Friday, March 19, 2010

உறவுகள் - 08

பழையவை - 07 06 05 04 03 02 01

அந்த சம்பவத்திற்குப் பிறகு சுசிலாவுடன் பேச்சை வெகுவாகக் குறைத்துக் கொண்டாள் மஞ்சு. காலையில் வேலைக்குப் போவதற்கு முன் ரமேஷ் அவளுக்கு ப்ரேக் ஃபாஸ்ட் செய்து தந்துவிட்டு செல்வான். மதியம் 12 மணிக்குக் கீழே வந்தால், சாப்பாடு மேஜை மேல் இருக்கும் – வழக்கம்போல சுசிலாவுக்கோ ராகவனுக்கோ பிடித்த சாப்பாடு – அதை இவளே பரிமாறி சாப்பிட்டு விட்டு மறுபடி அவள் படுக்கையறைக்குப் போய்விடுவாள். தன் சொந்த வீட்டிலேயே கைதி மாதிரி இருப்பது மிகுந்த மன அழுத்தத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது.

யூ-ட்யூபில் பெரியம்மா பெண்ணின் வளைகாப்பு வீடியோவை நாற்பத்தி நான்காம் தடவையாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் மஞ்சு. அவள் விழிகள் நீர்கோத்திருந்தன. அப்பா அம்மா வந்திருந்தால் தனக்கும் வளைகாப்பு நடத்தியிருப்பார்கள். ரமேஷின் பெற்றோருக்கு அப்படி ஒரு எண்ணம் இருக்குமா தெரியவில்லை. ரமேஷுக்கு இப்படி செய்ய வேண்டும் என்று தோன்றுமா என்றும் தெரியவில்லை. வாய் விட்டு கேட்கவும் எதுவோ தடுத்தது. கண்களின் ஓரத்தில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டாள்.

************************************************************************

ராகவனும் சுசிலாவும் L வடிவ சோஃபாவில் ஆளுக்கொரு பக்கம் அமர்ந்து டிவியில் எதோ சிரியல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மஞ்சுவை ஒரு நண்பரின் வீட்டிக்குப் போயிருந்தாள். ஒரு சேஞ்சுக்காக. ரமேஷ் யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தான்.

“ட்ரடிஷனலா இருக்கட்டும் சிவா”
“அப்பிடியே செஞ்சிரலாம்”

போனை அணைத்து விட்டு ஃப்ரிட்ஜில் தண்ணீர் பிடித்து குடித்துக் கொண்டே வந்து இருவருக்கும் நடுவில் அமர்ந்தான்.

“அம்மா.. என் ஃப்ரண்ட்ஸ் மஞ்சுவுக்கு பேபி ஷவர் செய்யலாம்னு இருக்காங்க”

“அப்பிடின்னா?” சுசிலாவின் முகத்தில் கேள்விக்குறி.
“நம்ம ஊர்ல வளைகாப்பு மாதிரி. நான் அதை நம்ம வளைகாப்பு மாதிரியே ட்ரடிஷனலா செய்யலாம்னு நினைக்கிறேன்”

“எப்பிடிப்பா? நம்ம வீட்டுல நடத்த முடியுமா?”

“இல்லம்மா பக்கத்துல ஒரு ஹால் புடிச்சி…”

“சரி. செய்யுங்க”

“இல்லம்மா, எப்பிடி நடத்தனும்னு..”

“அவங்க வீட்டுல இருந்து வந்துதான நடத்தனும்?”

“அவங்கம்மா அப்பா வந்திருந்தாங்கன்னா கண்டிப்பா நடத்தியிருப்பாங்க. அவங்கதான் வர முடியலையே. அவங்க இருந்து நடத்தியிருந்தா எப்ப்டியிருக்குமோ அப்பிடியே செய்யணும்”

“5 வகை சாதம் செய்யணும். வளையல் வாங்கனும். 9 அல்லது 5 மாசமா இருக்குறவுங்களக் கூப்பிட்டு அவங்களுக்கும் வளையல் போட்டு சாப்பாடு போட்டுவிடனும்”

“இந்த ஊர்ல எங்கிட்டிருந்து கர்ப்பிணிகளைத் தேடுறது?” ராகவன் குறுக்கிட்டார்.

