Sunday, January 10, 2010

உறவுகள் - 04

03
02
01

மஞ்சு படுக்கையறையில் அமர்ந்து கொண்டிருந்தாள். கீழே சன் டிவியில் மெட்டி ஒலி மறு ஒலிபரப்பு மட்ட மத்தியானத்தில் ஓடிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. மஞ்சுவுக்கு சாதாரணமாகவே டிவி சீரியல்கள் பிடிக்காது. அதுவும் கர்ப்பமான பிறகு அந்த அழுகாச்சி சீரியல்கள் பக்கமே போவதில்லை. ஆனால் ரமேஷின் அம்மா வந்த பிறகு எந்நேரமும் டிவியில் சீரியல் தான் ஓடுகிறது. அதனால் மதிய நேரங்களில் அவள் உலகம் படுக்கை அறைக்குள்ளேயே அடைந்து விடுகிறது.

மதிய சமையலுக்கு இவளால் ஆன - காய்கறி நறுக்குவது, அரிசி களைவது போன்ற - உதவி செய்வாள்.  உணவு தயாரான பின் பனிரெண்டு மணிக்கு சாப்பிட்டு விடுவாள். ரமேஷின் அப்பாவும் அம்மாவும் அவளுடன் சாப்பிட மாட்டார்கள். கேட்டால் பனிரெண்டு மணிக்கெல்லாம் சாப்பிட்டு பழக்கம் இல்லை என்று சொல்லிவிடுவார்கள். சாப்பிட்ட அடுத்த நிமிடம் மேலே அவர்களது பெட்ரூமுக்கு வந்து விடுவாள். பின்னர் ஒரு மூன்று மணியளவில் அவர்கள் இருவரும் மதியத் தூக்கத்துக்காக அவர்களது அறைக்குச் சென்ற பின் இவன் டிவி இருக்கும் ஹாலுக்குப் போய் எதாவது நகைச்சுவை நிகழ்ச்சியோ இல்லை திரைப்படத்தையோ பார்ப்பாள். மாலை 4:30 மணிக்கெல்லாம் ரமேஷ் வந்து நான்கு பேருக்கும் டீ போடுவான். அவன் பெற்றோர்களும் 6:00 மணிக்குக் கீழே வந்து டீ குடித்து விட்டு மறுபடியும் டி.வியில் சீரியல் போட்டுவிடுவார்கள். இதுவே கடந்த இரண்டு வாரங்களாக மஞ்சுவின் வழக்கமாகிவிட்டது.

அந்த வீக் எண்ட் நயகரா சென்றார்கள். ரமேஷின் அம்மாவுக்கு ஆர்த்ரட்டிஸ் இருப்பதால் நீண்ட தூரம் நடக்க முடியவில்லை. அப்படியே நடந்தாலும் வேகமாக நடக்க முடியவில்லை. அமெரிக்காவுக்கு சுற்றுலா வரும் அனைவரும் தவறாமல் பார்க்கும் இடம் நயகரா. அதை தன் பெற்றோருக்குக் காட்டிவிட வேண்டும் என்ற ரமேஷின் ஆர்வம் அவன் ஒவ்வொரு இடத்தையும் விவரிப்பதில் தெரிந்தது. ஆனால் ரமேஷின் பெற்றோர் அதில் ஆர்வம் காட்டியது போலத் தெரியவில்லை. அதிலும் ரமேஷ், அவன் அம்மாவை வீல் சேரில் வைத்து எல்லா இடங்களுக்கும் தள்ளிக் கொண்டே சென்றான். அதைக் கூட அவர்கள் அப்ரிசியேட் செய்ததாகத் தெரியவில்லை. எப்படா வீட்டுக்குப் போவோம் என்பது போலத்தான் அவர்கள் அங்கிருந்தார்கள். ரமேஷுக்கு அது ஏமாற்றமோ இல்லையோ, மஞ்சுவுக்குப் பெரிய ஏமாற்றம். அவள் அம்மாவுக்கு ஃபோன் செய்து இதைச் சொல்லி அவள் ஏக்கத்தைத் தணித்துக் கொண்டாள். ரமேஷிடம் அதைப் பற்றிப் பேசி - ஒருவேளை அவன் வேதனையில் இருந்தால் - அதை அதிகமாக்க விரும்பவில்லை.

