Wednesday, January 6, 2010

உறவுகள் 03

விமானம் ஹீத்ரு விமான நிலையத்தின் மேல் வட்டமடித்துக் கொண்டிருந்தது. ஜன்னல் வழியே தேம்ஸ் நதியை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சுசிலா. ஒரே மகன் ரமேஷ் வீட்டுக்கு அவன் அமெரிக்கா போய் நான்கு வருடங்களுக்குப் பிறகு போகிறார்கள். மருமகள் முழுகாமல் இருக்கிறாள். கல்யாணம் ஆகி ஐந்து வருடம் கழித்து ஒரு வழியாக உண்டாகி விட்டாள். 


ரமேஷ் அவளை காதலித்து கல்யாணம் கட்டிக் கொண்டான். இவர்களுக்கு முதலில் சம்மதம் இல்லை. ஒரே மகன் என்பதால் வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டார்கள். பெற்றோர் பார்த்து திருமணம் செய்யும் பிள்ளைகளே கல்யாணத்துக்குப் பிறகு மனைவி சொல்லே மந்திரம் என்று போய் விடுகிறார்கள். இவனோ காதல் திருமணம். கேட்கவா வேண்டும்? 


இப்போது மருமகளுக்குப் பிரசவ நேரத்தில் உதவியாக இருக்கத்தானே அழைத்து வருகிறான். மாமியார் போய் மருமகளுக்குப் பணிவிடை செய்ய வேண்டியிருக்கிறது. எல்லாம் காலக் கொடுமை. 


விமானம் தரையிறங்குவதற்கான அறிவிப்பை கேப்டன் ஒலிபெருக்கியில் தெரிவித்துக் கொண்டிருந்தார்.


“என்னங்க, லண்டன்ல எறங்குற எடத்துல வீல் சேர் இருக்கும்னு ரமேஷ் சொன்னானே இருக்குமா?”


“இருக்கும் இருக்கும். நீ கவலைப் படாத”


விமானம் தரையிறங்கி நிலைக்கு வந்ததும் மற்ற பிரயாணிகள் அவரவர் பெட்டிகளை எடுத்துக் கொண்டு வெளியேறினார்கள். சிறிது நேரம் கழித்து ஒரு விமானப் பணியாளர் உள்ளே வந்து “கேன் யூ வாக்?” என்று கேட்டாள்.


சுசிலா கணவர் ராகவனைப் பார்த்தாள். 


“யெஸ்”


“தென் ப்ளீஸ் கம் அவுட் ஆஃப் தி ஏர் க்ராஃப்ட். ஐ ஹாவ் எ வீல் சேர் ஃபர் யு”


இருவரும் மெதுவாக எழுந்து அவர்கள் பெட்டியை எடுத்துக் கொண்டு அந்த பெண்ணை தொடர்ந்தனர். 


சுசிலாவின் கை பிடித்து வீல்சேரில் அமர வைத்த அந்தப் பெண் வீல் சேரைத் தள்ளிக் கொண்டு ஒரு இடத்துக்கு வந்து அங்கே நிறுத்தி விட்டு


“ப்ளீஸ் வெயிட் ஹியர். ஐ வில் செண்ட் சம் ஹெல்ப் டு கெட் டு யுர் நெக்ஸ்ட் டெர்மினல். டோண்ட் கோ எனிவேர்” என்று சொல்லிவிட்டு கூட்டத்தில் சென்று மறைந்தாள்.


“என்னங்க சொல்றா அவ”


“வேக வேகமா பேசிட்டாடி. எனக்கு ஒன்னும் புரியலை. எதோ ஹெல்ப்புனு கேட்டுச்சி. காசு கேட்டிருப்பாளோ என்னவோ. குடுக்குறதுக்குள்ள ஓடிப் போயிட்டா”


“இப்ப என்னங்க பண்றது. எப்பிடி போறது?”


“தெரியலடி. ரமேஷ் வேற அவுங்களே கொண்டு போய் விட்டுடுவாங்கன்னு சொன்னான். இவ என்னடான்னா இங்கயே விட்டுட்டுப் போயிட்டா”


“ஐயயோ பயமா இருக்குங்க. அடுத்த ப்ளேனுக்கு எவ்வளவு நேரம் இருக்கு?”


“இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கு. வா அங்க இருக்குற சேர்ல போய் கொஞ்ச நேரம் உக்காரலாம்”


இருவரும் சிறிது தூரம் நடந்து அங்கே போடப் பட்டிருந்த நாற்காலிகளில் தூணுக்குப் பின்புறம் மறைவாக இருந்த நாற்காலியில் அமர்ந்தனர். 


“உக்காந்துட்டே வந்தது கால் வலிக்குது” முன்னால் இருந்த மேஜையில் காலை நீட்டிய சுசிலா காலை தானே மெதுவாகப் பிடித்து விட்டுக் கொண்டாள். 


