Saturday, May 22, 2010

சவாலே சமாளி..

இது என்னுடைய ஐநூறாவது பதிவு. பதிவுலகத்துக்கு வந்து 9 மாதங்களுக்குள் ஐநூறு பதிவுகள் எழுதிவிட்டேனா என்று எண்ணிப்பார்க்கும் போது மலைப்பாகத்தான் இருக்கிறது. உங்களின் பேராதரவு இல்லாவிட்டால் நான் இப்படி எழுதித்தள்ளியிருக்க முடியாது என்பது தான் உண்மை. உங்களின் ஆதரவைத் தொடர்ந்து எனக்கு அள்ளித்தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நிற்க. இப்ப மேட்டருக்கு வருவோம். நமக்கு பதிவுலகத்துல ரெண்டு தோஸ்த்துங்க இருக்காங்க (ரெண்டு பேருதானான்னு கேக்கக் கூடாது). ஒரு நாள் சும்மா இல்லாம அவங்களை ஒரு சவாலுக்குக் கூப்பிட்டேன். அவங்களும் சரின்னு சொல்லிட்டாங்க.

என்ன சவாலா? வேற என்ன. கதை எழுதுறதுதான். கொஞ்ச நாளைக்கு முன்னால நம்ம விசா குடுத்த ஐடியால ஒரு பத்து பேரு ஒரு கதைய எழுதிக் கிழிச்சோம். இப்ப வெறும் மூணு பேருதான். இந்தத் தடவை இஷ்டத்துக்கு எழுதாம நான் குடுக்குற சிச்சுவேசனுக்கு எழுதணும்னு ஒரு கண்டிஷன். மேட்டரைப் பாருங்க இப்ப.

கேரக்டர் 1


ஹோட்டல் சரவண பவன்” என்ற பெயர்ப்பலகைக்குக் கீழ் அவன் நின்றிருந்தான். சற்றே பழுப்பு நிறமாயிருந்த வேட்டி. கக்கத்தில் பானு ஜுவல்லர்ஸ் என்று எழுத்துகள் நிறைந்த உப்பிய பிரவுன் நிறப் பை.

வெள்ளைச்சட்டையின் காலரில் அழுக்குப் படிந்து விடாமலிருக்க கழுத்தில் சுருட்டி வைக்கப் பட்டிருந்த கைக்குட்டை. சட்டைப்பையில் ஓரிரண்டு ரூபாய் நோட்டுக்கள் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தன. அவன் மாநிறக் கன்னத்தில் சற்றே அழுத்தமாகத் தெரிந்த விரல் அச்சுக்கள். இடது கை அனிச்சையாக கன்னத்தைத் தடவிக் கொண்டது.

“இந்தா சார் பீடா” பீடாக் கடைக்காரர் நீட்டிய பீடாவை வாங்கி கடைவாயில் உதப்பிக் கொண்டு வலது காலை ஸ்டைலாக பின்னால் தூக்கி வேட்டியின் ஒரு முனையை வலது கையால் பிடித்து நடக்க ஆரம்பித்தான். பேருந்து நிறுத்தம் வந்ததும் ரோட்டின் ஓரத்தில் இருந்த குப்பைத் தொட்டியில் புளிச்சென்று பீடாச்சாற்றைத் துப்பினான். கடைவாயோரத்தில் வழிந்த சாறை புறங்கையால் வழித்தான்.

அவன் ஏற வேண்டிய பேருந்து நிலையத்தினுள் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தது. ஓடிச்சென்று ஏறினான்.

“எங்க போவனும்?” என்று கேட்ட நடத்துனரிடம் இடத்தைச் சொல்லி பயணச்சீட்டைப் பெற்றுக் கொண்டான். பேருந்தில் நிற்க மட்டுமே இடம் இருந்தது. ஒரு இருக்கையின் சாய்மானத்தில் சாய்ந்து நின்று கொண்டான். ஹோட்டலில் நடந்ததை நினைத்துக் கொண்டான். அடித் தொண்டையில் ஏதோ கசந்தது.