“அதை மட்டும் விட்டிடலாம்பா. வளையல் 5 வகை சாதம் செஞ்சிரலாம்”

“சரிப்பா”

ரமேஷ் எழுந்து ஃபோனில் நண்பன் ஒருவனை அழைத்து ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தான்.

**********************************************************************

வளைகாப்புக்கான ஏற்பாடுகள் மளமளவென நடந்து கொண்டிருந்தன. சுகுமார் நியூ ஜெர்சியில் இருந்து வளையல், இனிப்புகள் மற்றும் தாம்பூலப் பையில் போட வேண்டிய பொருட்களை வாங்கி அனுப்பியிருந்தான். அவர்களால் வரமுடியாத காரணத்தையும் சொல்லியிருந்தான்.

விழா அன்று காலை உடன் வேலை பார்க்கும் இரு நண்பர்களின் – முத்து, சிவா -  மனைவிகளும் வீட்டில் இருந்தனர். 5 வகை சாத வகைகள் – புளியோதரை, லெமன் சாதம், கற்கண்டு சாதம், தேங்காய் சாதம், சாம்பார் சாதம் – தயாராகிக் கொண்டிருந்தன. மஞ்சு அவர்களுக்கு சமையல் பொருட்கள் இருக்குமிடத்தை சொல்லிக் கொண்டிருந்தாள். ரமேஷ் தாம்புலப் பொருட்களைப் போட்டுத் தருவதற்கான பைகளை வாங்க வால்மார்ட் வரை போயிருந்தான்.

சுசிலாவும் ராகவனும் தங்கள் அறையை விட்டு வெளியே வரவில்லை.

ரமேஷ் மதியமே அந்த ஹாலை அலங்கரிக்க சென்று விட்டான். உடன் அவன் நண்பர்களும்.

அந்த ஹால் ஒரு 200 பேர் நிற்கும் அளவிற்குப் பெரிய ஹால். எப்படி அலங்கரிப்பதென்று மூவருக்குமே தெரியவில்லை. ஹம் ஆப் கே ஹைன் கோன் படத்தில் பார்த்ததை மனதில் வைத்துக் கொண்டு நடுவில் ஒரு சேரைப் போட்டு அதைச் சுற்றி தட்டுகளில் பூ, பழங்கள், புடவை, வளையல்கள், இனிப்புகள் ஆகியவற்றை வைத்தனர்.

அரை வட்ட வடிவில் நாற்காலிகளைச் சுற்றிப் போட்டு விட்டு வீடியோ கேமிராவை நடுவில் வைத்தார்கள். சுவற்றில் பலூன்களையும் கலர் காகிதங்களையும் ஒட்டி விட்டனர்.

விழாவுக்கான நேரம் நெருங்கவும், ரமேஷின் நண்பர்கள் ரமேஷின் பெற்றோரையும், மஞ்சு மற்றும் அவர்களின் மனைவிகளையும் அழைத்து வர ரமேஷின் வீட்டுக்குச் சென்றனர். ரமேஷ் விழாவுக்கு வருபவர்களை வரவேற்க ஹாலிலேயே நின்று விட்டான்.


நண்பர்களாக நடத்திய விழா என்பதால் சிரிப்பும் கேலியுமாக விழா இனிதே நடைபெற்றது. வந்து குவிந்த பரிசுப் பொருட்களை எடுத்துச் செல்லவே தன் கார் பத்தாது என்பதால், சிவா தன் காரில் சுசிலாவையும் ராகவனையும் வீடு வரை வந்து விட்டு விட்டுப் போனான்.

மஞ்சு சில நாட்களாக இருந்த மன அழுத்தம் குறைந்து கொஞ்சம் லேசாகியிருந்தாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு நிம்மதியாக நீண்ட நேரம் உறங்கினாள்.

******************************************************************

அடுத்த நாள் அலுவலகத்தில் ஆணி புடுங்கிக் கொண்டிருந்த போது நிழலாடியது. திரும்பிப் பார்த்தான். சிவா.

