Showing posts with label கனவு தேசம். Show all posts
Showing posts with label கனவு தேசம். Show all posts

Sunday, April 10, 2011

கனவு தேசம் - 6

கார் வாங்குவது வரை பார்த்தாயிற்று. அதை விட அத்தியாவசியமான ஒன்று இருக்கிறது. அதுதான் செல்ஃபோன். செல்ஃபோன் பற்றி பார்க்கும் முன்பு க்ரெடிட் ஹிஸ்டரி என்ற வஸ்துவைப் பார்த்துவிடலாம்.

அமெரிக்காவில் வசித்து வருபவர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கக் கூடிய ஒன்று இருக்கிறதென்றால் அது க்ரெடிட் ஹிஸ்டரி. அமெரிக்காவில் இதை க்ரெடிட் ஸ்கோர் என்ற எண்ணின் மூலமாகச் சொல்வார்கள்.

க்ரெடிட் ஸ்கோர் என்பது என்ன? ஒரு நபரின் Credit Worthiness - கடன் வாங்கும் தகுதியை நிர்ணயம் செய்வது இந்த க்ரெடிட் ஸ்கோர். கடன் அட்டை அல்லது கடன் (கார், வீடு முதலிய) வழங்கும் வங்கிகள், தொலைபேசி நிறுவனங்கள், செல்பேசி நிறுவனங்கள், மின்சாரம் வினியோகம் செய்யும் நிறுவனங்கள், கார் இன்ஷ்யூரன்ஸ் நிறுவனங்கள் இவை அனைத்தும் தங்கள் சேவையை ஒருவருக்கு வழங்கும் முன்பு அவரது க்ரெடிட் ஸ்கோரைப் பார்த்துவிட்டு அதற்கு ஏற்ற மாதிரிதான் சேவையை வழங்கும். நல்ல க்ரெடிட் ஸ்கோர் இருந்தால் குறைந்த வட்டிக்கு கடன் கிடைக்கும், அதிக க்ரெடிட் லிமிட்டோடு கடன் அட்டை கிடைக்கும், டெபாசிட் இல்லாமல் செல்ஃபோன் மற்றும் தொலைபேசி நிறுவனங்கள் தங்கள் சேவையை வழங்கும், குறைந்த ப்ரீமியத்தில் இன்ஷ்யூரன்ஸ் கிடைக்கும். ஆக ஒருவர் நல்ல க்ரெடிட் ஹிஸ்டரியை வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகிறது.

இந்த கிரெடிட் ஹிஸ்டரியை யார் பராமரிக்கிறார்கள்? அமெரிக்காவில் இருக்கும் அத்தனை பேரின் பொருளாதார பரிமாற்றங்கள் அனைத்தையும் அவர்கள் சேமித்து வைக்க வேண்டுமே? இதைச் செய்பவர்கள் தான் கிரெடிட் பீரோக்கள். அமெரிக்காவில் இருக்கும் அத்தனை சோசியல் செக்யூரிட்டி எண் உள்ளவர்களின் க்ரெடிட் நிலவரத்தை சேமித்து வைத்து வருவார்கள். இவர்களிடமிருந்தே கிரெடிட் ஸ்கோர் பெறப்படும்.

சரி, கிரெடிட் ஹிஸ்டரி எப்படி கட்டியமைப்பது?

நல்ல க்ரெடிட் ஹிஸ்டரி என்பதை, கடன் வாங்காமலே இருந்தால் கட்டமைக்க முடியாது. வாங்கிய கடனை சரியான நேரத்தில் திருப்பிக் கட்டியிருந்தாலே நல்ல ஹிஸ்டரி கட்டமைக்க முடியும்.

அமெரிக்காவில் சென்று இறங்கிய பட்சத்தில் கடன் கொடுக்க யார் தயாராக இருப்பார்கள்? கடன் வாங்காமல் கட்டமைக்க முடியாதென்றால் புதிதாக அமெரிக்கா செல்பவர் எப்படி க்ரெடிட் ஹிஸ்டரி உருவாக்குவது? இப்படிப்பட்டவர்களுக்காகவும், அதல பாதாளத்தில் விழுந்து போன க்ரெடிட் ஸ்கோரை சீரமைக்க முயற்சிப்பவர்களுக்காகவும் வங்கிகள் கொண்டு வந்ததுதான் Secured Credit Card. இது வழக்கமான க்ரெடிட் அட்டை போல எல்லா இடங்களிலும் உபயோகிக்க முடியும். மற்ற அட்டைகளுக்கும் இதற்கும் இருக்கும் ஒரு வித்தியாசம், இந்த அட்டை பெறுவதற்கு ஒரு செக்யூரிட்டி டெபாசிட் வங்கியில் ஏற்படுத்த வேண்டும். அந்த டெபாசிட் தொகையைப் பொறுத்து க்ரெடிட் லிமிட் வழங்கப்படும். அந்த அட்டையில் உங்கள் நடவடிக்கைகள் மாதாமாதம் க்ரெடிட் பீரோக்களுக்கு அனுப்பி வைக்கப்படும். சிறிது காலம் க்ரெடிட் ஹிஸ்டரி கட்டமைத்த பின்னர் அடுத்த கட்டமாக unsecured credit card - எதாவது ஒரு வங்கியில் விண்ணப்பிக்க வேண்டும். ஒருவேளை எதாவது ஒரு வங்கி உங்கள் விண்ணப்பத்தை நிராகரித்து விட்டால், அடுத்தடுத்து பல வங்கிகளில் முயற்சிக்காதீர்கள். அது உங்கள் கிரெடிட் ஸ்கோரை இன்னும் நாசப்படுத்தும். நிராகரிக்கப் பட்டால் இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்கு உங்கள் செக்யூர்ட் க்ரெடிட் கார்டை உபயோகப் படுத்துங்கள். அதன் பிறகு இன்னொரு வங்கியில் முயற்சி செய்யுங்கள்.