அடுத்தடுத்த நிறுத்தங்களில் கூட்டம் மண்டியது. டிரைவர் திடீரென சடன் ப்ரேக் போட்டு விட்டு “சாவு கிராக்கி” என்று யாரையோ பார்த்து சன்னல் வழியே திட்டினார். சட்டென நிமிர்ந்தவன் தன் மீது வந்து விழுந்த அந்த மஞ்சள் சட்டைக்காரனின் சட்டையைக் கொத்தாகப் பிடித்து ‘ரப்’என்று அவன் கன்னத்தில் அறைந்தான்.

அவனைச் சுற்றி நின்றிருந்தவர்களும் உட்கார்ந்திருந்தவர்களும் அவனை ஆச்சர்யம் கலந்த ஆர்வத்துடன் பார்த்தார்கள். யாரோ ஒருவன் “இன்னாபா மேட்டரு?” என்று கேட்டான். இன்னொரு அறை விட்டு “பிளேடு போடுறான் சார். பிக்பாக்கெட் பன்னாட” என்றவாறு கூட்டத்தைப் பார்த்தான். அவன் முகத்தில் ஒரு பெருமிதம் மின்னியது.

கேரக்டர் - 2


அவளுக்காக அந்த பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தான் அவன். இது மூன்றாவது நாள் அவள் இந்த பஸ்ஸ்டாப்புக்கு வருவதை நிறுத்தி. காரணம்? மூன்று நாட்களுக்கு முன் நடந்த அந்தச் சம்பவம். அதை நினைத்தால் அவனுக்கு அவன் மீதே கோபம் கோபமாக வந்தது.

“ஹாய் ஸ்வாதி”

“ஷான், எத்தன தடவ உன்கிட்ட சொல்றது. என்னை ஸ்வானு கூப்புடுனு?”

“எங்கப்பாம்மா எனக்கு அழகா சண்முகம்னு பேரு வச்சிருக்காங்க. நீ என்னடான்னா அத ஷான்னு ஸ்டைலா கூப்புடுற. இந்த கால் செண்டர்ல வேலைக்குச் சேந்ததுல இருந்து உன் போக்கே சரியில்ல”

“அமெரிக்கன்ஸ் எல்லாம் அப்பிடித்தான் ஷான். பேரைச் சுருக்கிக் கூப்புடுவாங்க. நாமும் அப்பிடிக் கூப்புடலாமே?”

“அது இருக்கட்டும். நான் உங்கிட்ட ஒன்னு கேக்கனும் ஸ்வாதி.. சாரி ஸ்வா”

“கேளு ஷான்” என்று இவன் கண்களை ஊடுருவிப் பார்த்தாள். இவன் அதைக் கேட்டிருந்திருக்கக்கூடாது. கேட்டு விட்டான்.

இப்போது மூன்று நாட்களாக இவனைப் பார்ப்பதைத் தவிர்க்கிறாள். செல்லில் கூப்பிட்டாலும் எடுப்பதேயில்லை.

தூரத்தில் கடலை விற்கும் வண்டி மணியடித்துக் கொண்டே போனது. சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் பேட்டுகளோடு இன்று ஆடப் போகும் போட்டிக்கு ஸ்ட்ராட்டஜி டிஸ்கஷன் செய்து கொண்டிருந்தனர். காய்கறி வாங்கிக் கொண்டு செல்லும் மாமிகள் சலசலவென பேசிக்கொண்டே செனறனர். இவை எதுவும் அவனைப் பாதிக்கவில்லை. ஸ்வா ஸ்வா ஸ்வா. அவன் சுவாசம் முழுவதும் அவள் மட்டுமே நிரம்பியிருந்தாள்.

சட்டென நினைவுக்கு வந்தவனாகக் கலைந்தான். கையில் கட்டியிருந்த வாட்சில் மணி பார்த்தான். ட்யூட்டிக்கு செல்ல நேரமாகிவிட்டது. திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தான்.

அவன் வேலை செய்யும் இடம் வந்ததும் ஒரு நொடி நின்று நிமிர்ந்து பார்த்தான். “ஹோட்டல் சரவணபவன்” என்ற பலகையைப் பார்த்து ஒரு பெருமூச்சை வெளியிட்டு விட்டு உள்ளே நுழைந்தான்.