“வா சிவா. என்ன மேட்டர்?”

சிவாவின் க்யூபிக்கில்க்குள் வந்த சிவா, “உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் ரமேஷ். இங்க வேணாம். வெளிய போலாமா?”

ரமேஷுக்குள் குழப்ப சுனாமி. எதற்கு அழைக்கிறான்? ஒரு வேளை கஸ்டமர்கள் படுத்துகிறார்களோ?

“ஒரு நிமிசம். சிவா. நான் இந்த ஈ-மெயில் அனுப்பிட்டு வந்துடுறேன்”

குழப்பத்துடனே அந்த ஈ-மெயிலைத் தட்டி send பட்டனை அழுத்தி விட்டு எழுந்தான். Fall jacket எடுத்து அணிந்து கொண்டு சிவாவின் பின்னால் நடந்தான்.

இருவரும் லிஃப்டில் ஏறியதும், ஆர்வம் தாங்காமல் கேட்டான் “என்ன விசயம் சிவா? ஜோ எதுவும் சொன்னானா?”

“இல்ல ரமேஷ். இது அஃபிஷியல் இல்லை. கொஞ்சம் பெர்சனல்”

பேசிக் கொண்டிருக்கும்போதே லிஃப்ட் கீழ்தளத்தில் நின்றது. இருவரும் வெளியே வந்தனர். சிவா பையில் இருந்து ஒரு சிகரெட் எடுத்து பற்ற வைத்தான்.

“ரமேஷ், உங்க பேரண்ட்ஸ்க்கும் மஞ்சுவுக்கும் எதுவும் பிரச்சனையா?”

ரமேஷ் அதிர்ந்தான். இவன் எதற்கு இதைக் கேட்கிறான்?

“என்ன பிரச்சனை? அப்பிடி எதுவும் இல்லையே?”

“இல்ல சிவா. உங்கம்மா ரொம்ப கோவமா இருக்காங்க போல. உங்க மேரேஜ் லவ் மேரேஜ்னு எனக்குத் தெரியும். ஆனா இண்டர் கேஸ்ட் மேரேஜ்னு தெரியாது”

“யார் உங்கிட்ட சொன்னா?”

“உங்கம்மா அப்பா தான். நேத்து நான் தான அவங்கள வீட்டில இருந்து ஹாலுக்கு கூட்டிட்டு வந்தேன். அப்போ பேசினாங்க”

“என்ன சொன்னாங்க?”

“எங்க ரெண்டு பேரப் பத்திக் கேட்டாங்க. சொன்னோம். ஒரே மதமா, ஜாதியா, கல்யாணம் ஆகி எவ்வளவு நாளாச்சி, எத்தன பிள்ளைங்க அப்பிடி இப்பிடியேல்லாம் கேட்டுட்டு எங்க சொந்தத்துலயே நெறய படிச்ச பொண்ணுங்க இருக்கு. அதுகள கல்யாணம் செஞ்சி வச்சிருந்தா இன்னேரம் அஞ்சு வருசத்துல ரெண்டு பிள்ளைகளைப் பெத்துப் போட்டிருப்பாங்க. எங்கிருந்து பிடிச்சானோ இந்த வேற ஜாதிப் பொண்ண, ஒரு பிள்ளைக்கே திக்கித் திணற வேண்டியிருக்கு. அப்பிடின்னு சொன்னாங்க”

”அப்பிடியா சொன்னாங்க”

“ஆமா ரமேஷ். அவங்க பேசினதப் பாத்தா அவங்களுக்கு மஞ்சுவை சுத்தமா பிடிக்கலை மாதிரி இருக்கு. இந்த நேரத்துல ரொம்ப கேர்ஃபுல்லா பாத்துக்கணும். இப்பிடி இருந்தா அது மஞ்சுவுக்கும் நல்லதில்ல பிறக்கிற கொழந்தைக்கும் நல்லதில்ல”

“கரெக்ட்தான் சிவா”

“ஒரு ஃப்ரண்டா சொல்றேன். இந்தப் பிரச்சனைய உடனே தீர்க்கப் பாருங்க. இல்லைன்னா அவங்கள ஊருக்கு அனுப்பிட்டு மஞ்சுவோட அம்மா அப்பாவைக் கூட்டிக்குங்க”