Digital Credit Unit - DCU என்று ஒரு வங்கி இருக்கிறது. இதை Desi Credit Union என்று கேலியாகச் சொல்வார்கள். இந்த வங்கியில் கணக்கு துவங்கினால், $3000 டாலர் கிரெடிட் லிமிட்டோடு ஃப்ரீ கிரெடிட் கார்டு தருவார்கள். குறைந்த வட்டியில் $25000 வரை கார் லோனும் தருவார்கள். இந்த வங்கியின் மூலம் பயனடைந்த தேசிகள் அதிகம்.

 கிரெடிட் ஸ்கோரை பாதிக்கக் கூடிய பரிமாற்றங்கள் என்ன என்ன? அவற்றை எப்படி சரி செய்வது?

கிரெடிட் ஸ்கோரை FICO Score என்று சொல்வார்கள். கீழ்க்கண்ட பகுதிகள் கிரெடிட் ஸ்கோரைத் தீர்மானிக்கின்றன.

35% - Payment History - அதாவது கிரெடிட் கார்ட் பில், செல்ஃபோன் பில், தொலைபேசி பில், மெடிக்கல் பில் - போன்றவற்றை நேரத்துக்கு கட்டி வருவது. எதாவது பில் ட்யூ டேட் தவற விட்டால் அது கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும். நேரா நேரத்துக்கு பில் கட்டுவது, கிரெடிட் ஸ்கோரை உயர்த்தும்.
30% - Credit Utilization - அதாவது, உங்கள் ரிவால்விங் கிரெடிட்டில் எந்த சதவீதத்தை நீங்கள் உபயோகப் படுத்தி உள்ளீர்கள் என்பது. உதாரணமாக உங்கள் கிரெடிட் கார்டின் லிமிட் $1000 என்று வைத்துக்கொள்வோம். ஒரு மாதத்துக்கு நீங்கள் $800 க்கு அந்த அட்டையை உபயோகிக்கிறீர்கள் என்றால் 80% உங்கள் ரிவால்விங் கிரெடிட்டை உபயோகிக்கிறீர்கள் என்று அர்த்தம். இது டேஞ்சர். இந்த சதவீதத்தை 50%க்குக் கீழ் வைத்திருப்பது நலம்.
15% - Length of Credit History - எத்தனை வருடங்களுக்கு உங்கள் கிரெடிட் ஹிஸ்டரி இருக்கிறது என்பது. அதிகமாக இருப்பது நல்லது.
10% - Types of Credits used - என்ன வகையான கடன்கள் வைத்திருக்கிறீர்கள் என்பது. பலவகையான கடன்கள் வைத்திருப்பது கிரெடிட் ஸ்கோரை உயர்த்த உதவும்
10% - Recent Search for credit - உங்கள் கிரெடிட் ஹிஸ்டரியைப் பற்றிய விசாரணைகள். நீங்கள் புது கடனுக்கு விண்ணப்பிக்கும்போதெல்லாம் இங்கே வந்து எண்ட்ரிகள் விழும். அதிக விசாரணைகள் இருப்பது கேடு. நீங்களே உங்கள் கிரெடிட் ஸ்கோரை விசாரிப்பது இதில் வராது.

ஆக மேலே உள்ளவற்றை சரியாகக் கண்ட்ரோல் செய்தால் நல்ல க்ரெடிட் ஸ்கோரோடு பிழைக்கலாம்.

அமெரிக்க வாழ்க்கை கிரெடிட் ஸ்கோரோடு பின்னி பிணைக்கப்பட்டது. ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒரு $250 மெடிக்கல் பில் கட்ட விட்டுவிட்டீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். இப்போது வீடு வாங்கலாம் என்று லோன் அப்ளை செய்தால், நீங்க அஞ்சு வருசத்துக்கு முன்னாடி $250 கட்டலை, அதைக் கட்டிட்டு வாங்க லோன் தர்றோம் என்று சொல்வார்கள். அதனால் இதில் தப்பெதுவும் செய்யாமலிருப்பது நலம்.

இப்போது செல்ஃபோன் வாங்கும் விசயத்துக்கு வருவோம். செல்ஃபோன் ப்ளான் வாங்க வேண்டுமென்றால் நல்ல கிரெடிட் ஹிஸ்டரி தேவை. கிரெடிட் ஹிஸ்டரி இல்லையென்றால் டெபாசிட் கட்டச் சொல்வார்கள். பெரும்பாலான இந்தியர்கள் வந்து இறங்கியதும் டெபாசிட் கட்டி செல்ஃபோன் வாங்கிவிடுவார்கள். (நான் 6 மாதங்கள் வரை ப்ரிபெய்ட் ஃபோன் வைத்திருந்தேன்).

