Wednesday, March 10, 2010

பூ வலி



முன் முன் குறிப்பு: தயவு செய்து மன திடம் இல்லாதவர்கள், கர்ப்பிணிகள் இந்தக் கதைத் தொடரைப் படிக்க வேண்டாம்.

முன்குறிப்பு: சத்தியமாக மொத்தக் கதையையும் எழுதிவிட்டேன். கதையின் நீளம் காரணமாக இரண்டு பதிவுகளாக போட வேண்டிய நிலை. அதனால் பொறுத்துக் கொள்ளுங்கள்.

அதிகாலை - மணி 4:30

அம்ம்ம்மாஆஆஆஆஆஆஆ....”

அடி வயிற்றை யாரோ சுருட்டி இழுப்பது போல வலித்தது

தாங்க முடியலைம்மா.. ரொம்ப வலிக்குதும்மா

பக்கத்தில் படுத்திருந்த அம்மா முதுகை ஆறுதலாகத் தடவிக் கொடுத்தார்.

வலியப் பொறுத்துக்கம்மா. நான் மாப்பிள்ளையக் கூப்பிடுறேன்

அம்மா எழுந்து சிவாவை அழைக்கப் போனார். கீழுதட்டைக் கடித்து வலியைப் பொறுத்துக் கொண்டேன். டாக்டர் சொன்ன காண்ட்ராக்ஷன்ஸ் ஆரம்பித்து விட்டது போல. பத்து நாள் முன்னாலேயே வெளியே வந்து விடுவானா இவன்?

ஆம், ஸ்கேன் செய்த போதே தெரிந்து விட்டது. ஆண் குழந்தை தான் என்று. அமெரிக்காவில் என்ன குழந்தை என்பதைச் சொல்லிவிடுவார்கள். ஒவ்வொரு ஸ்கேனிங் செஸ்ஸனிலும் குழந்தையின் வளர்ச்சியைப் பார்க்க பரவசமாக இருந்தது. இதோ பிரசவ நாளும் நெருங்கி விட்டது வலி எடுக்கத் துவங்கியாயிற்று.

சிவா படுக்கையறைக்குள் வந்தார்.

என்னப்பா வலி எடுக்க ஆரம்பிச்சிருச்சா?”

அப்பிடித்தான் தெரியுது சிவா. ரொம்ப வலிக்குது

கண்டின்யுவஸா இருக்கா? இல்ல விட்டு விட்டு வலிக்குதா?”

விட்டு விட்டுத்தான் வலிக்க்... அம்மாஆஆஆ

இருப்பா நான் டாக்டரைக் கூப்பிடுறேன்

சிவா ஃபோனை எடுக்கக் கீழே போனார். இது எங்கள் முதல் குழந்தை. திருமணம் ஆகி முதல் இரண்டு வருடம் குழந்தை வேண்டாம் என்று முடிவெடுத்து தள்ளிப்போட்டு வந்தோம். கடைசியில் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்த போது தங்காமல் போய்க் கொண்டே இருந்தது.

இரண்டு கருச்சிதைவுகளுக்குப் பிறகு இதோ மூன்றாம் முறை கருத்தங்கி பிரசவம் வரை பிரச்சனை இல்லாமல் வந்து விட்டது. சிவா கையில் ஃபோனோடு உள்ளே வந்தார்.

உமா,  இந்தா டாக்டர் உன்கிட்ட பேசணுமாம்

ஹலோ டாக்டர்.”

உமா என்ன எப்பிடி வலிக்குது?”

அடி வயித்துல சுருட்டி சுருட்டி வலிக்குது டாக்டர்

தண்ணிக் குடம் உடஞ்சிருச்சா?”

இல்ல டாக்டர். அப்பிடியெல்லாம் எதுவும் ஆகல

உன்னால மூச்சு வாங்காம பேச முடியுது. அதுனால நாம இப்பவே ஹாஸ்பிட்டல் போகணும்னு அவசியம் இல்லை. நீ காலைல 9:00 மணிக்கு என் ஆஃபீஸ்க்கு வந்துடு. உன்ன செக்கப் செஞ்சிட்டு அதுக்கப்புறம் நாம என்ன செய்யலாம்னு முடிவு பண்ணலாம்

சரி டாக்டர்.”

