும் சிவாவும் சண்டை போட்டனர்.

“யாராவது ஒருத்தர் சொல்லுங்கப்பா”

“நானும் பாஸ்கரும் போலிஸ் பக்கத்துல நின்னுட்டு ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டை போடுற மாதிரி பாவலா பண்ணினோம். அப்போ போலிஸ் பக்கத்துல வந்து என்னடா சண்டை போடுறீங்கன்னு கேட்டான்” சிவா ஆரம்பித்தான்.

“அப்போ கோபி வந்து சிவாவுக்கு சப்போர்ட் செய்யற மாதிரிப் பேசவும் சண்டை பெருசாச்சி. எதுக்கு சண்டை போடுறோம்னே சொல்லாம மூணு பேரும் மாறி மாறி பேசிட்டே இருந்தோம்” பாஸ்கர் தொடர்ந்தான்.

“நிறுத்துங்கடா மூணு பேரும் சண்டைய. முதல்ல எதுக்கு சண்டை போடுறீங்கன்னு சொல்லுங்கன்னு போலீஸ் கத்தவும், சிவா பையில இருந்து துப்பாக்கியை எடுத்து நீட்டினான்” இது கோபி.

“துப்பாக்கியைப் பாத்ததும் போலீஸ் கண்ணு பல்பு போட்டா மாதிரி பளிச்சுனு ஆயிருச்சி. என் கையில இருந்து பிடுங்கப் பார்த்தான். கொஞ்ச நேரம் போக்குக் காட்டிட்டு அவன் கையில குடுத்து பாக்க வச்சோம்”

“இந்த கேப்ல காமினி ஒரு துணியால டைமண்ட மூடி இங்க கொண்டு வந்துட்டா. போலீஸ் தான் துப்பாக்கியப் பிடுங்கிட்டுப் போயிட்டான்” பாஸ்கரின் முகத்தில் உண்மையிலேயே கவலை.

“டாக்டர் சார். இந்தக் கதையைக் கேட்டுட்டு நேரம் வேஸ்ட் பண்ணாம இந்த டைமண்டைக் கொஞ்சம் பாருங்க” காமினி பரந்தாமனை நினைவுக்குக் கொண்டுவந்தாள்.

பரந்தாமன் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த டைமண்டைப் பார்த்தார். இயல்பிலிருந்து மிகவும் மாறி இருந்தது. வழக்கமான டைமண்ட் போலவே இல்லை. மெதுவாக இரண்டு விரல்களால் வருடினார். கையை சிறிது நேரம் டைமண்டின் மீதே வைத்துக் கொண்டிருந்தார்.

திரும்பி உள்ளே போனவர் கையில் ஒரு ஊசியோடு வந்தார். சிவப்பு வண்ணத்தில் ஒரு மருந்தை அதில் ஏற்றியவர் “ஏந்தான் இந்த போலீஸ் பய இப்பிடி இருக்கானோ? ஆமா அவனுக்கு ஏன் போலிஸ்னு பேரு வந்திச்சி?”

“அவன் போலீஸ் ஆகனும்னு ரொம்ப கஷ்டப்பட்டு பிராக்டிஸ் எல்லாம் செஞ்சான் சார். கடைசியில ஒரு நாய் கடிச்சி தப்பிச்சி ஓடும்போது கீழ விழுந்து கால் ஒடிஞ்சதால போலீஸ்ல சேர முடியாமப் போயிடுச்சி. அதனால பைத்தியமாயிட்டான். தெருவுல போற ஒரு நாயை விடமாட்டான். போலீஸ் மாதிரி ஒரு விசில் வச்சி அடிச்சிக்கிட்டே இருக்கிறதால போலீஸ் போலீஸ்னு கூப்புடுறோம்” சிவா வரலாறை சொல்லி முடித்தான்.

பேசிக்கொண்டிருக்கும் போதே டைமண்டின் கழுத்துக்கீழ் ஊசியைக் குத்தி அந்த மருந்தை உள்ளே ஏற்றினார். காமினி சீராக டைமண்டின் முதுகைத் தடவிக் கொடுத்துக் கொண்டே இருந்தாள்.

“நல்ல நேரத்துல கொண்டு வந்தீங்க. இன்னும் ஒரு நாள் விட்டிருந்தா செத்தே போயிருக்கும். சின்னப் பசங்களா இருந்தாலும் பொறுப்பா தெரு நாய எல்லாம் காப்பாத்துறீங்க. பெருசானப்புறம் பெரிய சமூக சேவகர்களாவீங்க” கைகளைக் கழுவிக்கொண்டே பரந்தாமன் சொன்னார்.

நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.