செல்ஃபோன்கள் அமெரிக்காவில் மிகவும் சல்லிசாகக் கிடைப்பதை வெளிநாட்டில் இருப்பவர்கள் பார்த்திருக்கலாம். ஐஃபோன் 4 $200க்கு, HTC HD7 $0க்கு என்றெல்லாம் கிடைக்கும். பெரும்பாலான ஃபோன்கள் இலவசமாகவே கிடைக்கும். ஆனால் அதற்குப் பின்னால் இருக்கும் கேட்ச் தான் முக்கியம். பெரும்பாலான ஃபோன்கள் நெட்வொர்க் ப்ரொவைடர்களோடு பிணைக்கப் பட்டிருக்கும். அந்த ஃபோன்களை Locked Phones என்று அழைப்பார்கள். உதாரணமாக ஐஃபோனை AT&T நிறுவனத்துடன் மட்டுமே உபயோகிக்க முடியும். (இப்போது Verizon நிறுவனத்தோடும் உபயோகிக்கும் வண்ணம் கொண்டு வந்துள்ளார்கள்). இந்த ஃபோன்களை குறைந்த விலையில் வாங்குவதற்கு நெட்வொர்க் நிறுவனங்களோடு காண்ட்ராக்ட் போடவேண்டும். குறைந்த பட்சம் ஒரு வருடத்திலிருந்து 2 வருடங்கள் வரை அந்த கம்பெனியுடனே இருப்பேன் என்று ஒப்பந்தம் போடவேண்டும். இந்த ஒப்பந்தத்தை முறித்தால் பெனால்டி கட்ட வேண்டியதோடு கிரெடிட் ஹிஸ்டரியையும் பாதிக்கும்.

$200 க்கு ஐஃபோன் வாங்கி இந்தியாவுக்குக் கடத்த இயலாது. அப்படியே கடத்திக் கொண்டு வந்தாலும், ஃபோனை அன்லாக் செய்து உபயோகிக்க வேண்டும். அன்லாக் செய்து உபயோகிப்பதில் இருக்கும் வம்பு என்னவென்றால், சாஃப்ட்வேர் அப்டேட் செய்ய முடியாது. செய்தால் மறுபடியும் லாக் ஆகிவிடும். சாம்சங் கேலக்ஸி என்ற ஆண்ட்ராய்ட் ஃபோனும் வைத்திருக்கிறேன். அதை அப்க்ரேட் செய்யவே முடியவில்லை. சாம்சங்கைக் கேட்டால் AT&Tயைக் கேள் என்கிறார்கள். AT&Tயைக் கேட்டால் சாம்சங்க் இன்னும் அப்ட்டேட்ட OS அனுப்பவில்லை என்கிறார்கள்.  

இரண்டு வருடங்கள் மாதம் வாய்ஸ் ப்ளான் குறைந்த பட்சம் $40ம், டேட்டா ப்ளான் $15ம் கட்ட வேண்டும். அதில் செல்ஃபோனுக்குக் குறைத்த காசைப் பிடித்துவிடுவார்கள்.

மேலும் பார்ப்போம்

Friday, September 3, 2010

ரஜினியும் முதல்வன் பட வசனமும்

முதல்வன் படத்தின் வசனம் இது:

முதல்வர் அர்ஜூன் களைப்பில் படுக்கையில் படுத்துக்கொண்டிருப்பார். அவர் தாய் அவர் கையில் மருதாணி வைத்துக் கொண்டிருப்பார். அப்போது அவர் தந்தை, “விசிஆர்ல இருக்கிற மாதிரி ஒரு ரீவைண்ட் பட்டன் லைஃப்லயும் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்?” என்பார்.

அப்படி ஒரு வசதி ரஜினிக்குக் கிடைக்கிறது.

ரஜினி அறிக்கை: என் மகளின் திருமணத்திற்கு சென்னையின் போக்குவரத்து மற்றும் இட நெருக்கடி காரணமாக ரசிகர்களை அழைக்க முடியவில்லை. அதற்காக வருந்துகிறேன்.
பத்திரிகைகள்: ரசிகர்கள் வரவேண்டாம் - ரஜினி அறிக்கை
பதிவர்கள்: ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தவனுக்கு அழைப்பில்லையாம்.
ரஜினியின் வளர்ச்சி ரசிகனின் வீழ்ச்சி

ரஜினி: ம்ம்ம்.. இப்பிடி ஒரு அறிக்கை விட்டதுதான் தப்போ. பேசாம ரீவைண்ட் பண்ணி ஒன்னும் சொல்லாம இருந்திரலாம்

ரஜினி அறிக்கை: ம்ஹூம்.
பத்திரிகைகள்: ரசிகர்களுக்கு அழைப்பு இல்லை - ரஜினி ரசிகர்களைப் புறக்கணிக்கிறார்.
பதிவர்கள்: தனது படங்களுக்கு 500, 1000 என்று மனைவியின் தாலியை விற்று டிக்கெட் எடுத்துப் பார்த்த ரசிகனை அழைக்கவேண்டாம். ஏன் அழைக்க முடியவில்லை என்று ஒரு அறிக்கையாவது விட வேண்டாமா?.
இப்படியா கள்ள மவுனம் சாதிப்பது?
ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கிறார் ரஜினி.