கேரக்டர் - 3


ஓரமாகப் போடப்பட்டிருந்த பெஞ்சில் இரண்டு பெண்கள் அமர்ந்திருந்தார்கள். இருவரின் அதீத மேக்கப்பும் தலை நிறைய மல்லிகையும் அவர்கள் பாலியல் தொழில் செய்பவர்கள் என்று சொல்லாமல் சொல்லின. “பட்டப்பகல்லயே தொழில் செய்ய வந்துட்டாளுவ” என்று சலித்தபடி எதோ எழுதிக்கொண்டிருந்தார் ரைட்டர். டீக்கடைப் பையன் ஒவ்வொரு போலீஸ்காரருக்கும் டீ கொடுத்துக்கொண்டிருந்தான்.

சுவற்றை ஒட்டிப் போடப்பட்டிருந்த மேஜைகளில் ஹெட் கான்ஸ்டபிளும் ரைட்டரும் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு நேர் எதிராகப் போடப்பட்டிருந்த மேஜையில் சப் இன்ஸ்பெக்டர். வெளியே ஒரு கான்ஸ்டபிள் யாரோ ஒருவரிடம் பேரம் பேசிக்கொண்டிருந்தார்.

சப் இன்ஸ்பெக்டர் தொப்பியக் கழற்றி வியர்த்திருந்த வழுக்கையை கர்ச்சீப்பால் துடைத்துக்கொண்டார். “யோவ் ஏட்டு. இன்ஸ்பெக்டர் எப்பயா வர்றேன்னு சொன்னாரு”

“கிளம்பிட்டார் சார். எப்ப வேணும்னாலும் வந்திடுவாரு”

“சரி அந்த கொலைக் கேஸ் விசயமா ஒருத்தனக் கூப்பிட்டு விட்டுருந்தோமே வந்துட்டானா?”

“வந்துட்டான் சார். வெளிய உக்கார வச்சிருக்கேன்”

வாசலில் ஜீப் நிற்கும் சத்தம் கேட்டது. ஸ்டேஷனில் சட்டென்று அனைவருக்கும் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது. சப் இன்ஸ்பெக்டர் தொப்பியை மாட்டிக்கொண்டு எழுந்து நின்றார்.

இன்ஸ்பெக்டர் ஒரு சிகரெட்டை வாயில் பொறுத்திப் பற்ற வைத்துக்கொண்டே உள்ளே நுழைந்தார். மூவரும் அவருக்கு சல்யூட் வைத்தனர்.

“ம்ம்ம்.. அந்த மர்டர் ரிலேட்டடா...”

“வந்துட்டான் சார். வெளிய உக்கார வச்சிருக்கேன்”

“என் ரூமுக்குள்ள வரச்சொல்லு. விசாரிப்போம்”

வெளியே அமர்ந்திருந்த அவன் முகம் லேசாக வெளிறியிருந்தது. அவன் அமர்ந்திருந்த அசவுகரியமான நிலை அவனுக்கு இந்த போலீஸ் ஸ்டேசன் சூழல் புதியது என்று படம் போட்டுக்காட்டியது.

எத்தனையாவது முறையாகவோ கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டான். இன்ஸ்பெக்டர் வந்து விட்டார். அவன் பார்த்த பல சினிமாக்களின் போலீஸ் விசாரணைக் காட்சிகள் நினைவுக்கு வந்து அவன் வயிற்றில் பட்டாம்பூச்சிகளைப் பறக்க விட்டன.

“சார். உங்களை இன்ஸ்பெக்டர் கூப்புடுறாரு” கான்ஸ்டபிள் வந்து சொல்லவும் எழுந்தான்.

