Friday, January 8, 2010

பாதுகாப்பு

அந்த காரைச் சுற்றி கூட்டம் கூடிவிட்டிருந்தது. 


“அட்றா அவன”
“சாவடிங்கடா”
“ஏய் விடுங்கப்பா பாவம் பைத்தியம்”
“இவனுக்கு இதே பொழப்பாப் போச்சி”


கலவையான குரல்கள் கூட்டத்தினடையே கேட்டன. 


போகாத.. போகாத...” என்று அந்தக் காரின் பம்பரைக் கட்டிப் பிடித்து அழுது கொண்டிருந்தான். கிழிந்த அழுக்கான சட்டை. ஒரு நைந்து போன பேண்ட். முகத்தில் பல மாத தாடி. தலைமுடியில் இருந்த சிக்கு குளித்து ஆண்டுக்கணக்கில் ஆகியிருக்கும் என்று சொல்லியது. 


காரை ஓட்டிவந்தவன் அவன் தோளைப் பிடித்து இழுத்து விலக்க முயற்சி செய்து கொண்டிருந்தான். காரின் முன்சீட்டில் அவன் மனைவி மடியில் குழந்தையுடன் கண்களில் பயம் காட்டி உட்கார்ந்திருந்தாள்.
**********************************************************************************
அண்ணே இது மூணாவது பாட்டில்ண்ணே. போதும்ணே. ரொம்ப தூரம் போகணும்னே” அந்தச் சாரயக்கடையில் கிட்டத்தட்ட காலில் விழுந்து கெஞ்சிக் கொண்டிருந்தான் கிளீனர்.


டேய் சும்மாருடா. இந்தப் பக்கம் வர்றதே மாசத்துல ஒரு நாளு தான். இந்தியாலயே சூப்பர் சரக்கு இங்கதா கிடைக்கிது. சந்தோசமா அடிக்க விடுவியா? போ போ. போய் கண்ணாடியத் தொடச்சி வையி. நான் பத்து நிமிசத்துல வர்றேன்


இந்தாளுக்கு இதே வேலையாப் போச்சி. என்னிக்குப் போய் மரத்துல சொருகப்போறானோ தெரியல. உசுரக் கையில பிடிச்சிட்டே போக வேண்டியதாயிருக்கு. என்னிக்கு விடிவுகாலம் வரபோவுதோ தெரியல” என்று புலம்பிக்கொண்டே வாளியில் தண்ணீர் எடுத்து கண்ணாடியில் ஊற்றி நியூஸ் பேப்பரால் துடைக்கத் தொடங்கினான்.


அரை மணி நேரம் கழித்து கையில் ஒரு பாட்டிலுடன் தள்ளாடிக் கொண்டே வந்த டிரைவர் லாரியில் ஏறி ஸ்டார்ட் செய்தான்.
*****************************************************************************
ஸ்டீரியோவில் ஏ.ஆர்.ரஹ்மான் நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் என்று உருகிக் கொண்டிருந்தார். ஸ்டியரிங்கை ஒரு கையால் வளைத்துக் கொண்டு ஸ்டைலாக ஓட்டிக் கொண்டிருந்தான் சுந்தர். அருகில் அவன் மனைவி ஊர்வசி கையில் இருந்த ஸ்வாதிக்கு புட்டியில் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள்.


சுந்தர் இதே வேகத்துல போனா நாளைக்குக் காலைல தான் ஊருக்குப் போய் சேர முடியும்”


ஊரு, ரோடு மோசமா இருக்கு. இந்தக் கார்ல இவ்வளவு வேகந்தான் போக முடியும். இல்லன்னா காரு படுத்துரும். உங்கப்பாவ டாடா சஃபாரி வாங்கிக் குடுக்கச் சொல்லு. வேகமா போலாம்”


எங்கப்பா எதுக்கு வாங்கிக் குடுக்கணும்? நீங்க சம்பாதிச்சி வாங்குங்க”


என் சம்பாத்தியத்துல இவ்வளவு தான்”