ரஜினி: இதுவும் தப்பா.. பேசாம ரீவைண்ட் பண்ணி எல்லாரையும் கூப்பிட்டு நேரு உள்விளையாட்டு அரங்கத்துல வச்சிரலாம் கல்யாணத்தை.

ரஜினி அறிக்கை: என் மகளின் திருமணம் அனைத்து ரசிகர்களும் கலந்து கொள்ளுமாறு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும். என் உயிருனும் மேலான ரசிகர்கள் அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியருளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பத்திரிகைகள்: வளர்ப்பு மகன் திருமணத்தை விஞ்சும் வகையில் ஆடம்பரமாக ரஜினியின் மகள் திருமணம்.
பதிவர்கள்: இத்தனை கோடி செலவு செய்து ஒரு திருமணம் நடத்த வேண்டுமா? அந்தக் காசில் எத்தனை ஏழைகளைப் படிக்க வைத்திருக்கலாம்?
ஒரு நாளைக்கு 6000 குழந்தைகள் பசியால் இந்தியாவில் இறக்கின்றன. இந்தப்பணத்தில் எத்தனை குழந்தைகளைக் காப்பாற்றி இருக்கலாம்.
இந்தப் பணம் எப்படி இவருக்கு வந்தது? கறுப்புப் பணத்தை எதிர்த்து சிவாஜி படத்தில் போராடிய இவர் கறுப்பில்லாமல் இவ்வளவு பணம் எப்படிச் சேர்த்தார்?

ரஜினி: போச்சுடா.. இதுவும் தப்பா. ரீவைண்ட். காதும் காதும் வச்ச மாதிரி திருப்பதியில கல்யாணத்த முடிச்சிட்டு திரும்பிடலாம்.

ரஜினி அறிக்கை: மூச்..
பத்திரிகைகள்: ரஜினி மகள் ரகசியத் திருமணம். ரஜினிக்குத் தெரியுமா? அவர் கருத்தென்ன?
பதிவர்கள்: ஏன் ரஜினியின் மகள் ரகசியத்திருமணம் செய்து கொள்ள வேண்டும்? எதுவும் கசமுசவா?

ரஜினி: அடங்கொய்யால. இதுக்கு புள்ளையே பெத்துக்காம ரெண்டு படம் நடிச்சிட்டுப் போயிருந்திருக்கலாமே.. ரீவைண்ட்..

முதல் படம்: ஃப்ளாப்
பத்திரிகைகள்: ரஜினியின் படம் படு தோல்வி. வினியோகஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு ரஜினியை நெருக்குகின்றனர். ரஜினி சகாப்தம் முடிந்ததா?
பதிவர்கள்: அம்புட்டுத்தான் ரஜினி. இனி தலையில துண்டுதான்.
அவரை நம்பித்தானே வினியோகஸ்தர்கள் பணம் போட்டார்கள். அவர்களின் நஷ்டத்துக்கு அவரே பொறுப்பேற்று பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்

இரண்டாம் படம்: பெரிய பட்ஜெட்
பத்திரிகைகள்: பணத்தை இறைத்து ரஜினியின் அடுத்த படம். அவருக்கு சம்பளம் 25 கோடியாம்.
பதிவர்கள்: இவ்வளவு பணம் போட்டு படம் எடுக்க வேண்டுமா? இந்தப் படத்தைப் புறக்கணிப்போம்.
இந்தப் பணத்தில் எத்தனை ஏழைகளை.. ஸ்ஸ்ஸப்ப்ப்ப்ப்பாபாபா

ரஜினி: அவ்வ்வ்வ்வ்வ்... வேற வழியே இல்லை ரீவைண்ட்...

...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...

1949, March 12


ஜீஜாபாய்: என்னங்க.. புள்ளைகளை தூங்க வச்சிட்டேன். பாலக் குடிச்சிட்டுப் படுக்க வாங்க.
ராமோஜிராவ்: இல்லடி நான் செகண்ட் ஷோ சினிமாவுக்குப் போறேன்.






டிஸ்கி: எப்படி மார்ச் 12, என்று கேட்டவர்களுக்காக. கர்ப்பத்தின் ட்யூ டேட் இப்படித்தான் கணக்கிடப் படுகிறது. கூட்டிக் கழிச்சிப் பாருங்க கணக்கு சரியா வரும். 

Wednesday, August 11, 2010

தமிழ் ப்ளாக் வாசகர்களுக்கு ஒரு எச்சரிக்கை

நான் ஏற்கனவே உங்க எல்லாரையும் எச்சரிச்சிருந்தேன். நடந்துரும் நடந்துரும்னு சொன்னேன். சொன்னா கேட்டீங்களா? இதோ நடந்துருச்சி பாருங்க.