அன்று இரவு ரமேஷ் அலுவலக வேலை சிறிது இருந்ததால் முடித்துவிட்டு கொஞ்சம் லேட்டாகப் படுக்கைக்கு வந்தான். மஞ்சு தூங்காமல் அவனுக்காகக் காத்திருந்தாள்.

“ஹேய் குட்டி. இன்னுமா தூங்கல?”

“இல்ல ரமேஷ். உங்கிட்ட பேசணும். அதுக்காக வெயிட்டிங்”

“என்னம்மா பேசணும்?”

“இன்னிக்கு நான் டாக்டர்கிட்ட செக்கப் போயிட்டு வந்தேனே அதப்பத்தி கேட்டியா?”

“சாரிம்மா. வேலை பிஸியில மறந்துட்டேன். என்ன ஆச்சி?”

“போ உனக்கு எம்மேலயும் என் பையன் மேலயும் அக்கறையே இல்ல. அதான் நீ மறந்துட்ட”

“அப்பிடியில்லடா. கழுத்து வரைக்கும் வேலை. அதுனால கொஞ்சம் மறந்துட்டேன். ரொம்ப சாரிடா.”

“என்கிட்ட சாரி கேட்டா மட்டும் பத்தாது. உன் பையன் கிட்டயும் கேளு.”

“சரி கேட்டுடுறேன்” குனிந்து வயிற்றில் காதை வைத்தான். “மன்னிச்சுருங்க சார். தெரியாமப் பண்ணிட்டேன். அம்மா...” என்று கன்னத்தைப் பிடித்துக் கொண்டு எழுந்தான்.

“என்னாச்சு”

“உம்பையன் என்ன ஒதக்கிறான்”

“ஹ்ம்ம் நாந்தான் ஒதக்கச் சொன்னேன்.”

“சரிம்மா. டாக்டர் என்ன சொன்னாங்க?”

“ஜெஸ்டேஷனல் டயபடிஸ் இருக்கறதால வொயிட்ஸ் குறைக்கச் சொல்லியிருக்காங்க”

“இதுதான் பழைய நியூஸ் ஆச்சே”

“ஆமா. ஆனா உங்கப்பாம்மா வந்ததுல இருந்து டெய்லி டின்னருக்கு சோறு தான் செய்றாங்க?”

“அட ஆமாம். நான் கூட கவனிக்கலை பாரு. நாளைக்கே அம்மாக்கிட்ட பேசிடுறேன்”

“பாத்து சொல்லு ரமேஷ். அவங்க கோச்சிக்கப் போறாங்க”

“சேச்சே எங்கம்மா அப்பிடியெல்லாம் செய்ய மாட்டாங்க. புரிஞ்சிப்பாங்க. சரி இப்ப தூங்கு. இவ்வளவு நேரமெல்லாம் முழிச்சிருக்கக் கூடாது. குட் நைட்” அவள் நெற்றியில் மெலிதாக ஒரு முத்தமிட்டான்.

மஞ்சுவும் அவனைக் கட்டிக் கொண்டு கொஞ்ச நேரத்தில் தூங்கிப் போனாள்.

********************************************************************************
அன்று சன் டிவியில் ஏதோ நல்ல படம் போட்டதால் இருவரும் தூங்கப் போகாமல் கீழே இருந்து படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அது மஞ்சுவுக்குப் பிடிக்காத படம் என்பதால் அவள் மேலே தூங்கப் போய் விட்டாள்.
அன்று மாலை அலுவலகத்தில் இருந்து வந்த ரமேஷ் - “இன்னிக்கு என்னம்மா சமையல்?”

“தட்டாம்பயறுக் கொளம்புடா”

“என்னம்மா மத்தியானமும் சோறு ராத்திரியும் சோறா?”

“இப்பிடித்தானட வீட்டுல இருக்கும்போது சாப்புடுவ?”