புட்டியை குழந்தையின் வாயிலிருந்து எடுத்து மூடி போட்டு காலுக்குக் கீழிருந்த பையில் வைத்தாள். “பாப்பா தூங்கிட்டா” என்றவாரு நன்றாக குழந்தையை மடியில் கிடத்தி காலை லேசாக ஆட்டியவாறு சாலையை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள்.
****************************************************************************************
அவன் சாலை ஓரத்தில் இருந்த குப்பைக் கூளத்துக்கு நடுவில் உட்கார்ந்து அந்தச் சாலையில் போகும் வாகனங்கள் அனைத்தையும் கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தான். 


பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கிப் பற்ற வைத்துவிட்டு “யாருங்க இது, இங்க உக்காந்து போற வர்ற வண்டியவே பாத்துட்டு இருக்கான்” 


“கிறுக்குப் பயங்க. மூணு மாசமா இங்க தான் இருக்கான். போற வர்ற காரை எல்லாம் உத்து உத்து பாத்துட்டே இருப்பான். திங்கணும்னா இங்க வந்து நிப்பான். நான் எதாவது பன்னு, பொறன்னு குடுப்பேன். வாங்கித் தின்னுட்டுப் போயிருவான். இது வரைக்கும் எதுவும் தொந்தரவு இல்ல”


சாலை முனையில் அந்தக் கார் திரும்பியது. ஓட்டியவன் கையில் செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான். அருகில் மனைவி அவள் மடியில் குழந்தை கையை நீட்டி அம்மாவின் கன்னத்தை தடவிக் கொண்டு வந்தது. கார் கடைக்கருகில் வரும்போது ஸ்பீட் பிரேக்கருக்காக வேகம் மட்டுப் பட்டது. 


இவ்வளவு நேரம் அந்தக் குப்பைக்கு நடுவில் உட்கார்ந்திருந்த அவன் சடாரென்று காருக்கு முன் பாய்ந்தான். 


போகாத, போகாத” என்று கத்தியவாறு காரின் பம்பரைக் கட்டிக்கொண்டான். 


காரை ஒட்டியவன் காரை விட்டிறங்கி அவன் தோளைப் பிடித்து “டேய் கிறுக்கா. விடுடா என் கார” என்று இழுத்தான்.


அந்தக் காரைச் சுற்றி கூட்டம் கூடிவிட்டிருந்தது.
***************************************************************************
லாரி அந்த ஒற்றைச் சாலையில் சற்றுத் தள்ளாடி தள்ளாடிப் போய்க் கொண்டிருந்தது.


டேய் மருது. இன்னும் ஒரு கிலோ மீட்டர்தான். அதுக்குள்ள மெயின் ரோடு வந்துடும். அப்புறம் அழுத்துனா மூணு மணி நேரத்துல சேலம் போயிடலாம்.”


அண்ணே கொஞ்சம் மெதுவாவே ஓட்டுங்கண்ணே. லேட்டாப் போனாலும் பரவாயில்ல”


போடா பேப்பயலே. லேட்டாப் போனா நாளைக்கி சவாரி எடுக்க லேட்டயிடும்டா. 10 மணிக்குள்ள சேலம் போயிட்டா ஒரு தூக்கத்தப் போட்டுட்டு நாளிக்கி காலைல எட்டு மணிக்கெல்லாம் அடுத்த சவாரி கிளம்பிடலாம்”


என்னவோண்ணே, தண்ணி அடிச்சிருக்கிங்க. அதுக்குத்தான்..”


அவன் முடிப்பதற்குள் இடை மறித்தான். “டேய் உனக்குத்தான் தெரியுமில்ல. நான் எவ்வளவு அடிச்சாலும் ஸ்டெடின்னு”


லாரி சாலையை விட்டு சற்றே இறங்கி ரோட்டோரக் குழியில் இறங்கி ஏறியது.


“அண்ணே பாத்து..”