நல்லா ரெஸ்ட் எடு

சிவா, டாக்டர் காலைல அவங்க ஆஃபீஸ்க்கு வரச் சொல்லியிருக்காங்க

சரிம்மா. நான் ஆஃபிஸ்க்கு லீவ் சொல்லிடுறேன். நாம காலைல போகலாம்

எப்போது விடிந்தது என்றே தெரியவில்லை. நேரம் போகப் போக வலி பழகிவிட்டிருந்தது. அம்மா வேகவேகமாக காலை உணவு தயார் செய்தார்கள். இரண்டு இட்டிலி, இரண்டு வகை சட்டினி. ஒரு இட்டிலிக்கு மேல் சாப்பிட முடியவில்லை.

சிவா ஹாஸ்பிட்டல் பேக் ரெடி செய்து தயாராக நின்றிருந்தார். சிரமத்துடன் வயிற்றைத் தூக்கி காரில் ஏறி உட்கார்ந்ததும், வழக்கம்போல காரை சிறிது வேகத்துடன் எடுத்தார்.

சிவா, பிரசவத்துக்கு ஹாஸ்பிட்டலுக்குப் போறோம். நீங்க போறதப் பாத்தா கார்லயே பிரசவம் ஆயிடும் போலயே?”

சாரி சாரி.. நான் ஸ்லோவாவே போறேன்

காரில் நன்றாக சாய்ந்து உட்கார்ந்து, தலையை சீட்டுக்கு கொடுத்து கண்களை மூடிக் கொண்டேன். அம்மா என் தலையைக் கோதிக் கொண்டே வந்தார். பத்து மைல் தூரம் சென்றதும் டாக்டர் ஆஃபீஸ் வந்து விட்டது.

********************************

காலை மணி 9:10

சிவா இறங்கி சுற்றி வந்து கதவைத் திறந்து பிடித்தார். கைத்தாங்கலாக அழைத்து டாக்டரின் ஆஃபிஸுக்குள் ஒரு இருக்கையில் அமர வைத்தார்.

டாக்டர் வந்து ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்து விட்டு மானிட்டரில் போடச் சொல்லி நர்ஸிடம் சொல்லிச் சென்றார்.

போய் அந்த எக்ஸாமினேஷன் டேபிளில் படுத்துக் கொண்டேன். நர்ஸ் வந்து இரண்டு பட்டிகளை என் வயிற்றில் கட்டி கையில் ஒரு பொத்தானையும் கொடுத்தாள்.

சரியாக பதினைந்து நிமிடம், இந்த மானிட்டர் வேதனை. நான் உட்காராமலும் படுக்காமலும் இருந்த அந்த எக்ஸாமினேஷன் டேபிள் வசதியாக இல்லாதது மேலும் சிரமத்தைக் கொடுத்தது.

டாக்டர் வந்து அந்த சார்ட்டை எடுத்துப் பார்த்தார். கையை விட்டு சோதனை செய்தார்.

உமா, உனக்கு இன்னும் லேபர் ஆரம்பிக்கலை. 3 cm dilation தான் ஆகியிருக்கு. 5 டு 7 இருந்தாத்தான் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ண ரெக்கமெண்ட் பண்ணுவாங்க. இல்லைன்னா வாட்டர் பிரேக் ஆகியிருக்கனும். நான் உனக்கு மூணு ஆப்ஷன் தர்றேன். எதை எடுத்துக்க போறன்னு சொல்லு

என்ன ஆப்சன் டாக்டர்?”

நீ இங்க பக்கத்துல ஒரு மால் இருக்கு. அங்க போய் வாக் பண்ணு. அது டைலேஷனை அதிகப்படுத்தலாம். ஒரு மணி நேரம் ஷாப் பண்ணிட்டு திரும்ப வா. டைலேஷன் எவ்வளவு இருக்குன்னு பாத்துட்டு டிசைட் பண்ணலாம்.”

அடுத்த ஆப்ஷன் டாக்டர்?”

வீட்டுக்குப் போ. வாட்டர் ப்ரேக் ஆகிற வரைக்கும் வெயிட் பண்ணு. பிரேக் ஆனதும் நேரா ஹாஸ்பிட்டல் போயிடு

அடுத்த ஆப்ஷன்?”