“ஆமா உனக்கு நடந்தாலும் வலிக்கும், உக்காந்தாலும் வலிக்கும்”


“காப்பி குடிக்கணும் போல இருக்கு. எங்கயாவது கெடச்சா வாங்கிட்டு வர்றிங்களா?”


“சரி இங்கயே இரு. வர்றேன்.”


ராகவன் எழுந்து போய் பத்து நிமிடம் கழித்து கையில் ஒரு கோப்பையோடு வந்தார். 


“இந்தா”


“நீங்க வாங்கிக்கலையா?”


“அநியாயம். ஒரு சின்ன காப்பிக்கு அஞ்சி டாலர் வாங்கிட்டான் படுபாவி. இம்புட்டு காசு குடுத்து என்னால குடிக்க முடியாது”


காப்பியை வாங்கி உறிஞ்சினாள் சுசிலா.


“சீக்கிரம் குடிச்சி முடி. நாம ப்ளேன் ஏற வேண்டிய எடத்துக்குப் போக அரைமணி நேரமாவது ஆகும் போல”


“அய்யோ ரொம்ப தூரம் நடக்கணுமா?”


“தெரியல. யாரயாவது கேக்கணும்”


சுசிலாவை அங்கேயே உட்கார வைத்து விட்டு அங்கேயும் இங்கேயும் அலைந்தார் ராகவன். அரை மணி நேரம் கழித்து ஒரு வழியார் பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் பணியாளர் ஒருவரை அழைத்து வந்தார். 
அந்தப் பணியாளர் சுசிலாவைப் பார்த்ததும், கையில் இருந்த வயர்லெஸ்ஸில் யாரையோ அழைத்து என்னவோ சொன்னாள்.


“ஐ கால்ட் ஃபர் ஹெல்ப். ப்ளீஸ் வெயிட் ஹியர்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள். சிறிது நேரத்தில் ஒரு கோல்ஃப் கார் வந்தது. இவர்கள் இருவரையும் ஏற்றிக் கொண்டு எங்கெங்கோ சுற்றி ஒரு அரை மணி நேரத்தில் அவர்கள் ஏற வேண்டிய கேட்டுக்கு கொண்டு சென்று விட்டது. 
இருவரும் வேக வேகமாக விமானத்துக்குள் சென்று அமர்ந்தனர்.


“படுபாவிங்க. கடைசி நேரத்துல கொண்டு வந்து விடுறாய்ங்க. படபடன்னு வந்துருச்சி” ராகவன் பொறுக்க மாட்டாமல் புலம்பிக் கொண்டிருந்தார்.


“சரி விடுங்க. அதான் பிடிச்சிட்டோமே”


விமானம் கிளம்பி வானத்தை எட்டியதும் பணிப் பெண்கள் கொடுத்த ஏசியன் வெஜிட்டேரியன் மீலை சாப்பிட்டு விட்டு கண்ணசந்தார்கள்.
***************************************************************************************
விமானம் நியூ யார்க் ஜே.எஃப்.கே விமான நிலையத்தில் இறங்கியது. லண்டன் போலவே இங்கும் ஒரு பணிப் பெண் வந்து சுசிலாவை வீல் சேரில் வைத்து அழைத்துச் சென்று இம்மிக்ரேசனில் வரிசையில் நிற்காமல் நேராக ஒரு அதிகாரி முன் நிறுத்தினாள்.


அதிகாரி நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாகப் பேசினான்.


“வேர் ஆர் யூ கோயிங்?”


“மை சன் ஹவுஸ்”


“வேர் இஸ் ஹிஸ் ஹவுஸ்?”


“ராச்சஸ்டர்”


“ஹவ் லாங் யூ வில் பி ஹியர்?”


“த்ரீ மன்த்ஸ்”


“டு யூ ஹாவ் த டாகுமெண்ட்ஸ் யுவர் சன் கேவ்?”


“வாட் டாகுமெண்ட்?”


“தி ஒன்ஸ் யு டுக் டு கன்சுலேட்”


“நோ ஐ டோண்ட் ஹேவ்”


“டு யூ ஹாவ் யுவர் ரிட்டன் டிக்கட்?”


“யெஸ்”


ராகவன் தன் கையில் இருந்த ப்ரிண்ட் அவுட் எடுக்கப்பட்ட டிக்கட்டைக் காட்டினார். 

“ஒக்கே, ப்ரெஸ் யுவர் ரைட் இண்டெக்ஸ் ஃபிங்கர் ஹியர்”வைத்தார்.


“நவ் லெஃப்ட்”


வைத்தார்


“லுக் ஸ்ட்ரெயிட் இண்டு தி கேமரா”


பாஸ்போர்ட்டில் கையில் இருந்த ஒரு சீலைக் குத்தி ஒரு காகிதத்தைப் பின் செய்து கொடுத்தான்.