“பாத்துத்தாண்டா போறேன்” பீடியை கடைசியாக ஒருமுறை வலித்துவிட்டு வெளியே விட்டெறிந்தான்.
******************************************************************************
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்று ஸ்டீரியோவுடன் சேர்ந்து பாடிக் கொண்டிருந்தான் சுந்தர். 


செல்போன் ஒலித்தது.


பைக்குள் கையை விட்டு எடுத்து ஹலோவினான்.


“மச்சி நான் கோகுல்”


“சொல்லுடா கோகுல். என்ன விசயம்? ”


“இன்னிக்கு ராத்திரி மேட்ச் பாக்க வர்றியாடா?”


“டேய் இல்லடா. நான் இப்போ ஊருக்குப் போயிட்டிருக்கேன்.”


“என்னடா திடீர்னு? எந்த ட்ரெயின்?”


“ட்ரெயின் இல்லடா. கார்லயே”


“கார்லயேவா? நீ மட்டும் தனியாவா இல்ல ஃபேமிலியோடவா?”


“ஊர்வசி, ஸ்வாதி எல்லாருந்தாண்டா”


“டேய் என்னடா இவ்வளவு லாங் ட்ரைவுக்கு ஃபேமிலியோடவா?”


“அதுனால என்னடா. அதெல்லாம் தெளிவா ஓட்டிட்டுப் போயிடுவேன்”


“சரிடா அட்லீஸ்ட் கார் சீட்டாவது யூஸ் பண்றியா?”


“இல்லடா. அது சரிப்பட்டு வரல. அது வீட்டுல தூங்குது.”


“அடப் பாவி. பாத்து மெதுவாவே போடா. ஊருக்குப் போயிட்டு கூப்பிடு.”


“சரிடா”


செல்லை அணைத்து டேஷ் போர்டின் மேல் வைத்தான்.
*********************************************************************************
அவன் பார்வை இல்லாத எதையோ வெறித்துக் கொண்டிருந்தது. 


“என்னங்க. உங்க தம்பியை எத்தன நாளைக்கு இங்க வச்சிப் பாத்துட்டு இருக்கப் போறிங்க?”


“அவனுக்கு சரியாகற வரைக்கும் இங்க தாண்டி இருக்கனு”


“என்னங்க நீங்க. பிள்ளக இருக்குற எடத்துல இப்பிடி பைத்தியத்த வச்சிக்கிட்டு இருக்க முடியுமா? நாளப்பின்ன எதாவது செஞ்சிட்டான்னா?”


“அடியேய் அவன் குடும்பத்தையே ஆக்சிடெண்ட்ல பறி குடுத்துட்டு இருக்காண்டி. அம்மாப்பா இருந்திருந்தா அவங்ககிட்ட தள்ளி விட்டிருந்திருக்கலாம். இன்ஸுரன்சு பணமெல்லாம் நம்ம கிட்ட தான இருக்கு. அப்போ இவன நாம தான பாக்கணும்?”


“அட சும்மாருங்க நீங்க வேற. பேசாம எங்கயாவது கொண்டு போய் விட்டுட்டு வந்திடுங்க. கேக்குறவங்ககிட்ட காணாமப் போயிடுச்சின்னு சொல்லிடலாம். இதக் கட்டிக்கிட்டு நம்மளால மாரடிக்க முடியாது”


“சரிடி அப்பிடியே பண்றேன்”


தம்பியை அழைத்துக் கொண்டு அந்த ஊருக்கு வந்தான். அந்தப் பெட்டிக்கடையில் ஒரு சிகரெட் வாங்கிப் பற்ற வைத்து விட்டு தம்பிக்கு ஒரு பன் வாங்கிக் கொடுத்தான். 


வாங்கிக் கொண்ட தம்பி பன்னைக் கடித்துக் கொண்டே தெருவோரம் இருந்த குப்பைத்தொட்டிக்கு அருகில் இருந்த திண்டில் அமர்ந்து கொண்டு சாலையில் போகும் வாகனங்களை நோட்டம் விட ஆரம்பித்தான்.