இப்பவே ஹாஸ்பிட்டல் போயிடு, நான் ரெகமெண்ட் பண்ணிடுறேன். டைலேஷன் 5-7 வரும்போது எனக்குத் தகவல் குடுப்பாங்க. அப்ப வந்து பாக்கிறேன்.”

நான் மூன்றாவது ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தேன். மாலிலோ, வீட்டிலோ போய் தண்ணீர்க்குடம் உடைவதற்கு ஆஸ்பத்திரியிலேயே உடையலாம். டாக்டரும் என் எண்ணத்தைப் புரிந்து கொண்டு ரெகமெண்டேஷன் லெட்டர் கொடுத்ததும் மூவரும் கிளம்பி ஹாஸ்பிட்டலுக்குப் போனோம்.

*******************
காலை மணி 10:20 

ரிசப்ஷனில் டாக்டரின் ரெகமெண்டேஷனைப் பெற்றுக் கொண்டு என்னை Triage ரூமுக்கு அழைத்துச் சென்றனர்.

ட்ரயாஜ் ரூம் என்பது ஒரு பெரிய ஹாலை 6 அறைகளாகத் தடுத்து மூன்று பக்கம் சுவர் ஒரு பக்கம் திரை போட்டு மூடப்பட்டிருந்தது. அங்கே என் டாக்டர் ஆஃபீஸின் எக்ஸாம் டேபிளை விட வசதியான ஒரு படுக்கையில் என்னைப் படுக்க வைத்து மானிட்டரைப் பொருத்திவிட்டுப் போய் விட்டார்கள். எனக்கே எனகேன்று ஒரு லேபர் நர்ஸ்.

ஒரு வேளை இந்த வலி, ஃபால்ஸ் லேபராக இருந்தால் மானிட்டர் காட்டிக் கொடுத்து விடும், இவர்களும் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்.

ஹாஸ்பிட்டலின் ரவுண்ட்ஸ் டாக்டர் வந்து சோதனை செய்து விட்டுப் போனாள். இன்னும் 3 செமீ டைலேஷன் தான். எஃபேஸ்மெண்ட் 10% தான் ஆகியிருப்பதாகச் சொல்லிவிட்டுப் போய் விட்டாள். டைலேஷன் என்பது கர்பப்பையின் வாசலான செர்விக்ஸில் ஏற்படும் துளையின் அளவைச் சொல்லப் பயன்படுத்தப் படும் ஒரு வார்த்தை. 10 செ.மீ டைலேஷன் வந்தால் தான் பிரசவத்துக்கு ரெடி என்று அர்த்தம். எஃபேஸ்மெண்ட்(effacement) என்பது செர்விக்ஸின் தடிமனைக் குறிக்கும் சொல். 100% எஃபேஸ்மெண்ட் என்றால் செர்விக்ஸ் சுத்தமாக கரைந்து விட்டது என்று பொருள்.

இன்னும் ட்ரயாஜ் ரூமில் தான் இருக்கிறேன். எப்போது என்னை டெலிவரி ரூமுக்குக் கூட்டிப் போவார்கள் என்று தெரியவில்லை. இத்தனை நாள் சுமந்து விட்டேன். இந்த அரை நாளுக்கு இவ்வளவு கஷ்டப்படுகிறேன் என்று நினைக்கும் போது வலியினூடே கொஞ்சம் சிரிப்பு வந்தது.

சிவா வந்து நின்றார். அவர் முகத்தில் கலவையான உணர்ச்சிகள்.

என்னப்பா?”

டெலிவரி ரூம் இன்னும் ரெடியாகலையாம். எவ்வளவு நேரம் ஆகும்னு தெரியல. உனக்கும் சாலிட் ஃபுட் எதுவும் குடுக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க. நான் கீழ போய் எனக்கும் அத்தைக்கும் எதாவது சாப்புட வாங்கிட்டு வந்துடுறேன். உனக்கு எதாவது சூப் வாங்கிட்டு வர்றேன் சரியா?”

சரிப்பா. பாத்து போயிட்டு வாங்க.”