அதே போல சுசிலாவுக்கும்.


அதே பெண் இருவரையும் வெளியே அழைத்து வந்து அவர்கள் பெட்டியையும் எடுத்து ஒரு தள்ளு வண்டியில் வைத்து ராகவனிடம் கொடுத்து வெளியே அழைத்து வந்தாள்.


“ரமேஷைக் காணோமேங்க?”


“ஆமா. இவன் எங்க போனான்? எப்பவுமே இப்பிடி லேட்டாத்தான் வருவான்”


இவர்களை அழைத்துப் போக யாரும் வரவில்லை என்பதைப் புரிந்து கொண்ட அந்தப் பெண் “டு யூ வாண்ட் டு கால் சம் ஒன்?”


“யெஸ்”


“கிவ் மி த நம்பர்”


அவள் ஒத்திக் கொடுத்த ஃபோனை வாங்கிப் பேசினார் ராகவன். 


“அலோ”
----
“ஆமாம்மா. வந்துட்டோம். ரமேஷைக் காணோம்”
----
“பிரயாணமெல்லாம் நல்லாத்தான் இருந்தது. ஆனா இங்க வந்தா ரமேஷக் காணோமே?”
----
“அப்பிடியா. சரி நாங்க இங்கயே நிக்கிறோம்.”
----
“நீயே அவ கிட்ட பேசு”


ஃபோனை அந்தப் பணிப் பெண்ணிடம் கொடுத்தார். அவள் பேசிவிட்டு “யூ வெயிட் ஹியர். யுவர் சன் வில் பி ஹியர்” என்று சொல்லிவிட்டு போய்விட்டாள்.


சிறிது நேரம் அவர்களின் பொறுமையை சோதித்தபின் ரமேஷின் தலை தெரிந்தது. ராகவன் முகத்தில் ஒரு சந்தோசக் கீற்று. அவர்களை நோக்கி வந்த ரமேஷ்,


“என்னப்பா பிரயாணம் எப்படி இருந்துச்சி?”


“லண்டன்ல தான் ஹெல்ப்புக்கு ஆள் வரவே இல்லை. ரொம்ப கஷ்டமாயிடுச்சி”


“அப்புறம்”


“ரொம்ப நேரம் கழிச்சி அங்க இருந்த ஒருத்தங்கிட்ட சொன்னோம். அவன் தான் ஹெல்ப் பண்ணான்”


“இங்க?”


“இங்க பிரச்சனையே இல்ல. ஃப்ளைட் எறங்கவும் ஆள் வந்து கூட்டிட்டு வந்துட்டா. அம்மாவுக்கு வீல் சேர் இருந்ததால எங்கயுமே க்யூல நிக்கல”


“இம்மிக்ரேசன்ல என்ன கேட்டாங்க?”


“நீ அனுப்புன டாக்குமென்ட்ஸ் கேட்டாங்க”


“குடுத்திங்களா?”


“கொண்டு வரலயே?”


“என்னப்பா கொண்டு வரச் சொன்னேனே?”


“நீ சொல்லல”


“சொன்னேம்பா”


“பொய் சொல்லாத ரமேஷ். நீ சொல்லல. சொல்லியிருந்தா கொண்டு வந்திருப்பேனே?”


“சரி அத விடுங்க. எப்பிடி சமாளிச்சிங்க?”


“ரிட்டன் டிக்கெட் இருக்கான்னு கேட்டான். நல்ல வேளையா நீ அனுப்புன பிரிண்ட் அவுட்ல இருந்திச்சி. அதக் காட்டினதுனால விட்டான்”


“சரி வாங்க அந்த ஏர்ப்போர்ட் போகலாம்”


அம்மா அமர்ந்திருந்த வீல் சேரைத் தள்ளிக் கொண்டு ஐந்தாவது டெர்மினலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.
*******************************************************************************************************************
ராச்சஸ்டர் வந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. போன வாரத்தில் நயகராவுக்குக் கூட்டிச் சென்றார்கள். சுசிலாவால் நடக்க முடியாததால் எல்லா இடங்களுக்கும் வீல் சேரில் வைத்துத் தள்ளிக்கொண்டே சென்றான் ரமேஷ். 


இங்கே வீட்டில் தினமும் சுசிலா சமையல். காலையில் எழுந்து எதாவது இட்லி இல்லையென்றால் தோசை. மதியம் சோறு குழம்பு. இரவு மதியம் வைத்த குழம்பையே வைத்து சோறு.தினமும் இதே வழக்கம்.


அன்று மாலை அலுவலகத்தில் இருந்து வந்த ரமேஷ் - “இன்னிக்கு என்னம்மா சமையல்?”