பெட்டிக் கடையில் காசைக் கொடுத்துவிட்டு யாரும் பார்க்காத வண்ணம் அண்ணன் நழுவினான்.


நாட்கள் நகர்ந்தன.


அவன் சாலை ஓரத்தில் இருந்த குப்பைக் கூளத்துக்கு நடுவில் உட்கார்ந்து அந்தச் சாலையில் போகும் வாகனங்கள் அனைத்தையும் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்தான். 
***************************************************************************************
மெயின் ரோட்டில் சேர்ந்ததும் லாரியின் வேகத்தை அதிகப் படுத்தினான். லாரியில் சரக்கு நிறைய இருந்ததால் ஒரு அளவுக்கு மேல் வேகம் போகமுடியவில்லை.


நான்கு வழிச் சாலை அது. 


சாலைக்கு நடுவில் இருந்த டிவைடரில் வாகனங்கள் திரும்புவதற்காக இருந்த இடைவெளியில் லாரியைத் திருப்பி சாலையின் மறு புறத்தில் எதிர்த்து செல்ல ஆரம்பித்தான்.


“அண்ணே என்னண்ணே ராங் சைட்ல போறீங்க?”


“ஆமாண்டா இன்னும் ஒரு கிலோ மீட்டர்ல நாம திரும்ப வேண்டிய எடம். அந்தப் பக்கம் போனா ஆறு கிலோ மீட்டர் சுத்தி வரணும். இப்பிடிப் போனா ரெண்டு கிலோ மீட்டர்தான். இன்னேரம் எவனும் வர மாட்டான். நீ கவலப் படாத”
**********************************************************************************
சுந்தர் காரை ஓட்டிக் கொண்டே பக்கத்தில் பார்த்த்தான். ஊர்வசி கண்ணசந்திருந்தாள். அவள் தோளில் சாய்ந்து ஸ்வாதியும் தூங்கிக் கொண்டிருந்தாள். 


சுந்தருக்கும் லேசாகத் தூக்கம் வந்தது. சீட் பெல்ட்டை கட்டிக் கொண்டான். கப் ஹோல்டரில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து ஒரு மடக்கு குடித்துக் கொண்டான்.


இன்னும் அரை மணி நேரம் தான். பல்லைக் கடித்துக் கொண்டு போனோமென்றால் வீட்டுக்குப் போய் நன்றாக ரெஸ்ட் எடுத்துக் கொள்ளலாம். 


கார் ஒரு பள்ளத்தில் இறங்கி குலுங்கியது. டேஷ் போர்டில் இருந்த செல்போன் கீழே விழுந்தது. 
அதை எடுப்பதற்காகக் குனிந்தான். 
*******************************************************************************
“சார் உங்க தம்பி சுந்தர் மட்டும் சீட் பெல்ட் போட்டுட்டு இருந்ததால தப்பிச்சிட்டார். ஆனா தன் கண் முன்னால வொய்ஃப் கொழந்த இறந்ததப் பாத்ததுல அவர் மனநிலை பாதிச்சிருச்சி. நீங்க நல்ல மனநல மருத்துவமனைல அவர சேத்து வுடுங்க”


“சரி சார்”


வீட்டுக்கு தம்பியை அழைத்து வந்து மனைவியிடம் விசயத்தைச் சொன்னான்.


அவன் பார்வை இல்லாத எதையோ வெறித்துக் கொண்டிருந்தது. 
*********************************************************************************
லாரி ராங் சைடில் சென்றாலும் வேகத்தை மட்டுப் படுத்தாமல் செலுத்திக் கொண்டிருந்தான். எதிரில் இரண்டு வெளிச்சப் புள்ளிகள் தெரிந்தன. போதை ஏறிய மூளை சற்று மெதுவாகத்தான் பிரேக்கை மிதிக்க கால்களுக்கு கட்டளை பிறப்பித்தது.
*********************************************************************************
செல்போனை குனிந்து எடுத்ததால் சாலையிலிருந்து சிறிது நேரத்துக்கு கண்களை விலக்கிய சுந்தர் எழும்போது தான் எதிரில் வேகமாக வரும் லாரியைப் பார்த்தான்.
*********************************************************************************