நீங்க பாத்து இருங்க மேடம். எங்களுக்கெல்லாம் சொல்ல வேண்டாம்

தலையை ஆதுரமாகத் தடவிக் கொடுத்துவிட்டு அகன்றார். வலி இன்னும் சரியான இடைவெளியில் எடுத்துக் கொண்டிருந்தது. ஆனால் வலி கிட்டத்தட்ட பழகியிருந்தது. எழுந்து நடக்க வேண்டும் போல் இருந்தது. படுக்கையின் அருகிலிருந்த பெல் பொத்தானை அழுத்தினேன்.

நர்ஸ் வந்தாள். எழுந்து நடக்க வேண்டுமென்ற ஆசையைச் சொன்னதும், மானிட்டரை என் வயிற்றிலிருந்து அகற்றினாள். என் கை பிடித்து இறங்க உதவினாள்.

வலது கையை இடுப்பில் ஊன்றி மெல்ல அடி எடுத்து நடந்தேன். பத்து எட்டு வைப்பதற்குள் மூச்சு வாங்கியது. வெளியே விசிட்டர் ரூமில் இருந்த அம்மா பார்த்து பதட்டத்துடன் எழுந்து வந்தார்.

என்னடி இது. எதுக்கு எந்திரிச்சி நடக்குற?”

இல்லம்மா வலிக்குது. நடந்தா வலி தெரியாதுன்னு சொல்லிக் குடுத்திருக்காங்க. கையப் பிடிச்சிக்குங்கம்மா

அம்மா கை பிடிக்க மெதுவாக நடந்தேன். நர்சரி அறையைக் கடந்தோம். உள்ளே பல க்ரிப் (crib)களில் இளஞ்சிவப்பு மற்றும் நீல தேவதைகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தன. சன்னல் அருகே நின்று சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னும் சில மணி நேரங்களில் என் கைகளிலும் இது போல ஒரு உயிரைத் தாங்கப் போகிறேன் என்று நினைத்ததும் சிலிர்த்தது. நடையைத் தொடர்ந்தேன்.

**********************************************
மதியம் மணி 3:00

கடைசியா செக்கப் பண்ணின டாக்டர் டைலேஷன் எவ்வளவுன்னு சொன்னாரு?” பையைப் பிரித்து சாமான்களை எடுத்து வைத்துக் கொண்டே சிவா கேட்டார்.

அதே 3 செமீ தான். எஃபேஸ்மெண்ட் 20% இருக்குதுன்னு சொன்னாரு.

திரையை விலக்கி உள்ளே வந்த நர்ஸ் “யூ ஹாவ் காட் தி லக்கி ரூம் 13” என்று உதட்டில் புன்னகையுடன் சொன்னாள்.

பதிமூணா? ராசியில்லாத நம்பர் என்று நம்பும் இந்த ஊர்க்காரர்களிடம் இப்படி லக்கி ரூம் 13 என்று இவள் சொல்வாளா? எனக்கு 13ல் நம்பிக்கை இல்லை என்றாலும் ஒரு கலக்கத்தை அந்த எண் கொடுத்ததை மறுக்க முடியாது.

வலி எப்பிடிம்மா இருக்கு?” சிவா.

வலி குறைஞ்சிட்டா மாதிரி தெரியுதுசொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு வலி வந்தது. “அம்மா....”

ஓரமாக நின்று மானிட்டரைப் பார்த்துக் கொண்டிருந்த நர்ஸ், “உங்களுக்கு வலி அதிகமாகியிருக்கிறது. அநேகமாக இந்த வலியால் உங்கள் டைலேஷன் அதிகரிக்கும்என்று (ஆங்கிலத்தில்) சொல்லிபெயின் மேனேஜ்மெண்ட்க்கு என்ன செய்யப் போகிறீர்கள்? EPIDURAL?”

நோ நோஎபிட்யூரல் எடுப்பதில் நன்மை தீமை இரண்டுமே சரியான அளவில் இருப்பதால் அதை எடுக்காமல் இருக்கலாம் என்று முடிவெடுத்திருந்தோம்.

நான் சிவாவைப் பிடித்துக்கொண்டு நடந்தே எங்களுக்கு ஒதுக்கப் பட்டிருந்த அறை நோக்கி நடந்தோம். அறை வாசலில் அறையின் எண் 3813 என்று பார்த்ததும் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி வந்தது.