“தட்டாம்பயறுக் கொளம்புடா”


“என்னம்மா மத்தியானமும் சோறு ராத்திரியும் சோறா?”


“இப்பிடித்தானட வீட்டுல இருக்கும்போது சாப்புடுவ?”“அது இந்தியாம்மா. வெயில்ல நடந்தாலே அதெல்லாம் ஜீரணம் ஆகிடும். இது அமெரிக்கா. இப்பிடி மூணு வேளையும் அரிசி சாப்புட்டா கொழுப்பு வச்சிடும். அதோட மஞ்சுவுக்கு ஜெஸ்டேஷனல் டயபட்டீஸ் இருக்குரதால அரிசி கொறச்சிக்கனும்னு டாக்டர் சொல்லியிருக்காங்க”


“அப்ப ராத்திரிக்கு என்ன செய்யச் சொல்ற?”


“சப்பாத்தி, கோதும தோச, ராகி தோசன்னு எதாவது பண்ணும்மா”


“அப்பாக்கு கோதும ஆகாதுல்லடா”


“உங்களுக்கு மட்டும் ரைஸ் வச்சிக்குங்க”


“எத்தன சமையல் செய்ய?”


“சரிம்மா. நீங்க உங்களுக்கு சமைச்சுங்குங்க. ராத்திரிக்கு மட்டும் நான் மஞ்சுவுக்கு எதாவது செஞ்சி குடுத்துக்குறேன்”


“சரி டா”


சட்டை பட்டன்களை கழற்றிக் கொண்டே பெட்ரூம் செல்ல படி ஏறினான் ரமேஷ்.


(தொடரும்)

9 comments:

வானம்பாடிகள் said...

ம்ம். டென்ஷன கூட்டாதிங்க சாமி.

Anonymous said...

உறவுகள் எல்லாம் சண்டை போடும்போல இருக்கு.

angel said...

m serial mathri ayidathula??

நசரேயன் said...

//மாமியார் போய் மருமகளுக்குப் பணிவிடை செய்ய வேண்டியிருக்கிறது. எல்லாம் காலக் கொடுமை. //

ம்ம்

அது சரி(18185106603874041862) said...

எல்லாம் நல்லாத் தான் இருக்கு....ஆனா, செகண்ட் பார்ட்ல வந்ததே திருப்பி வருதே?? செகன்ட் பார்ட்லயே அம்மாவும் அப்பாவும் ரமேஷோடா ஜே.எஃப்.கேல இருக்காங்க...அப்புறம் எப்படி திருப்பி தேர்ட் பார்ட்ல ஹீத்ரு?? தவிர சில டயலாக்கெல்லாம் அதே செகன்ட் பார்ட்...எடிட்டிங் மிஸ்டேக்கா இல்ல நான் லீனியர் ரைட்டிங்கா?? :0))))

(பி.கு. சுசீலா மேல எனக்கு இப்பவே எரிச்சல் வந்தாச்சி...)

பூங்குன்றன்.வே said...

மியூசிக் ப்ளீஸ்..இது ஒரு தொடர்கதை...உறவுகள் வளர்கதை....

Unknown said...

// அது சரி said...
எல்லாம் நல்லாத் தான் இருக்கு....ஆனா, செகண்ட் பார்ட்ல வந்ததே திருப்பி வருதே?? செகன்ட் பார்ட்லயே அம்மாவும் அப்பாவும் ரமேஷோடா ஜே.எஃப்.கேல இருக்காங்க...அப்புறம் எப்படி திருப்பி தேர்ட் பார்ட்ல ஹீத்ரு?? தவிர சில டயலாக்கெல்லாம் அதே செகன்ட் பார்ட்...எடிட்டிங் மிஸ்டேக்கா இல்ல நான் லீனியர் ரைட்டிங்கா?? :0))))

(பி.கு. சுசீலா மேல எனக்கு இப்பவே எரிச்சல் வந்தாச்சி...)
//

நான் லீனியர் ரைட்டிங் தான். ஒவ்வொரு பாகத்திலயும் ஒவ்வொருத்தர் பார்வைல கதை நகர்த்த முயற்சி செஞ்சிருக்கேன். முதல் பாகம் - மஞ்சு. இரண்டாம் பாகம் - ரமேஷ். மூன்றாம் பாகம் - சுசீலா. ஓவர் லேப் செஞ்சா புரிஞ்சிக்குவீங்கன்னு நெனச்சேன்.

sathishsangkavi.blogspot.com said...

சீக்கிரம் சொல்லுங்க...

malar said...

கதைய படித்து தொலைத்துவிட்டேன் நீங்க தொடரும் என்று போட்டுவிடீர்கள் இனி இதன் தொடர்ச்சியை கணாடிபோட்டு செயரில் உட்கார்ந்து இருக்காரே அவரவச்சு தான் இந்த பதிவை கண்டுபிடிக்க வேண்டும் .