சாலைப் பாதுகாப்பு வாரத்திற்காக:
1. காரில் செல்லும்போது எப்போதும் சீட் பெல்ட் அணிந்து கொள்ளுங்கள்.
2. குழந்தைகளை முடிந்த வரை கார் சீட்டில் அமர வைத்து அவர்களுக்கும் சீட் பெல்ட் போட்டு விடுங்கள்.
3. கார் சீட் இல்லையென்றாலும், குழந்தைகள் எப்போதும் பின் சீட்டில் பிரயாணம் செய்வது தான் பாதுகாப்பு
4. டேஷ் போர்டில் செல்போன் போன்ற சிறு பொருட்களை வைக்காதீர்கள். டிரைவரின் கவனத்தை அந்தப் பொருட்களின் நகர்வுகள் சிதைக்கலாம்.
5. கார்/பைக் எந்த வாகனம் ஓட்டினாலும் ஓட்டும்போது செல்போனில் பேசாதீர்கள்
6. கார் டிரைவரை விட அவருக்கு அருகில் அமர்ந்து வருபவருக்கு தான் மிகப் பெரிய பொறுப்பு உள்ளது.
6.1 நீங்கள் கண்ணசரவே கூடாது
6.2 டிரைவருடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வர வேண்டும். அதே நேரம் அந்தப் பேச்சு டிரைவரின் கவனத்தையும் திசை திருப்பா வண்ணம் இருக்க வேண்டும் (அந்த பிகரு சூப்பர்ல மச்சி, என்ன காரு ஓட்டுறீங்க, இந்த பொங்கலுக்கு ஒரு வைர நெக்லஸ் வாங்கிக் குடுங்க போன்ற பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது)
7. எந்த வண்டியாக இருந்தாலும், குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது மிக மிக மிகத் தவறு. அது உங்களுக்கு மட்டும் பிரச்சனை இல்லை. ரோட்டில் போகும் மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கும் தான்.
8. கூடிய மட்டும் இரவுப் பயணங்களைத் தவிர்த்து விடுங்கள்
9. தூரத்தையும் பெட்ரோலையும் மிச்சப்படுத்த சாலை விதிகளை மீறாதீர்கள்.’
10. நீண்ட தூரப் பயணம் செல்லும்போது சரியான திட்டமிடல் - இடையில் எங்கெங்கு நிறுத்துவது, அந்த இடத்தைப் பற்றிய விவரம் - இல்லாமல் செல்லாதீர்கள்.

17 comments:

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

NY DMV புக்ல கடைசிப் பக்கத்துக்கு இதை தேர்வு செய்யப் போறாங்களாம்.. டெஸ்ட்டுக்கு இதுல இருந்து கண்டிப்பா ரெண்டு கேள்வி உண்டாம் :)

11 - எல் போர்ட் மாட்டிக் கொண்டு வண்டியோட்டுபவர்கள் மீது தனி கவனம் கொள்ளுங்கள்.. எப்போ எங்க எப்படி இடிப்பாங்கன்னே தெரியாது.. :)

vasu balaji said...

அப்பாடா. எதிர் கவுஜ, பின் நவீனத்துவம், அரசியல் வ்யாதி இன்ன பிறவிலிருந்து விடுதலையாகி, ஒரிஜினல் அக் மார்க் முகிலன் ஸ்டஃப். நல்லாருக்கு. அவசியமும் கூட.

பின்னோக்கி said...

நல்ல கதை
நல்ல நடை
நல்ல கருத்து

VISA said...

/அப்பாடா. எதிர் கவுஜ, பின் நவீனத்துவம், அரசியல் வ்யாதி இன்ன பிறவிலிருந்து விடுதலையாகி, ஒரிஜினல் அக் மார்க் முகிலன் ஸ்டஃப். நல்லாருக்கு. அவசியமும் கூட.

//

Repeatu

Anonymous said...

