Saturday, January 9, 2010

பிதற்றல்கள் - 1/9/2010

நண்பர் கார்க்கியின் பதிவில் இந்தச் செய்தியைப் படித்துவிட்டு தினமலரில் போய் காணொளியையும் பார்த்தேன். வேதனையாக இருந்தது. ஒரு சக மனிதன் வெட்டப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான், அத்தனை வாகனங்களை வைத்துக் கொண்டு அத்தனை பேரும் ஆம்புலன்ஸுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் தண்ணீர் கொடுக்க முயற்சி செய்தவர் கொடுக்காமலே இருந்திருக்கலாம் - ரத்தம் பட்டுவிடக்கூடாது என்று தூரத்தில் இருந்து வாயில் ஊற்றியதற்குப் பதில். 


சுகாதாரத்துறை அமைச்சர் காஜா மைதீன் வேட்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்து கொண்டுதான் இருக்கிறாரே ஒழிய எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு வேளை கலைஞர் தந்த 108 ஆம்புலன்சால் சரியான நேரத்தில் எஸ்.ஐ யைக் காப்பாற்றி விட்டோம் பாருங்கள் என்று விளம்பரம் செய்து தலைவரிடம் பாராட்டு வாங்க நினைத்தாரோ என்னவோ. அதை விட அந்த மனிதனைத் தொட்டுத் தூக்கி ஒரு வாகனத்தில் ஏற்றி அனுப்பி உயிரைக் காப்பாற்றி ரத்தக் கறை படிந்த சட்டையோடு போய் மக்கள் முன் நின்றிருந்தால் மக்களிடம் பாராட்டு வாங்கியிருக்கலாம். 


அவரைச் சுற்றி இருந்த காவலர்கள் கூட சக காவல்துறை பணியாளருக்காக ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. ஒருவேளை சாதாரணக் குடிமகன் போல கோர்ட்டு கேஸ் என்று அலைய வேண்டியிருக்கும் என்று அவர்களும் நினைத்தார்களோ? 


அதையெல்லாம் விட அந்தக் காவலர் துடித்ததை ஒரு நிமிடம் விடாமல் படமாக்கிவிட்டு, அவரைக் காப்பாற்ற ஒரு முயற்சியும் செய்யாமல் “கோல்டன் ஹவர்” பற்றி வகுப்பெடுக்க தினமலர் நிருபர்களுக்கு எப்படி மனம் வருகிறது? இது பல முறை விவாதிக்கப்பட்ட விசயம் தான் என்றாலும், பத்திரிக்கைகளுக்கு நடந்த நிகழ்வை மக்களுக்கு எடுத்துச் செல்லவேண்டிய பத்திரிக்கை தர்மம் இருந்த போதிலும் சக மனிதனைக் காப்பாற்ற வேண்டிய மனித நேயத்தை விடவா பத்திரிக்கை தர்மம் பெரிது? தினமலரே முயற்சி செய்து அந்த மனிதரைக் காப்பாற்றி இருந்தால் இன்னும் பெயர் வாங்கியிருக்கலாமே, முதல்வன் அர்ஜூன் மாதிரி? 
என்னவோ இதையெல்லாம் பார்க்கும் போது “இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்” என்று பி.எஸ்.வீரப்பா போல கத்தத் தோன்றுகிறது.
*****************************************************************************************
என் கார் பனிச்சறுக்கி அடிபட்டு நான் அதை பாடி ஷாப்பில் விட்டுவிட்டு வந்த அன்று குடுகுடுப்பை அவர்களுடன் தொலைபேசியில் இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அடுத்த நாள் அவரிடம் இருந்து மின்னஞ்சல். அவர் காரும் விபத்துக்குள்ளாகிவிட்டதென்று. அடுத்த நாள் இடுகையும் இட்டுவிட்டார் - அவர் கார் விபத்துக்கு என்னையும் பட்டர்ஃப்ளை எஃபக்டையும். 