இன்ஸ்பெக்டர் தனது நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். அவருக்கு எதிரே இருந்த டேபிள் கொஞ்சம் சுத்தமாக இருந்தது. கோப்புகள் எல்லாம் வலது கை ஓரத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இடது கை ஓரத்தில் இரண்டு தொலைபேசிகளும் ஒரு வயர்லெஸ் செட்டும் இருந்தனர். அவரது நோக்கியா N63 அவருக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்தது. அவருக்குப் பின்னால் இருந்த படத்தில் காந்தி பொக்கை வாய்ச் சிரிப்புடன் இருந்தார்.

“சொல்லுங்க மிஸ்டர் சுந்தரம். உங்களை எதுக்காகக் கூப்பிட்டு வந்திருக்காங்கன்னு தெரியுமா?”

“தெரியும் சார்”

“நேத்து ராத்திரி 8:00 மணிக்கு எங்க இருந்தீங்க?”

சரவணபவன்ல சாப்பிட்டுட்டு இருந்தேன் சார்”சம்பவம்

சரவணபவன் அன்று வழக்கத்தை விட கூட்டமாக இருந்தது. சாப்பிட வருபவர்களை டேபிளுக்கு அழைத்துச் சென்று அமர வைக்க ஆட்கள் யாரும் இல்லை. அதனால் ஒவ்வொரு டேபிளையும் நான்கு பேராவது சுற்றி “எப்படா எந்திரிப்பாய்ங்க” என்ற பார்வையுடன் நின்று கொண்டிருந்தார்கள்.

அவன் தட்டில் இருந்த மசாலா தோசையின் கடைசி விள்ளலை மிச்சமிருந்த மசாலாவோடு வாய்க்குள் தள்ளினான். சர்வர் எதிரில் இருந்தவருக்கு பூரியையும் இவன் முன் ஒரு காப்பி டபராவையும் வைத்துவிட்டு விலகினார். சைடில் இருந்த டிஷ்யூ பேப்பரில் கையைத் துடைத்து விட்டு டம்ப்ளரில் இருந்த காப்பியை டபராவில் ஊற்றி ஆற்ற ஆரம்பித்தான்.

பின்னால் நின்றிருந்த அவன் கழுத்தில் வைத்திருந்த கைக்குட்டையை எடுத்து முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டான். ‘அப்பாடா. காப்பி வந்திருச்சி. குடிச்சிட்டு எந்திருச்சிருவாப்ல’ என்று நினைத்துக்கொண்டு கர்சீப்பை சுருட்டி மீண்டும் காலருக்கு கழுத்துக்கும் இடையில் சொருகி வைத்துக் கொண்டான்.

இடது கக்கத்தில் இருந்த பையை வலது கக்கத்துக்கு மாற்றிக் கொண்டு தாடையச் சொறிந்து கொண்டான்.

அவன் கிச்சனில் இருந்து பனிரெண்டாம் நம்பர் டேபிளில் ஆர்டர் செய்திருந்த பொங்கலையும் வடையையும் பெரிய தட்டில் எடுத்துக் கொண்டு கிளம்பினான். கூட்டத்தைப் பார்க்க அவனுக்கு எரிச்சலாக வந்தது. ஓரமாகவும் நிற்க மாட்டார்கள். சர்வரும் மனுசன் தான் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை. கேவலமாகப் பார்க்கிறார்கள். அடிமையைப் போல நடத்துகிறார்கள். நல்ல ஒரு வேலை கிடைத்தால் இதை விட்டுவிட்டுப் போய்விட வேண்டும்.

எதை எதையோ யோசித்துக்கொண்டே நடந்தவன் அங்கே நின்றுகொண்டிருந்தவன் மீது இடித்தான்.

பெரிய தட்டைக் கையில் கொண்டு போன அந்த சர்வர் இடித்ததும் நிலைகொள்ளாமல் முன்னால் அமர்ந்து காபி குடித்துக்கொண்டிருந்தன் மீது தடுமாறி விழுந்தான். அவன் கக்கத்தில் இருந்த கைப்பை தவறி முன்னால் இருந்தவன் மீது விழுந்தது.