நல்ல பெரிய அறை. அதன் ஒரு ஓரத்தில் டெலிவரி பெட் போடப் பட்டிருந்தது. பக்கத்திலேயே மானிட்டர் ஒன்று. இன்னொரு மூலையில் ஒரு சோஃபா இருந்தது. அந்த சோஃபாவை எப்படி படுக்கையாக மாற்றலாம் என்று சிவாவுக்கு டெமோ காட்டிக் கொண்டிருந்தாள் நர்ஸ். அந்த சோஃபாவுக்கு அருகில் ஒரு சிறிய க்ரிப்(crib) அதன் மேல் ஒரு விளக்கு போன்ற சாதனம். குழந்தை வயிற்றிலிருந்து வந்ததும் வெளியில் இருக்கும் வெப்பநிலை(70 டிகிரி ஃபாரன்ஹீட்) அதற்கு மிகவும் குளிராக இருக்கும் (உடலின் உள்ளே 98 டிகிரி) என்பதால் அந்தப் படுக்கையில் போட்டு மேலே இருக்கும் வெப்ப விளக்கைப் போட்டு விடுவார்கள். குழந்தைக்கு அடிப்படை சோதனைகள் அங்கே செய்யப் பட்டு அதன் பிறகே அம்மாவிடம் கொடுக்கப் படும்.

என் படுக்கைக்கு அருகிலேயே டாய்லெட் ஒன்று இருந்தது. நடுவில் ஒரு மேஜை போடப்பட்டு இரண்டு நாற்காலிகளும் இருந்தன. அதன் மேல் சில புத்தகங்கள். மேஜைக்கு நேர் மேலே ஒரு வால் மவுண்ட்டட் டிவி இருந்தது. டிவிக்கான ரிமோட் என் கையில்.

இங்கே என்னுடனே எனக்கென விதிக்கப்பட்ட லேபர் நர்ஸ் இருப்பாள். அவளுடைய கடமை என் மானிட்டரைப் பார்த்துக் கொண்டே இருப்பது. இதே மானிட்டர் அங்கே டாக்டர்ஸ் லவுஞ்சிலும் தெரியும் என்று சொன்னாள்.

*******************************************************
மாலை மணி 5:00

அப்போதுதான் கவனித்தேன். நான் உட்கார்ந்திருந்த படுக்கை ஈரமாகியிருந்தது. தண்ணீர்க்குடம் உடைந்துவிட்டது. நர்ஸ் பார்த்துவிட்டு ஓடிப்போய் மிட்-வைஃபை அழைத்து வந்தாள். அவள் சோதித்து விட்டு, இனி நடமாடாதே பெட் ரெஸ்ட் எடு. வலி அதிகரிக்கும் என்று சொல்லிச் சென்றாள்.

வலி அதிகரித்தது போலத்தான் இருந்தது. இப்போது அடி வயிற்றோடு சேர்த்து முதுகும் வலித்தது. நாக்கு உலர்ந்து கொண்டே வந்தது. கப்பில் இருந்த ஐஸ் கட்டியை எடுத்து நாக்கை நனைத்துக் கொண்டேன்.

************************************************************
இரவு மணி 8:00

டாக்டர் வந்தார். நர்ஸிடம் மருத்துவ மொழியில் பேசி விட்டு சார்ட் பார்த்து விட்டு என்னை சோதனை செய்தார்.

இன்னும் 3 செ.மீ தான் டைலேஷன் ஆகியிருக்கிறது. முன்னேற்றம் இல்லை. எப்படியும் ஐந்திலிருந்து ஏழு மணிநேரமாகலாம் பிரசவத்திற்கு. நீ பேசாமல் எபிட்யூரல் எடுத்துக்கொள். அப்போதுதான் கடைசிக் கட்டத்தில் உனக்கு சக்தி இருக்கும்என்று சொல்லி நர்ஸிடம் எபிட்யூரல் கொடுக்க உத்தரவு போட்டு விட்டு சென்று விட்டார்.

எபிட்யூரல் என்பது முதுகுத் தண்டுவடத்தில் போடப்படும் பெயின் கில்லர். நீளமான ஊசியால் தண்டுவடத்தில் ஒரு ட்யூப் நுழைக்கப் பட்டு ட்ரிப்ஸ் மூலம் எபிட்யூரல் ஊட்டப்படும். தண்டுவடத்திலேயே ஏற்றப் படுவதால், ரத்தத்தில் கலக்காது. ரத்தத்தில் கலக்காததால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படாது.