நான் உட்கார்ந்து யோசித்ததில் என் துப்பறியும் மூளைக்கு (நன்றி: வானம்பாடிகள் சார்) உதித்தது இதுதான்: இந்த விபத்திற்குக் காரணம் ரோலண்ட் எம்மெரிச் (Director: The Day After Tomorrow), பனிரெண்டாம் வகுப்பு இயற்பியல் பாடம் மற்றும் கார் ஓட்டும் அனைவரும்.


ரோலண்ட் எம்மெரிச் - இவர்தான் தி டே ஆஃப்டர் டுமாரோ படத்தில் பூமி சூடாவதால் வெப்பமான இடங்களில் கூட பனிப்பொழிவு இருக்கும் என்றார். அதனால் டல்லாஸில் பனி விழுந்ததற்கு பூமி சூடானது காரணம்.


பனிரெண்டாம் வகுப்பு இயற்பியல் - கார்பன் - டை - ஆக்சைடு வெப்பக் கதிர்களை (இன்ஃப்ரா ரெட்) பிரதிபலிக்கும். பூமிக்குள் வரும் வெப்பக் கதிர்களை வெளியே செல்ல விடாமல் காற்று மண்டலத்தில் உள்ள கார்பன் - டை - ஆக்சைடு திரும்பத்திரும்ப பிரதிபலிக்கிறது. இதனால் பூமியின் வெப்பம் கூடுகிறது. இதை க்ரீன் ஹவுஸ் எஃபக்ட் என்று கூறுகிறார்கள்.


கார் ஓட்டும் அனைவரும்: நாம் ஓட்டும் கார் வெளிப்படுத்தும் கார்பன் - டை - ஆக்ஸைடு காற்று மண்டலத்தில் கலந்து காற்றில் கார்பன் - டை- ஆக்சைடின் அளவை அதிகப் படுத்துகிறது.
ஆக, என் ஒருவனை மட்டும் குற்றம் சாட்டுவது தவறு. பட்டர் ஃப்ளை எஃபக்டை நமக்கு அறிமுகப் படுத்திய கமல்ஹாசனும், ரவிக்குமாரும் கூட குற்றவாளிகளே. (யப்பா எப்பிடி எல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு)
**********************************************************************************
வேட்டைக்காரன் படம் தமிழ்நாட்டில் ஓடுகிறதா இல்லையா? ஏனென்றால் எங்கள் வீட்டில் சன் டிவி மட்டும் தான் இருக்கிறது. அதில் வேட்டைக்காரன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடுவதாக ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை சொல்கிறார்கள். அதே நேரம் படத்தை புரமோட் செய்வதற்காக, டீலா நோ டீலா நிகழ்ச்சியில் வேட்டைக்காரன் சிறப்பு எபிசோட் வைத்து கண்டிப்பாக 25,000/- ஜெயிக்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி வேட்டைக்காரன் படத்தைப் பார்த்து கேள்விகளுக்குப் பதில் அனுப்பச் சொல்கிறார்கள். 


விட்டால் படம் பார்ப்பவர்கள் வீட்டிற்கு விஜய் டெய்லி தினகரன் பேப்பரை தன் கையால் ஒரு மாதத்திற்கு போடுவார் என்று சொல்வார்கள் போல. 

16 comments:

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

மிகவும் வேதனையான சம்பவம் :(( இதற்க்கு கூடவா இந்தப் பெரிய மனிதர்கள்/வீடியோக் குழுவினர் சற்று குனிந்து நிமிர மாட்டார்கள்? :(( நான் பார்த்த மரணங்களிலேயே மிகவும் வருத்தத்துக்குரியதாக இருக்கிறது :(( துடிப்பவனை தூக்கிக் கொண்டு மருத்துவமனை விரைய மருத்துவ அறிவு எல்லாம் தேவையில்லை.. மனிதாபிமான உணர்வே போதும்.. கார்களை நிறுத்தி போன் செய்ததும் அதனை நின்று படமெடுத்ததுமே பெரிய விஷயம் என்று நினைத்து விட்டார்கள் போலும்..