திடீரென்று மேலே வந்து விழுந்தவுடன் அதிர்ச்சியில் கையில் இருந்த காப்பி டம்ப்ளரை நழுவ விட்டான். காபி மொத்தமும் மடியில் கொட்டியது. சட்டென்று கோபம் வர எழுந்து மேலே வந்து விழுந்தவனை இடது கையால் ஒதுக்கி வலது கையால் அவன் கன்னத்தில் பலமாக ஒரு அறை விட்டான். “ஏண்டா ஒழுங்கா மனுசன சாப்புட விடமாட்டீங்க? பின்னாடியே வந்து வந்து நின்னுக்கிட்டு”

கன்னத்தில் அறை வாங்கியவன் அதிர்ச்சியில் பேச வார்த்தையின்றி இருந்தான். கன்னத்தில் கை விரல்கள் அச்சாகப் பதிந்துவிட்டிருந்தன. கீழே விழுந்த கைப்பையை எடுக்கக் கூட தோன்றாமல் நின்றுகொண்டிருந்தான்.

அடுத்த அடி அடிக்கக் கையை ஓங்கினான் அவன். குறுக்கில் பாய்ந்து தடுத்தான் சர்வர். “சார் அவர் மேல தப்பில்ல சார். நான் தான் சார் அவர்மேல இடிச்சிட்டேன். மன்னிச்சிருங்க சார்” என்று கத்திக்கொண்டே இருவருக்கும் இடையில் புகுந்தான்.

“நீ மட்டும் ஒழுங்கா?” என்று ஓங்கியக் கையை சர்வரின் முகத்தில் இறக்கினான். அவன் கையில் வைத்திருந்த பொங்கலும் வடையும் தரையில் சிதறியது. ஆட்கள் வேடிக்கைப் பார்க்கத் துவங்கிவிட்டனர்.

கல்லாவிலிருந்தவர் ஓடி வந்தார். “சார் சார் என்ன பிரச்சனை?”

“காப்பியத் தட்டி விட்டுட்டானுங்க. என்னான்னு கேளுங்க.” மேஜையின் மீதிருந்த டிஷ்யூவை எடுத்து சட்டையில் கொட்டியிருந்த காபியைத் துடைக்க ஆரம்பித்தான்.

“சார் நீங்க பாத்ரூம்ல போய் தண்ணி ஊத்தி க்ளீன் பண்ணுங்க சார். காப்பிக் கறை போவாது” யாரோ ஒருவர் யோசனை சொன்னார்.

அலுத்துக்கொண்டே பாத்ரூமை நோக்கி நடந்தான்.

கல்லாவில் உட்கார்ந்திருந்தவர் சர்வரை நோக்கித் திரும்பினார். “டேய் நீ எப்பப்பாரு இப்பிடி எதயாவது இழுத்து வச்சிக்கிட்டே இருக்க. நீ வேலை முடிஞ்சதும் முதலாளியப் போயி பாரு. இன்னியோட உன் வேலைக்கு வேட்டு வைக்கிறேன் பாரு” என்று சொல்லிவிட்டு கல்லாவை நோக்கி நடந்தார்.

அவன் போகிறவரின் முதுகையே வெறித்தான். முதலில் அடிவாங்கியவரைப் பார்த்துத் திரும்பினான். “சார் மன்னிச்சுக்குங்க சார். நான் செஞ்சத் தப்புக்கு உங்கள அடிச்சிட்டாரு அந்த படிச்ச முட்டாள். தயவு செஞ்சு மன்னிச்சுக்குங்க சார்”

“பரவாயில்லப்பா. மன்னிப்புக்கேக்க வேண்டிய ஆளு அங்க போயிட்டாரு. இதால உனக்கு வேலை போயிருமேன்னு நினைச்சாக் கஷ்டமா இருக்கு”

“பரவாயில்ல சார். நான் முதலாளி கையில கால்ல விழுந்து கேட்டுப் பாக்கிறேன். இல்லைன்னா வேற வேலை தேடிட்டுப் போறேன். வர்றேன் சார்” என்று கீழே கிடந்த பொங்கலையும் வடையையும் சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.

********************************************

இப்ப என்ன சவால்.