“அது இந்தியாம்மா. வெயில்ல நடந்தாலே அதெல்லாம் ஜீரணம் ஆகிடும். இது அமெரிக்கா. இப்பிடி மூணு வேளையும் அரிசி சாப்புட்டா கொழுப்பு வச்சிடும். அதோட மஞ்சுவுக்கு ஜெஸ்டேஷனல் டயபட்டீஸ் இருக்குரதால அரிசி கொறச்சிக்கனும்னு டாக்டர் சொல்லியிருக்காங்க”

“அப்ப ராத்திரிக்கு என்ன செய்யச் சொல்ற?”

“சப்பாத்தி, கோதும தோச, ராகி தோசன்னு எதாவது பண்ணும்மா”

“அப்பாக்கு கோதும ஆகாதுல்லடா”

“உங்களுக்கு மட்டும் ரைஸ் வச்சிக்குங்க”

“எத்தன சமையல் செய்ய?”

“சரிம்மா. நீங்க உங்களுக்கு சமைச்சுங்குங்க. ராத்திரிக்கு மட்டும் நான் மஞ்சுவுக்கு எதாவது செஞ்சி குடுத்துக்குறேன்”

“சரி டா”

சட்டை பட்டன்களை கழற்றிக் கொண்டே பெட்ரூம் செல்ல படி ஏறினான் ரமேஷ்.

"மஞ்சு இன்னுமா தூங்கிக்கிட்டு இருக்க?”

“வா ரமேஷ். இல்ல முழிச்சிட்டுத்தான் இருக்கேன். நீ கீழ உங்கம்மாக்கிட்ட பேசுனது கேட்டுச்சி.”

“சரிம்மா. நான் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டுக் கீழ போயி உனக்கு சப்பாத்தி செய்யறேன்”

“நான் ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா ரமேஷ்?”

“பரவாயில்லடா. நான் சமாளிச்சிக்குறேன்”

இருந்தாலும் மனசு கேட்காமல் கீழே வந்த மஞ்சு ரமேஷுக்கு காய்கறி நறுக்கிக் கொடுத்தாள். ரமேஷ் பம்பரமாகச் சுழன்று சப்பாத்தியும் குருமாவும் செய்தான். ரமேஷின் அம்மா அவன் வேலை செய்ததைப் பார்த்த பார்வை மஞ்சுவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அன்று இரவு ரமேஷிடம் அதைச் சொல்லி வருத்தப் பட்டாள்.

****************************************************************************

அடுத்த நாள் சமையலுக்கு உதவி செய்துவிட்டு பனிரெண்டு மணியானதும் வழக்கம் போல சாப்பாடு போட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் மஞ்சு.

“ஏம்மா. எப்பவும் ரமேஷ் தான் சமைப்பானா?”

“அப்பிடியில்லத்தே. நான் ப்ரக்னண்ட் ஆனதுல இருந்துதான் சமைக்கிறாப்ல. அதுக்கு முன்னாடி நாந்தான் சமைப்பேன்”

“அப்பிடித்தெரியலையே?”

“அய்யோ அப்பிடியெல்லாம் இல்லத்தே. எனக்கு சமைக்கிற வாசம் ஒத்துக்கல. அதுனாலதான் ரமேஷ் சமைக்கிறாப்ல. வேலைக்குப் போகும்போது கூட ரமேஷ்தான் சமைக்கும்”

“என்னவோப்பா. ஆமா எதுக்கும்மா நீ சாப்டதும் மேல போயிடுற?”

“இல்லத்த, நீங்க சீரியல் பாக்குறீங்க. எனக்கு அழுகை சீரியல் பாக்கப் பிடிக்கிறதுல்ல. அதுனால மேல போயிடுறேன்”

“நாங்க ஒன்னப் பாத்துக்குறதுக்காக அங்கிருந்து வந்துருக்கோமே. நாங்க சாப்டோமா கொண்டோமான்னு கேக்குறதில்லையா? பக்கத்துல இருந்து பரிமாறக் கிரிமாற செஞ்சாதான எங்களுக்கும் சந்தோசமா இருக்கும்?”

“பரிமாறக்கூடாதுன்னு எல்லாம் இல்லத்தே. சாப்டதும் கொஞ்ச நேரம் அப்பிடியே கண்ணசரணும் போல இருக்கும். நீங்க என்கூட சாப்டிங்கன்னா, நான் பரிமாறுவேன்”

“அதுக்காக உங்கூட சீக்கிரமாவே சாப்புடனுமாக்கும்? நீ காத்திருந்து எங்கக்கூட சாப்புடக்கூடாது?”