Anonymous said...

வேதனையாய் இருக்கிறது. :(

தமிழ் உதயம் said...

தமிழ்நாட்டுக்கு இது புதுசு இல்ல. வருஷத்துக்கொரு க்ரூரம் தமிழகத்துல நடக்குது. முந்தைய க்ரூரங்கள். சட்டக்கல்லூரி தாக்குதல்கள், நீதிமன்ற வளாக தாக்குதல்கள், மதுரை தினகரன் அலுவலக தாக்குதல்கள் இப்போ இது

vasu balaji said...

பட்டர்ஃப்ளை எஃபெக்ட் இருக்கோ இல்லையோ பட்டர்ஃப்ளை சூர்யா எஃபெக்ட் இருக்கு. ஒரு இடுகையில ரெண்டு படமா:))

/முந்திரி பன்னீர் செல்வம் இந்த வீடியோவெல்லாம் தாண்டி உடனடியாக தாமதமின்றி சிகிச்சைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்னு சொல்லிட்டார். எனவே தினமலர் வீடியோ உண்மையானதா இல்லையா என கண்டு பிடித்துச் சொல்லும் தார்மீகப் பொறுப்பு முகிலனுக்கு இருக்கு. ஒரு வேளை முடியாட்டி ஜக்கம்மா கிட்ட சரண்டர் ஆவது உத்தமம்.//

கலகலப்ரியா said...

வருத்தத்தை விட கோபம்தான் ஜாஸ்தி வர்றது...! நல்ல பதிவு...

குடுகுடுப்பை said...

என்னத்த சொல்றது.

ஜக்கம்மா

அது சரி(18185106603874041862) said...

அந்த தினமலர் வீடியோ பத்தி நானும் படிச்சேன்...ஆனா, வீடியோவை என்னால பார்க்க முடியும்னு தோணலை...அதனால பார்க்கலை...

கண்ணுக்கு முன்னாடி ஒருத்தர் சாகறதைப் பார்த்துக்கிட்டு சும்மா இருக்கது கொடுமைங்க...ஒரு வேளை இந்த அமைச்சனுங்களும், கலெக்டனும் சுத்தி இல்லாட்டி சுத்தி நின்ன மக்களாவது எதுனா செஞ்சிருப்பாங்க...இந்த பொறுக்கி கும்பல் நின்னதுனால தான் யாருமே எதுவும் பண்ணலைன்னு எனக்கு தோணுது...

இவனுங்க தான் ஜனநாயக காவலர்கள்...கருமம்!...இது மாதிரி ஒரு நாடும், நாட்டு மக்களும் இருந்தா என்ன நாசமா போனா என்ன??

கோடம்பாக்கத்து சி.எம். இன்னைக்கு(ம்) திருவாய் மலர்ந்திருக்காரு...தமிழர்களுக்கு என்னைக்கும் வீழ்ச்சி இல்லையாம்....

அது சரி(18185106603874041862) said...

//
என் கார் பனிச்சறுக்கி அடிபட்டு நான் அதை பாடி ஷாப்பில் விட்டுவிட்டு வந்த அன்று குடுகுடுப்பை அவர்களுடன் தொலைபேசியில் இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அடுத்த நாள் அவரிடம் இருந்து மின்னஞ்சல். அவர் காரும் விபத்துக்குள்ளாகிவிட்டதென்று. அடுத்த நாள் இடுகையும் இட்டுவிட்டார் - அவர் கார் விபத்துக்கு என்னையும் பட்டர்ஃப்ளை எஃபக்டையும்.
//

உங்க கார் ஆக்சிடென்ட் ஆன கோபத்துல நீங்க தான் அவரு காரை ஆள் விட்டு இடிச்சிட்டதா ஒரு வதந்தி உலவுதே, அது உண்மையா?? :0)))

அது சரி(18185106603874041862) said...