முதல் கேரக்டரை வச்சி சிங்கை சிங்கம் பிரபாகரும், இரண்டாவது கேரக்டரை வச்சி போதிமரத்தடி ஷங்கரும், மூணாவது கேரக்டரை வச்சி ஃப்ரடரிக் ஃபோர்சித்தும் எழுதப்போறாங்க.

அது எப்பிடி இருக்குன்னு அவுங்க அவுங்க கடைக்குப் போயிப் பாருங்க பாஸ்.

(அது சரி, நான் ஐநூறு பதிவு எழுதியிருக்கேனான்னு எண்ணி சரி பாக்குற அளவுக்கா வேலை வெட்டி இல்லாம இருக்கீங்க?)

28 comments:

எல் கே said...

//(அது சரி, நான் ஐநூறு பதிவு எழுதியிருக்கேனான்னு எண்ணி சரி பாக்குற அளவுக்கா வேலை வெட்டி இல்லாம இருக்கீங்க?)//

இப்படிலாம் கிளம்பி இருக்கீங்களா??

கதை நல்லாத்தான் இருக்கு

க.பாலாசி said...

//(அது சரி, நான் ஐநூறு பதிவு எழுதியிருக்கேனான்னு எண்ணி சரி பாக்குற அளவுக்கா வேலை வெட்டி இல்லாம இருக்கீங்க?)//

மொத பலி நான்தான்னு நினைக்கிறேன்... உங்கள நம்பி எண்ணிப்பாத்தேன் பாருங்க... என்னையச்சொல்லணும்....

க.பாலாசி said...

சரி..எதுக்கும் இருக்கட்டும்..... 150 வது இடுகைக்கு வாழ்த்துககள்....

Unknown said...

@L.K - வாங்க வாங்க.

@க.பாலாசி - முதல் பலி நீங்க தான் பாலாசி..

மறுபடியும் - க.பாலாசி - 150 செல்லாது. ரெண்டு மீள்பதிவு போட்டிருக்கேன்.. :)))

ARV Loshan said...

(அது சரி, நான் ஐநூறு பதிவு எழுதியிருக்கேனான்னு எண்ணி சரி பாக்குற அளவுக்கா வேலை வெட்டி இல்லாம இருக்கீங்க?)
//

அடப் பாவி.. அதுக்குள்ளயா என்று அசந்து போய் வாழ்த்து சொல்ல வந்தா, இப்படியா?
ம்ம்ம் நடத்துங்க..

ஆனால் கதையை தொடராக அஞ்சல் செய்யும் முயற்சி கலக்கல்.. வாழ்த்துக்கள்..


//சரி..எதுக்கும் இருக்கட்டும்..... 150 வது இடுகைக்கு வாழ்த்துககள்...//
:)

Prathap Kumar S. said...

//(அது சரி, நான் ஐநூறு பதிவு எழுதியிருக்கேனான்னு எண்ணி சரி பாக்குற அளவுக்கா வேலை வெட்டி இல்லாம இருக்கீங்க?)//

வருசக்கணக்கா எழுதறவனுக்கே 500 தொடறதுக்கு நாக்குதள்ளுது... ஒன்பது மாசத்துல 500ன்னா... நான் எண்ணிப்பார்க்கவே இல்ல குரு...

எம்.எம்.அப்துல்லா said...

500 வது இடுகைக்கு வாழ்த்துகள். மிகவும் மகிழ்கிறேன்.

எம்.எம்.அப்துல்லா said...

//அது சரி, நான் ஐநூறு பதிவு எழுதியிருக்கேனான்னு எண்ணி சரி பாக்குற அளவுக்கா வேலை வெட்டி இல்லாம இருக்கீங்க //

இது முழுசா படிச்சவுடன் போடும் பின்னூட்டம்.

150 வது இடுகைக்கு வாழ்த்துகள். மிகவும் வருந்துகின்றேன் :)

ஈரோடு கதிர் said...

//முகிலன் said...
ரெண்டு மீள்பதிவு போட்டிருக்கேன்.. :)))//

மீள் இடுகை போட்டா பழைய இடுகைய அழிக்க மாட்டீங்களோ!!!!