ஆனால் தண்டுவடத்தில் போடப்படுவதால், கால்கள் செயலிழக்கலாம், தலை வலி வரலாம், ஏன் உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.

அம்மா அருகில் வந்து நின்றார்.

உமாக்கண்ணு, எபிட்யூரல் எல்லாம் வேணாண்டா. உன்னால ரொம்ப முடியலைன்னா சிசேரியன் கூட செஞ்சிடலாம். எபிட்யூரல் வேண்டாம்

சிசேரியனா? என்ன அத்தை சொல்றீங்க. அது ரிஸ்க். அதுக்கு எபிட்யூரல் எடுக்கலாம்

இல்ல மாப்ள, எபிட்யூரல் போடுறதுல ரொம்ப ரிஸ்க் இருக்குன்னு ரெண்டு பேரும் நேத்து பேசிட்டு இருந்தீங்களே?”

சரிதானத்த. ஆனா சிசேரியன் பண்ணினா அடுத்த குழந்தைக்கும் சிசேரியன் தான் செய்யனும். அதோட ரெக்கவரிக்கும் லேட் ஆகும். சரி அது இருக்கட்டும்.  நான் போய் டின்னருக்கு எதாவது வாங்கிட்டு வர்றேன்சொல்லிச் சென்றான்

ஆமாம்மா சிவா சொல்றது தான் சரி. வலி பொறுக்க முடியலைன்னா, எபிட்யூரல் தாம்மா சரி

என்ன உமா இப்பிடிச் சொல்ற. நம்ம பார்வதி மக ரம்யாவுக்கு மொத பிரசவமும் சிசேரியன். இப்ப ரெண்டாவது புள்ள பெத்துக்கலையா? அவங்களுக்கெல்லாம் ஒன்னும் ஆகல தான? எபிட்யூரல் வேணாம்மா

என் செல்ஃபோன் ஒலித்தது. இந்திய நம்பர். “அம்மா.. பிரேமி ... கூப்பு.. டு.. ரா பே.. சு..ங்கவலியினூடே அம்மாவிடம் போனை எடுத்துக் கொடுத்தேன்.

பிரேமி, சொல்லுடி..”
....
ஆமா இங்க ஹாஸ்பிட்டல் வந்துட்டோம். வலி எடுத்துரிச்சி. ஆனா லேட்டாவும்னு சொல்றாங்க. என்னவோ டயலேசன், எஃபேஸ்மெண்ட்னு சொல்லிக்கிறாங்க. ஒன்னும் புரியலை
....
இவ என்னவோ எபிட்யூரல் எடுக்கப் போறாளாம். அதுல உயிருக்கே ஆபத்து இருக்குன்னு ரெண்டு நாள் முன்னால ரெண்டு பேரும் பேசுனாங்க. இப்ப அதத்தான் எடுக்கப் போறேன்னு சொல்றா. எனக்கு பயமா இருக்குடி

எனக்கும் பயமாகத்தான் இருக்கிறது. ஆனால் வலியைப் பொறுக்க முடியவில்லையே?

19 comments:

Anonymous said...

உறவுகள் தொடர் மாதிரி ஆகிடாதே!!!!

பின்னோக்கி said...

எப்படி உங்களால் இவ்வளவு கதைகள் எழுத முடிகிறது ?. ஆச்சரியமாக இருக்கிறது. நிறைய உங்கள் கதைகள் படிக்கப்படாமல் இருக்கிறது. படித்துவிட்டு கமெண்டுகிறேன்

vasu balaji said...

/ சின்ன அம்மிணி said...

உறவுகள் தொடர் மாதிரி ஆகிடாதே!!!!/

அப்படி ஆனா எபிடியூரல் குடுத்துறலாம். இல்லாட்டி சிசேரியந்தான்:))

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//சத்தியமாக மொத்தக் கதையையும் எழுதிவிட்டேன். கதையின் நீளம் காரணமாக இரண்டு பதிவுகளாக போட வேண்டிய நிலை. அதனால் பொறுத்துக் கொள்ளுங்கள்//

ஆங்.. அந்த பயம் இருக்கட்டும்.. :)

இந்தக் கதைக்கு ரெண்டு பின்னூட்டம்லாம் போட முடியாது.. முழுசும் படிச்சிட்டு ஒன்னே ஒன்னு தான் போடுவோம்.. :))

ஆமா.. எங்களயெல்லாம் ஆர்வமா படிக்க வச்சு அழ வச்ச அந்த உறவுகள் தொடரென்னாச்சு?? போட்டுக்கொடுத்ததுக்கு நன்றி சின்னம்மிணி.. :)

Chitra said...