Tuesday, June 8, 2010

கனவு தேசம் - 5

இதுவரை பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4


இன்ஸ்யூரன்ஷுக்கு அடுத்தபடியாக படிக்க அல்லது வேலை பார்க்க வந்த அனைவருக்கும் அமெரிக்காவில் கட்டாயத் தேவை சோசியல் செக்யூரிட்டி எண். பேங்கில் அக்கவுண்ட் ஆரம்பிப்பதில் ஆரம்பித்து வருமான வரி கட்டுவது வரை இந்த எண் தேவை.

ஒருவருடைய பொருளாதார செயல்பாடுகள் அனைத்தும் இந்த எஸ்.எஸ்.என்-னோடு சேர்த்து ஆவணப்படுத்தப் படும். மேலும் அவர் செய்யும் குற்றங்கள் - ட்ராஃபிக் டிக்கெட்ஸ், ஃபைன் கட்டியது போன்றவை - கூட இந்த எஸ்.எஸ்.என்-னோடு கோர்க்கப்பட்டிருக்கும். ஆக அவரது எஸ்.எஸ்.என் - ஐ சொன்னால் உங்கள் வரலாறையே எடுத்துவிடலாம்.

வழக்கமாக அமெரிக்கா வருபவர்களை வந்த உடன் எஸ்.எஸ்.என் விண்ணப்பிக்கச் சொல்லுவார்கள். ஆனால் நீங்கள் உடனே விண்ணப்பிக்கப் போனால் உங்கள் அமெரிக்க வருகை எஸ்.எஸ்.என் அலுவலக டேட்டா பேஸில் ஏறியிருக்காது. அதனால் அவர்கள் தபால் மூலம் யூ.எஸ்.சி.ஐ.எஸ் அலுவலகத்தை தொடர்பு கொண்டு உங்கள் வருகையை சரிபார்க்கச் சொல்வார்கள். யூ.எஸ்.சி.ஐ.எஸ் பதில் அனுப்பிய ஒரு வாரத்திற்குள் உங்கள் எஸ்.எஸ்.என் வீட்டுக்கு வந்து சேரும். மொத்தமாக எஸ்.எஸ்.என் வந்து சேர 3 முதல் 6 வாரம் வரை ஆகிவிடும்.

அதனால் நான் என் நண்பர்களுக்கு தரும் ஆலோசனை என்னவென்றால், அமெரிக்காவில் வந்திறங்கி ஒரு வாரம் கழித்துப் போய் எஸ்.எஸ்.என் விண்ணப்பித்தால் டேட்டா பேஸ் அப்டேட் ஆகியிருக்கும். உங்களுக்கு ஒரே வாரத்தில் எஸ்.எஸ்.என் வந்துவிடும். 1 முதல் 4 வாரம் வரை மிச்சம்.

எஸ்.எஸ்.என் வந்த பிறகே உங்களால் டிரைவிங் லைசன்சு கூட விண்ணப்பிக்க முடியும்.

எஸ்.எஸ்.என் பற்றி இன்னும் விளக்கமாகப் பின்னால் சொல்கிறேன். இப்போது டிரைவிங்க் லைசன்சு பற்றி பார்ப்போம்.

ஓவர்சீஸ் லைசன்ஸ் - இப்படி ஒரு பொருள் எங்கும் இல்லை, குறிப்பாக இந்தியாவில். இண்டர்நேஷனல் டிரைவர்ஸ் பெர்மிட்(ஐ.டி.பி) என்று ஒன்று உள்ளது. ஆனால் அது தனியாக ஒரு ஆவணம் இல்லை. அதுவும் உங்களின் இந்திய லைசன்ஸும் சேர்ந்தால்தான் அதற்கு மரியாதை. ஐ.டி.பி உங்களுக்கு கார் ஓட்ட லைசன்ஸ் இருக்கிறது என்பதை உலகில் உள்ள பல மொழிகளில் விளக்கியிருப்பார்கள். ஆக உங்கள் இந்திய லைசன்ஸ் இல்லாமல் ஐ.டி.பி மட்டும் வைத்து ஓட்ட முடியாது.

அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணத்துக்கும் டிரைவிங் லைசன்ஸ் எடுக்கும் விதிகள் வேறுபடும். உதாரணத்திற்கு நியூ ஜெர்சி மாகாணத்தில் உங்கள் இந்திய லைசன்ஸைக் கொடுத்து ஒரு எழுத்துத் தேர்வை பாஸ் செய்தால் போதும் நியூ ஜெர்சி லைசன்ஸ் பெற்று விடலாம். நீங்கள் ஓட்டிக் காட்டத் தேவை இல்லை. நியூ யார்க் மாகாணத்தில் அமெரிக்கா வந்து 3 மாதங்கள் உங்களின் இந்திய டிரைவிங் லைசன்ஸை வைத்தே ஓட்டலாம், அந்த லைசன்ஸ் ஆங்கிலத்தில் இருந்தால் ஐ.டி.பி தேவையே இல்லை. ஆனால் 3 மாதங்களுக்கு மேல் டூரிஸ்ட் விசா தவிர வேறு ஏதாவது விசாவில் இருந்தால் நீங்கள் கண்டிப்பாக நியூ யார்க் லைசென்ஸ் எடுத்தேத் தீரவேண்டும்.