//
விட்டால் படம் பார்ப்பவர்கள் வீட்டிற்கு விஜய் டெய்லி தினகரன் பேப்பரை தன் கையால் ஒரு மாதத்திற்கு போடுவார் என்று சொல்வார்கள் போல.
//

ஆமாய்யா...நீங்களே இப்படி புதுசு புதுசா ஐடியா கொடுங்க...அப்புறம் இப்பிடி பண்றாய்ங்களேன்னு நீங்களே பதிவும் எழுதுங்க...

ஏற்கனவே அவய்ங்க தொல்லை தமிழ்நாட்டுல தாங்க முடியலை...நீங்க வேற புதுசு புதுசா ஐடியா குடுத்துக்கிட்டு...கொஞ்சம் சும்மா இருங்க சாமி...உங்களுக்கு புண்ணியமா போவும்...

அது சரி(18185106603874041862) said...

ஆமா, உறவுகள் தொடர் எங்க?? இன்னும் வருமா இல்லை பின் நவீனத்துவனா மாறி முடிக்காமலயே முடிச்சிட்டீங்களா??

Unknown said...

@எல் போர்ட்
@சின்ன அம்மிணி
@தமிழுதயம்
@வானம்பாடிகள் :))
@கலகலப்ரியா கூல்
@குடுகுடுப்பை (ஜக்கம்மா?) :)
@அதுசரி

வருகைக்கும் வேதனையைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி.

Unknown said...

//உங்க கார் ஆக்சிடென்ட் ஆன கோபத்துல நீங்க தான் அவரு காரை ஆள் விட்டு இடிச்சிட்டதா ஒரு வதந்தி உலவுதே, அது உண்மையா?? :0)))
//

நீங்களும் நசரேயனும் ஆட்டோ அனுப்பியதாவும், அமெரிக்கால ஆட்டோ இல்லாததால கார வச்சி இடிச்சிட்டதாவும் கூட ஒரு வதந்தி உலவுதே. அது உண்மையா? :))

Unknown said...

//ஆமாய்யா...நீங்களே இப்படி புதுசு புதுசா ஐடியா கொடுங்க...அப்புறம் இப்பிடி பண்றாய்ங்களேன்னு நீங்களே பதிவும் எழுதுங்க...

ஏற்கனவே அவய்ங்க தொல்லை தமிழ்நாட்டுல தாங்க முடியலை...நீங்க வேற புதுசு புதுசா ஐடியா குடுத்துக்கிட்டு...கொஞ்சம் சும்மா இருங்க சாமி...உங்களுக்கு புண்ணியமா போவும்...
//

உங்க கஷ்டம் புரியுது..

Unknown said...

//ஆமா, உறவுகள் தொடர் எங்க?? இன்னும் வருமா இல்லை பின் நவீனத்துவனா மாறி முடிக்காமலயே முடிச்சிட்டீங்களா??//

அய்யோ வரும்ங்க. நேத்தே அடுத்த பாகம் எழுதியிருக்க வேண்டியது. ஆணி அதிகமாயிட்டதால முடியல. இன்னிக்கி எழுதிருவோம்.

இனி ரெகுலரா செவ்வாய், சனிகள்ல எதாவது தொடர்கதை எழுதலாம்னு இருக்கேன். (கண்டிப்பா உறவுகளை மெகா சீரியலா இழுத்துற மாட்டேன்..)

Chitra said...

பத்திரிக்கைகளுக்கு நடந்த நிகழ்வை மக்களுக்கு எடுத்துச் செல்லவேண்டிய பத்திரிக்கை தர்மம் இருந்த போதிலும் சக மனிதனைக் காப்பாற்ற வேண்டிய மனித நேயத்தை விடவா பத்திரிக்கை தர்மம் பெரிது? ........... its really sad that such things are taken so calmly.

நசரேயன் said...

//நான் உட்கார்ந்து யோசித்ததில் என் துப்பறியும் மூளைக்கு //
அது இருக்கிற இடம் தெரியாமத்தானே இன்னும் இருக்கேன்