எனக்கும் பயமாகத்தான் இருக்கிறது. ஆனால் வலியைப் பொறுக்க முடியவில்லையே?


......... இந்த கதை நல்லா இருக்குங்க.

Vidhoosh said...

எனக்கும் பயமாகத்தான் இருக்கிறது.

"உழவன்" "Uzhavan" said...

கதை நல்லா போகுது..

தர்ஷன் said...

ம்ம் பிரசவத்திற்கு முன்னரான வேதனைகளும் அதை தாண்டிய எதிர்பார்ப்புகளும் அழகாகவே அலுப்பிலாமல் கொண்டு போகிறீர்கள்

Unknown said...

@ சின்ன அம்மிணி - இதுக்கு உங்களுக்குத் தனி ஈ-மெயிலுல பதில் சொல்லிட்டேன். அடுத்த பதிவுல ஏன்னு சொல்லிடுறேன்..

Unknown said...

@பின்னோக்கி - இதுக்கு ரெண்டு மாதிரி பதில் சொல்லலாம்..

முதல் விதம்: ஒரு கோல்ட் ஃப்ரேம் கண்ணாடி போட்டுட்டு தீர்க்கமான பார்வையோட மூக்கு மேல ஒரு விரல் வச்சிட்டுப் பேசுற மாதிரி கற்பனை பண்ணிக்கோங்க..

“சிறுகதைகளோ பெருங்கதைகளோ எல்லாம் நம்மைச் சுற்றி சிதறிக் கிடக்கின்றன. அவற்றைப் பொறுக்கி எடுத்து நம் கற்பனை என்னும் பாலீஷ் போட்டு படைப்பதில் தான் ஒரு எழுத்தாளனின் திறமை ஒளிந்திருக்கிறது. பார்க்கும் எதையும் ஒரு எழுத்தாளனின் பார்வையோடு பார்த்தால் எந்தச் சம்பவத்தையும் சுவையான கதையாக மாற்றிவிட முடியும்”

இன்னொரு விதம்: “ஒன்னுமில்ல அண்ணாத்த. வேற வேலை எதுவுமில்ல. அதான் எதோ தோணுறத எழுதிக்கிட்டிருக்கேன்..”

Unknown said...

@வானம்பாடிகள் - நீங்க குடுத்திருக்கிறது எபிட்யூரல் இல்லீங்க.. எனிமா.. :))

Unknown said...

@எல் போர்ட் .. பீ சீரியஸ்..

ஐய் எங்க எல்போர்டக்கா இன்னிக்கு முத நாளே வந்து கும்மிட்டாங்க..

Unknown said...

@சித்ரா..

அப்ப இதுவரைக்கும் பிதற்றுனது எல்லாம் நல்லாவே இல்லைன்னு சொல்றீங்க. அப்பிடித்தான?

Unknown said...

@விதூஷ்..

பயப்படாதீங்க.. எபிட்யூரல் அப்பிடி ஒண்ணும் கெடுதி இல்லை..

Unknown said...

@உழவன்

வருகைக்கு நன்றிங்க்ண்ணா

Unknown said...

// தர்ஷன் said...
ம்ம் பிரசவத்திற்கு முன்னரான வேதனைகளும் அதை தாண்டிய எதிர்பார்ப்புகளும் அழகாகவே அலுப்பிலாமல் கொண்டு போகிறீர்கள்
//

நன்றி தர்ஷன்.

க ரா said...

ரொம்ப நல்லா இருக்கு.

நசரேயன் said...

//
வானம்பாடிகள் said...

/ சின்ன அம்மிணி said...

உறவுகள் தொடர் மாதிரி ஆகிடாதே!!!!/

அப்படி ஆனா எபிடியூரல் குடுத்துறலாம். இல்லாட்டி சிசேரியந்தான்:))
//
நீங்க சொன்னா சரிதான்

அது சரி(18185106603874041862) said...

Good start...When is the next part?