நியூ யார்க் மாகாணத்தில் லைசன்ஸ் எடுக்க முதலில் எழுத்துத் தேர்வு ஒன்றை பாஸ் செய்ய வேண்டும். அதைப் பாஸ் செய்த உடன் லேர்னர்ஸ் பெர்மிட் கிடைக்கும் (நம் ஊர் எல்.எல்.ஆர் போல). அதன் பின் ஒரு ஐந்து மணி நேர வகுப்பறைப் படிப்பு - எதாவது ஒரு டிரைவிங் ஸ்கூலில் சொல்லித் தருவார்கள் - முடிக்க வேண்டும். அதன் பின்னரே டிரைவிங் தேர்வுக்குச் செல்ல முடியும்.

டிரைவிங் தேர்வும் மாகாணத்துக்கு மாகாணம் மாறும். நியூ யார்க்கில் வழக்கமான டிராஃபிக் உள்ள தெருக்களிலேயே ஒட்டச் சொல்வார்கள். பேரலல் பார்க்கிங் (parallel parking), 3 பாயிண்ட் டர்ன் ஆகியவற்றைச் செய்யச் சொல்வார்கள். நீங்கள் இந்தியாவில் ஓட்டி பழக்கம் இருந்தாலும் டிரைவிங் டெஸ்டுக்கு முன் ஒரு 2 மணி நேரமாவது ஒரு டிரைவிங் ஸ்கூலின் பயிற்சியாளரிடம் பயிற்சி எடுப்பது நல்லது.

பல பெண்கள் தங்கள் கணவரை ஓட்டச் சொல்லிக்கொடுக்கச் சொல்வார்கள். அதில் என்ன சிக்கல் என்றால், கணவர்கள் தொழில்முறை பயிற்சியாளர்கள் இல்லை. அதோடு அவர்களின் சொந்தக் காரிலேயே பயிற்றுவிக்கும்போது எங்காவது இடித்து விடுமோ என்ற பயம் கணவர்களுக்கு இருக்கும். அதனால் மனைவிகள் தப்பு செய்யும்போது கோபம் வரலாம். அவர்கள் கோபத்தில் ஏதாவது கத்திவிட்டால் மனைவிகளுக்கு பதட்டம் வந்து மேலும் தவறிழைக்கலாம். அதனால் அடிப்படைப் பயிற்சியை ஒரு டிரைவிங் ஸ்கூலின் தொழில்முறை பயிற்றுவிப்பாளரிடம் பயின்ற பின்னர் அதிக பரிச்சயம் செய்துகொள்ள உங்கள் கணவரோடு செல்லலாம். அதோடு டிரைவிங் ஸ்கூலின் காரில் பயிற்றுவிப்பாளரின் பக்கமும் ஒரு ப்ரேக் இருக்கும் என்பதால் விபத்தைப் பற்றி கவலைப் படாமல் பழகலாம்.

அடுத்தது கார் வாங்குவது. அமெரிக்காவில் பெரிய நகரங்களைத் தவிர மற்ற நகரங்களில் வசிப்பவர்கள் கார் இல்லாமல் இருக்க முடியாது. அப்படி இருக்க முடியாத நிலையை கார் தயாரிப்பு நிறுவனங்களே ஏற்படுத்திவிடுகின்றன. உதாரணத்திற்கு நான் வசிக்கும் ராச்செஸ்டர் நகரில் ஒரு காலத்தில் சப்-வே எனப்படும் பாதாள ரயில் வசதி இருந்ததாம். அந்த வசதியினால் மக்கள் பலர் கார் வாங்காமலே இருந்து வந்தனர். ஃபோர்ட் நிறுவனம் அந்த பாதாள ரயில் நிறுவனத்தை மாநகராட்சி நிர்வாகத்திடம் இருந்து வாங்கி இரண்டு வருடங்களில் அதை மூடிவிட்டார்களாம். எது எப்படியோ கார் இல்லாமல் இருந்தால் எந்த இடத்துக்குப் போவதற்கும் யாரையாவது எதிர்பார்த்தே இருக்க வேண்டிய நிலை தவிர்க்கமுடியாதது.

பழைய கார் வாங்கும்போது அமெரிக்கக் கார்கள் - ஃபோர்ட், ஜி.எம், க்ரைஸ்லர் போன்ற - வாங்குவதாக இருந்தால், 100,000 மைல்களுக்கு மேல் கார் போயிருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இந்தக் கார்கள் 100,000 மைல்களுக்கு மேல் பல பிரச்சனைகளைத் தரும். ஜப்பானியக் கார்களான ஹோண்டா, டொயாட்டா போன்ற கார்கள் வாங்கினால் தைரியமாக வாங்கலாம். அவை 200,000 மைல்கள் வரை பிரச்சனை இல்லாமல் போகக் கூடியவை.