சாலை பாதுகாப்பு வாரம் பதிவா, குடுகுடுப்பைக்கும் நசரேயனுக்கும் சண்டை அவ்வளவுதானா !! எவ்வளவு எதிர்பாத்தேன் :)

நசரேயன் said...

//சின்ன அம்மிணி said...

சாலை பாதுகாப்பு வாரம் பதிவா, குடுகுடுப்பைக்கும் நசரேயனுக்கும் சண்டை அவ்வளவுதானா !! எவ்வளவு எதிர்பாத்தேன் :)
//

இன்னும் இருக்கு அம்மணி

நசரேயன் said...

நல்ல நடை முகிலன்

Unknown said...

//எல் போர்ட் said...
NY DMV புக்ல கடைசிப் பக்கத்துக்கு இதை தேர்வு செய்யப் போறாங்களாம்.. டெஸ்ட்டுக்கு இதுல இருந்து கண்டிப்பா ரெண்டு கேள்வி உண்டாம் :)
//

ராயல்டி குடுப்பாங்களா?

//11 - எல் போர்ட் மாட்டிக் கொண்டு வண்டியோட்டுபவர்கள் மீது தனி கவனம் கொள்ளுங்கள்.. எப்போ எங்க எப்படி இடிப்பாங்கன்னே தெரியாது.. :)
//
இதுலே எதோ உள்குத்து இருக்கே

Unknown said...

//வானம்பாடிகள் said...
அப்பாடா. எதிர் கவுஜ, பின் நவீனத்துவம், அரசியல் வ்யாதி இன்ன பிறவிலிருந்து விடுதலையாகி, ஒரிஜினல் அக் மார்க் முகிலன் ஸ்டஃப். நல்லாருக்கு. அவசியமும் கூட.
//

என்னை ஒரு வரையறைக்குள்ள கொண்டு வந்து என்னை பின்நவீனத்துவ வாதியில்லன்னு சொல்லிட்டிங்களே? இப்பிடி சொன்னிங்கன்னா நான் எப்ப 1500 ரூவா ஜட்டி எல்லாம் போடுறது? அவ்வ்வ்வ்வ்

Unknown said...

// பின்னோக்கி said...
நல்ல கதை
நல்ல நடை
நல்ல கருத்து
//
நன்றி பின்னோக்கி.

Unknown said...

//VISA said...
/அப்பாடா. எதிர் கவுஜ, பின் நவீனத்துவம், அரசியல் வ்யாதி இன்ன பிறவிலிருந்து விடுதலையாகி, ஒரிஜினல் அக் மார்க் முகிலன் ஸ்டஃப். நல்லாருக்கு. அவசியமும் கூட.

//

Repeatu//

டிட்டோ

Unknown said...

// சின்ன அம்மிணி said...
சாலை பாதுகாப்பு வாரம் பதிவா, குடுகுடுப்பைக்கும் நசரேயனுக்கும் சண்டை அவ்வளவுதானா !! எவ்வளவு எதிர்பாத்தேன் :)
//

அடுத்தவங்க சண்டைய வேடிக்க பாக்கவே ஒரு கூட்டம் இருக்கு போலயே ;-))))))

Unknown said...

// நசரேயன் said...

இன்னும் இருக்கு அம்மணி
//

அய்யோ இன்னுமா???
//
நல்ல நடை முகிலன்
//
எல்லாம் முகிலன் ஜூனியர்கிட்ட இருந்து கத்துக்கிட்டது தான்.. :)

Unknown said...
This comment has been removed by the author.
குடுகுடுப்பை said...

நல்லா இருக்கு, ஆனா இன்னொரு முறை படிச்சாதான் புரியும் இந்த பின் நவீனத்துவவாதிக்கு

Unknown said...

//நல்லா இருக்கு, ஆனா இன்னொரு முறை படிச்சாதான் புரியும் இந்த பின் நவீனத்துவவாதிக்கு
//

நல்லா கிளப்புறாய்ங்கப்பா பீதிய.. :))

கலகலப்ரியா said...

good one mukilan.. keep it up..