“தேங்க்ஸ் சிவா. உனக்கு ஏற்கனவே எக்ஸ்பீரியென்ஸ் இருக்கிறது எங்களுக்கு ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருக்கு. மஞ்சுவோட பேரண்ட்ஸ் இப்போ தானே வந்துட்டுப் போனாங்க. அதோட என் மாமியாருக்கு லீவ் கிடைக்காது. அதுனாலதான் இவங்கள வரச்சொன்னேன். என்ன செய்யறதுன்னு நான் யோசிக்கிறேன்”

“எது செஞ்சாலும் சீக்கிரம் செய்யுங்க ரமேஷ். நாங்க கூட சொல்லிப் பாத்தோம். நீங்க ரெண்டு பேரும் ரொம்ப அன்பா இருக்கிறத, மஞ்சு உங்கள டேக் கேர் பண்ணிக்கிறதையெல்லாம். ஆனா அவங்க உங்க மேலயும் கோவமா இருக்காங்க. மஞ்சுவை தலைல தூக்கி வச்சிட்ட்டு ஆடுறீங்கன்னு சொல்றாங்க. என்னையும் ராஜியையும் அன்னிக்கித்தான் பாத்தாங்க. அதுக்குள்ளே எங்க கிட்ட இவ்வளவு சொல்றாங்கன்னா அவங்க மனசுல இன்னும் எவ்வளவு இருக்கோ தெரியலை. பாத்துக்குங்க ரமேஷ்”

“தேங்க்ஸ் சிவா. நான் இன்னிக்கே எங்கப்பா அம்மாக்கிட்ட பேசுறேன்”

சிவா சிகரெட்டின் கடைசி இழுப்பை இழுத்து விட்டு கீழே போட்டு நசுக்கினான். நசுங்கிய சிகரெட்டை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருந்தான் ரமேஷ். அந்த சிகரெட் துண்டில் அவன் முகம் பிரதிபலித்தது போல இருந்தது.

(தொடரும்)

6 comments:

Anonymous said...

Could not take sides :)

Chitra said...

நீங்க ரெண்டு பேரும் ரொம்ப அன்பா இருக்கிறத, மஞ்சு உங்கள டேக் கேர் பண்ணிக்கிறதையெல்லாம். ஆனா அவங்க உங்க மேலயும் கோவமா இருக்காங்க. மஞ்சுவை தலைல தூக்கி வச்சிட்ட்டு ஆடுறீங்கன்னு சொல்றாங்க. என்னையும் ராஜியையும் அன்னிக்கித்தான் பாத்தாங்க. அதுக்குள்ளே எங்க கிட்ட இவ்வளவு சொல்றாங்கன்னா அவங்க மனசுல இன்னும் எவ்வளவு இருக்கோ தெரியலை. பாத்துக்குங்க ரமேஷ்”


.......... :-( one of my friends, went through a similar situation.

vasu balaji said...

நல்லா போகுது

Unknown said...

"சிவா சிகரெட்டின் கடைசி இழுப்பை இழுத்து விட்டு கீழே போட்டு நசுக்கினான். நசுங்கிய சிகரெட்டை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருந்தான் ரமேஷ். அந்த சிகரெட் துண்டில் அவன் முகம் பிரதிபலித்தது போல இருந்தது."
பாடைப்பாளிக்கு மட்டுமே அகப்படும் நுட்பம்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

இதெப்ப நடந்தது? ரெண்டு நாள் வரலைன்னா என்னென்னெல்லாம் எழுதிட்டீங்க?

ம்ம்.. எனக்கும் இப்போ கஷ்டமாயிருக்கு.. என்னதான் கோவமிருந்தாலும் இந்த நிகழ்ச்சியில சந்தோஷமா கலந்துக்கனுமில்லயா பெரியவங்க ரெண்டு பேரும்? சாதி தான் எல்லாத்துக்கும் பிரச்சனையா? :(

Anisha Yunus said...

hello. unga blog fullaa theditten. uravugal 9ai kaanam. engengna vachinga?