“இல்லத்தே, நேரத்துக்கு சாப்டணும். பன்னெண்டு மணிக்கு சாப்டாத்தான் மூணு மணிக்கு ஜூஸ் எதாவது குடிக்க சரியா இருக்கும்?”

“எதாவது காரணஞ்சொல்லுங்க ரெண்டு பேரும். எங்கள யாரும் கண்டுக்கிட்டதாவேத் தெரியலை. நாங்க பாத்து வச்சிருந்தா இப்பிடியெல்லாம் நடந்திருக்குமா? உலகத்துல இல்லாதது என்னத்தக் கண்டானோ உங்கிட்ட”

அதற்கு மேல் மஞ்சுவுக்கு அங்கே நிற்கப் பிடிக்கவில்லை. விடுவிடுவென்று மேலே ஏறி வந்தாள். படுக்கையில் விழுந்து அழுதாள். ஃபோனை எடுத்து ரமேஷிடம் இதைப் பற்றிக் கதைத்தாள். அவன் “விட்டுத்தள்ளும்மா. வயசானவங்க அப்பிடித்தான் பேசுவாங்க. ரொம்ப ஓவராச்சுன்னா நான் அவங்கக்கிட்ட பேசுறேன்” என்று சொல்லி ஆறுதல் படுத்தினான். ஆதங்கம் கொஞ்சம் தணிந்தாலும் தன் அம்மா வந்திருந்தால் இது நடந்திருக்குமா? என்ற எண்ணம் அவள் மன அழுத்தத்தை அதிகரிக்கவே செய்தது.

(தொடரும்)

9 comments:

Anonymous said...

// ரமேஷின் அம்மா அவன் வேலை செய்ததைப் பார்த்த பார்வை மஞ்சுவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.//

சொந்த அனுபவம் போலிருக்கு :)

Chitra said...

எதாவது காரணஞ்சொல்லுங்க ரெண்டு பேரும். எங்கள யாரும் கண்டுக்கிட்டதாவேத் தெரியலை. நாங்க பாத்து வச்சிருந்தா இப்பிடியெல்லாம் நடந்திருக்குமா? உலகத்துல இல்லாதது என்னத்தக் கண்டானோ உங்கிட்ட”
................அடடா, திருந்தற மாதிரி கதையில் வச்சுடுங்க சார், ப்ளீஸ்.

Unknown said...

@சின்ன அம்மிணி :)

@சித்ரா - அப்பிடி வச்சா அது அப்புறம் ரமணிசந்திரன் கதை மாதிரி ஆகிடுமில்லையா? :))))

பின்னோக்கி said...

இந்த மாதிரி நேரத்துல கதாநாயகி அம்மா அப்பாவுடன் இருக்குறதுதான் நல்லது.

கலகலப்ரியா said...

vote மட்டும் போட்டுடுறேன்... வீக்கெண்ட்ல சேர்த்து படிச்சுக்கறேன்... அவ்வ்வ்வ்...

vasu balaji said...

அளுவாச்சி சீரியல் மாதிரி சீன் சொல்லிட்டு அளுவாச்சி சீரியல் புடிக்காதுன்னு சொல்லவுடுறது நல்லால்ல ஆமா:))

நசரேயன் said...

சொந்த அனுபவமா ?

அது சரி(18185106603874041862) said...

//
"எதாவது காரணஞ்சொல்லுங்க ரெண்டு பேரும். எங்கள யாரும் கண்டுக்கிட்டதாவேத் தெரியலை. நாங்க பாத்து வச்சிருந்தா இப்பிடியெல்லாம் நடந்திருக்குமா? உலகத்துல இல்லாதது என்னத்தக் கண்டானோ உங்கிட்ட”
//

இதுக்கு பேரு தான் சனியனை கூப்பிட்டு சொந்த செலவுல தங்க வைக்கிறதுன்னு சொல்றது....

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

எல்லாரும் சுசீலாவ மட்டும் குறை சொல்லிட்டு இருக்கும் போது நான் கூடுதலா மஞ்சு கிட்டயும் ரமேஷ் கிட்டயும் குறை காணறேன் :)))))