பழைய கார்களை தேர்ட் பார்ட்டி என்று சொல்லக் கூடிய காரின் சொந்தக்காரர்களிடம் நேரடியாக வாங்கும்போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனென்றால் இப்படிப் பட்ட பரிமாற்றத்தை as-is என்று அழைப்பார்கள். அதாவது காரை நீங்கள் வாங்கும்போது கார் எப்படி இருக்கிறதோ அந்த நிலையிலேயே பெற்றுக் கொள்கிறேன் என்ற ஒப்பந்தத்தில் நீங்கள் கையெழுத்து போட்டிருப்பீர்கள். அதனால் அதன் பின்னர் வரும் எல்லாப் பிரச்சனைகளையும் நீங்களே ஏற்றுக் கொண்டாக வேண்டும். எந்தச் சட்டமும் உங்களுக்கு உதவாது. பல நேரங்களில் காரை ட்ரயல் பார்த்து, பணம் கொடுத்து வாங்கிக் கொண்டு அடுத்த தெரு வருவதற்குள் கார் நின்று போன கொடுமையையெல்லாம் பார்த்திருக்கிறேன்.

அதனால் தேர்ட் பார்ட்டியிடம் கார் வாங்கும்போது விற்பனை செய்பவரின் செலவிலேயே ஒரு வொர்க் ஷாப்பிற்கு சென்று பரிசோதனை செய்துவிடுவது நல்லது. $100 டாலருக்குள் காரில் உள்ள அத்தனை குறைகளையும் காட்டித் தரும். அவற்றைக் களைந்து தர விற்பவர் தயாராக இருந்தால் மட்டுமே காரை நீங்கள் வாங்கலாம்.

கார் டீலரிடமே பழைய கார் வாங்குவது பாதுகாப்பானது. சில நேரங்களில் வாரண்டியும் கிடைக்கும். ஆனால் கொஞ்சம் விலை அதிகமாக இருக்கும்.

புது காராக வாங்குவதும் சாதாரண விசயம் இல்லை. அது ஒரு கலை என்றே சொல்லலாம். முதலில் எந்தக் கார் வாங்குவது என்பதை முடிவு செய்துவிட்டு அந்தக் காரைப் பற்றிய முழு விவரங்களையும் - காரின் பல மாடல்கள், அவற்றின் அடிப்படை வசதிகள், அதிகப்படியான வசதிகள் ஆகியவற்றை - தெரிந்து கொண்ட பின்னே கார் டீலரிடம் செல்ல வேண்டும். அங்கே போகும் போது உங்கள் பட்ஜெட் என்ன என்பதை நீங்கள் அவர்களிடம் சொல்லி விடக்கூடாது. அதே நேரத்தில் உங்களின் கார் வாங்கும் ஆர்வத்தையும் அவர்களிடம் வெளிக்காட்டிவிடக் கூடாது. இந்த உணர்வுகளை அந்த விற்பனைப் பிரதிநிதி கண்டுபிடித்துவிட்டால் டிஸ்கவுண்ட் அதிகம் கொடுக்க மாட்டார்.

ஒரு காரின் குறைந்த பட்ச விற்பனை விலை ஒன்று வைத்திருப்பார்கள். அதன் மேல் எவ்வளவு வந்தாலும் அவர்களுக்கு அதிகப்படி லாபம் தான். உதாரணமாக ஒரு காரின் விலை $24,000/- என்று சொல்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதன் குறைந்த பட்ச விற்பனை விலை 20,000/- என்றிருக்கும். ஆகவே அவர் காரின் விலை சொல்லும்போது குறைத்துக் கேட்க வேண்டும். நீங்கள் 21,000/- என்று கேட்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், அவர் உடனே “நான் போய் மேனேஜரிடம் பேசிவிட்டு வருகிறேன்” என்று உள்ளே போவார். அவரிடம் எதையாவது பேசிவிட்டு திரும்பி வந்து, 21,000/- கொடுக்க முடியாது 23,500/- என்றால் கொடுக்கலாம் என்று சொல்வார். நீங்கள் இல்லை என்று தயங்கினால் “நான் உங்களுக்கு ஒரு யோசனை சொல்கிறேன், 22,000/- என்று கேட்போம். அவர் 23,000/-க்கு வருவார். என்ன சொல்கிறீர்கள் என்று கேட்பார். நீங்கள் ஒத்துக்கொண்டுவிட்டால் போச்சு. 23,000/-க்கு உங்கள் தலையில் காரைக் கட்டி விடுவார்கள். சில நேரங்களில் நீங்கள் காரை இன்றே வாங்கிக் கொள்வதாக இருந்தால் 22,500/-க்குக் கொடுக்கிறேன் என்று “இறங்கி” வருவார்கள். ஒத்துக் கொள்ளாதீர்கள். எப்போது போன அன்றே காரை வாங்கும் எண்ணத்தை வைத்துக் கொள்ளாதீர்கள்.