என்ன்ன்ன்ன்னா வெளையாட்டு இது ஸ்மால்புள்ளத் தனமா!!!???

settaikkaran said...

ஐநூறு இடுகை கண்ட அபூர்வ பதிவாளர் என்ற பட்டத்தை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். :-)

ஈரோடு கதிர் said...

சிங்கம் சிங்கைல இல்ல....

ஜெய்லானி said...

ஹி..ஹி.. தலைப்ப பாத்துட்டு ஒரு நிமிஷம் நானே நம்பிட்டேன். கதையைதான் தலைக்கீழா எழுதுவீங்கன்னு பாத்தா தலைப்ப கூடவா ?
இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல!!!

Chitra said...

148 + 2 posts. ...Congratulations!

க‌ரிச‌ல்கார‌ன் said...

ரெண்டு மீள்ப‌திவுக்கு வாழ்த்துக்க‌ள்

Anonymous said...

ஐநூறாவது பதிவு படிச்சேன் நல்லா இருக்கு வாழ்த்துக்கள் ...

Paleo God said...

ஹி ஹி

http://palaapattarai.blogspot.com/2010/05/blog-post_22.html

போட்டாச்சு போட்டாச்சு!

Paleo God said...

என்னது சிங்கம் சிங்கைல இல்லையா?????? முகிலன் நோட் திஸ் பாயிண்ட்!

கலகலப்ரியா said...

150-வது பதிவுக்கு வாழ்த்துகள்..... ஒவ்வொண்ணா எண்ணிக் கண்டுபுடிச்சோமாக்கும்.. :o) தொடர் கதையா... ஆகா... நடத்துங்கப்பு... நடத்துங்க..

சீக்கிரம் ஒரு நாவல் எழுதுங்க.. வாங்கி ஷெல்ஃப்லயாவது வைக்கலாம்..

கலகலப்ரியா said...

||
மறுபடியும் - க.பாலாசி - 150 செல்லாது. ரெண்டு மீள்பதிவு போட்டிருக்கேன்.. ||

க்ரிக்கெட்டில ஒரு ஒன்னு- ரெண்டு பதிவு இருக்கும்ல.. .அதயும் சேர்த்து சொல்லியிருப்பாய்ங்க..

க.பாலாசி said...

//சிறுவர்கள் சிலர் கிரிக்கெட்//

இந்த கிர்ர்ரிக்கெட்ட வுடமாட்டீங்க போலருக்கே...

சரி... அந்த கொலை?????????? இப்டி முடிக்காம உட்டுட்டீங்களே....

நாடோடி said...

வித்தியாச‌மா தொட‌ர்க‌தை ஆர‌ம்பிச்சீருக்கீங்க‌ ... அவ‌ங‌க் க‌டையில் போய் பார்க்கிறேன்..

எம்.எம்.அப்துல்லா said...

//sandhya said...
ஐநூறாவது பதிவு படிச்சேன் நல்லா இருக்கு வாழ்த்துக்கள் ...

//

:)))

Subankan said...

//அது சரி, நான் ஐநூறு பதிவு எழுதியிருக்கேனான்னு எண்ணி சரி பாக்குற அளவுக்கா வேலை வெட்டி இல்லாம இருக்கீங்க?//

ஆகா, வாழ்த்தலாம்னு பார்த்தா கடைசியில வாரிவிட்டுட்டீங்களே

rajasundararajan said...

கதை நல்லா வந்திருக்கு. ஸ்டைலும் நல்லா இருக்கு. 'சரவண பவன்'ன்னு உள்ளபடி போட்டுட்டீங்க. (ஆமா அங்கெ அப்படித்தான் இருக்கு கூட்டம். அம்மாம் விலைல சாப்பிடுற ஆளுங்க இம்புட்டு இருக்காங்க பாருங்க நாட்ல!) கொலை விழுந்தாலும் ஆறுதலாத்தான் இருக்கும். ஆமா, அந்தக் கொலை மேட்டரை ஃப்ரெட்ரிக் ஃபோர்ஸித் எழுதப்போற கதையில படிச்சுத் தெரிஞ்சுக்கணுமாக்கும்?

அப்பால, அந்தப் பஸ்ல பிக்பாக்கெட் லாஜிக் ஸூப்பர்!

500ஆவது பதிவா இல்லைன்னாலும் வாழ்த்துகள்.

Anonymous said...

//(அது சரி, நான் ஐநூறு பதிவு எழுதியிருக்கேனான்னு எண்ணி சரி பாக்குற அளவுக்கா வேலை வெட்டி இல்லாம இருக்கீங்க?)//

உங்கள நம்பி எண்ணிப்பாத்தேன் பாருங்க... என்னையச்சொல்லணும்....

Same here. (@($*#&^$&#Q*)

I counted a couple of times actually. =((

Anonymous said...

ஐநூறோ இல்ல நூத்தம்ப்பதோ. எத்தனை இருந்தாலும் என்னை விட அதிக பதிவுகள் எழுதியிருக்கீங்க.

வாழ்த்துக்கள்

Unknown said...

@லோஷன் - நன்றி

@நாஞ்சில் பிரதாப் - நன்றி

@எம்.எம்.அப்துல்லா - ஹா ஹா ஹா

@ஈரோடு கதிர் - இந்த விதியேல்லாம் தெரியாதுங்களே..

@சேட்டைக்காரன் - முழுசா படிச்சப்புறந்தான் இந்த பட்டத்தை வழங்குறீங்கன்னு நம்பறேன்

@ஈரோடு கதிர் - இந்தியா வரப்போவுதுன்னு கேள்விப்பட்டேன். இன்னைக்கி பேசிட்டேன்.

@ஜெய்லானி - நீங்கதான் கடைசியில இருந்து படிக்கிறவராச்சே

@சித்ரா - டேங்ஸ்

@கரிசல்காரன் - லொள்ளு?

@சந்த்யா - இடுகையப் படிக்காம பின்னூட்டம் போடுறீங்களா சந்தியா? இல்ல கடைசி வரிய மிஸ் பண்ணீட்டிங்களா?

@ஷங்கர் - படிச்சேன். பின்னூட்டிட்டேன். பாயிண்ட் நோட்டட். சென்னை வந்தும் உங்களச் சந்திக்காம போனத மட்டும் என்னான்னு கேளுங்க.. (அய்யா கோத்து விட்டாச்சி)

@கலகலப்ரியா - நன்றி. நாவல் எழுத ஊக்கப்படுத்தியதற்கும் நன்றி. அதே மாதிரி யாராவது ஏமாந்த பதிப்பகம் கிடைச்சா சொல்லுங்க.

@க.பாலாசி - அதையெப்பிடி விடுறது. கொலை தொடரும்.. (கதைன்னு போட்டிருக்கணுமோ?)

@நாடோடி - நமக்கு புளப்பே இதுதாங்க

@எம்.எம்.அப்துல்லா - ஹி ஹி ஹி

@சுபாங்கன் - நன்றி சுபாங்கன்

@ராஜசுந்தரராஜன் - நம்பமுடியவில்லை - என் மொக்கையை எல்லாம் படிப்பீங்களான்னு.
சரவணபவன்ல இருந்து கேஸ் போடவா போறாங்க. அப்பிடியே போட்டா எத்தன கடை இந்தியாவுல சரவணபவன்னு நடத்திக்கிட்டிருக்காங்க. அதுல ஒண்ணுனு சொல்லித் தப்பிச்சிருவேன்.. ஹி ஹி ஹி..

மறுபடி வருகைக்கு நன்றி சார்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//உங்களின் ஆதரவைத் தொடர்ந்து எனக்கு அள்ளித்தருமாறு கேட்டுக் கொள்கிறேன்//

அதெல்லாம் அம்பூட்டு சுலபமா தந்துட முடியாது..

லிட்டில் வழக்கம் போல சூப்பர் ஸ்டைலா போஸ் கொடுத்திருக்கிறாரு.. :)

கதைய இன்னமும் படிக்கல.. நாளைக்கு படிச்சிட்டு வந்து உளறிக்கொட்டறேன்..