மனைவியிடம் பேசிவிட்டு வருகிறேன், நண்பர்களுடன் ஆலோசிக்க வேண்டும் என்று எதாவது காரணத்தை வைத்து திரும்பி விடுங்கள். மற்ற டீலர்களிடமும் விசாரித்துவிட்டு எது நல்ல டீல் என்று பார்த்து முடிவு செய்யுங்கள். சில நேரம் ஒரு டீலரிடம் சர்வீஸ் நன்றாக இருக்கும். இன்னொரு டீலரிடம் நல்ல டீல் இருக்கும். சர்வீஸ் நன்றாக இருக்கும் டீலரிடம் மற்ற டீலரிடம் இருக்கும் டீல் அல்லது ஆஃபரைச் சொல்லி அதையே இங்கேயும் தரச் சொல்லுங்கள். இல்லாவிட்டால் வாக்-அவுட் செய்யப் போவதாக மிரட்டலாம். பணத்தைக் குறைக்க தயக்கம் காட்டினால் வேறு அதிகப்படி வசதிகளில் ஏதாவது ஒன்றைக் கேளுங்கள். சமயோசிதமாக நடந்து கொள்வதன் மூலம் நல்ல விலைக்கு புதுக் கார்கள் வாங்கிவிடலாம்.

நீங்கள் காரில் அதிகம் ஊர் சுற்றாதவராக மூன்று வருடங்களுக்கு ஒரு முறை காரை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவராக இருந்தால் உங்களுக்கு லீசிங் (leasing) என்ற ஒரு வழி இருக்கிறது. அதாவது காரை விலைக்கு வாங்காமல் வாடகைக்கு எடுப்பது போல. இதில் வழக்கமாக மூன்று வருடம் - 36,000 மைல் என்ற ஒப்பந்தம் போடுவார்கள். 36,000 மைல்களுக்கு மேல் போனால் மைலுக்கு இவ்வளவு என்று பணம் அதிகமாகக் கட்ட வேண்டியிருக்கும். மூன்று வருடங்களுக்குப் பிறகு அந்தக் காரை திருப்பிக் கொடுத்துவிட்டு வேறு கார் லீஸ் செய்து அல்லது வாங்கிக் கொள்ளலாம்.

Leasing Vs Buying
=================
காரை வாங்கினால் நீங்கள் மாதா மாதம் கட்டும் பணத்திற்கு உங்களுக்கு ஒரு சொத்து (கார்) இருக்கிறது. அதுவே உங்களின் பணத்திற்கான ரிட்டர்ன். லீசிங்கில் நீங்கள் கட்டும் பணம் வாடகையைப் போன்றது. அதனால் அதற்கு ரிட்டர்ன் இல்லை.
காரை வாங்கும்போது நீங்கள் காரின் மொத்த விலைக்கும் வரி கட்ட வேண்டும். காரை லீஸ் செய்யும்போது லீஸ் காலத்துக்கான தேய்மானத் தொகை (depreciation amount)க்கு மட்டும் வரி கட்டினால் போதும். அதோடு மாத ஈ.எம்.ஐ கார் வாங்குவதில் லீசை விட அதிகமாக இருக்கும். வழக்கமாக புது காருக்கு முதல் மூன்று வருடங்களுக்கு மட்டுமே வாரண்டி இருக்கும். அதற்கு மேல் ஃபேக்டரி வாரண்டி இல்லாமல் மற்ற வாரண்டி வாங்க வேண்டியிருக்கும். லீசில் அந்த பிரச்சனை இல்லை. மூன்று வருடங்களில் அந்தக் காரை நீங்கள் திருப்பிக் கொடுத்துவிடுவீர்கள். லீசில் எடுத்த காரையே மூன்று வருடங்களுக்குப் பிறகு நீங்களே வாங்கிக் கொள்ளும் ஒரு வழிமுறையும் இருக்கிறது. ஆனால் அப்படிப்பட்ட எண்ணத்துடன் நீங்கள் காரை லீஸ் செய்வதால் உங்களுக்குச் சில ஆயிரங்கள் நஷ்டம் ஏற்படலாம். ஆகவே மூன்று வருடங்களுக்குப் பிறகு வேறு கார் வாங்கும் பழக்கம் உடையவராக இருந்தால் மட்டுமே நீங்கள் லீஸ் ஆப்ஷனுக்குச் செல்லுங்கள்.

அடுத்த பகுதியில் விசா எக்ஸ்டென்ஷன், க்ரீன் கார்ட் ஆகிய விவரங்களைப் பார்ப்போம்.

Wednesday, May 5, 2010

கனவு தேசம் - 4

பாகம்-1 பாகம்-2 பாகம்-3

விசா வாங்கி, விமானம் ஏறி, இமிக்ரேஷனைத் தாண்டி அமெரிக்காவில் கால் பதித்தாயிற்று. அடுத்தது என்ன?

அமெரிக்காவுக்கு வரும் ஒவ்வொருவருக்கும் அவர்களது பாஸ்போர்ட்டுக்கு அடுத்த படியாக முக்கியமானது இன்ஸ்யூரன்ஸ் அட்டை. எதற்காக இன்ஸ்யூரன்ஸ் எடுக்க வேண்டும்? எடுக்காவிட்டால் என்ன என்று கேட்கலாம். அதை விளக்குவதே இந்த பகுதி.

அமெரிக்காவில் மருத்துவ செலவுகள் அதிகம். எவ்வளவு அதிகம்? ஒரு உதாரணம்

நாங்கள் அமெரிக்கா வந்த ஒரு வாரத்துக்குள் என் மனைவி காய்கறி நறுக்கும் போது கையையும் சேர்த்து அறுத்துக் கொண்டார். நான் ஊருக்குப் புதிதென்பதால் என்னுடன் பணி புரிந்த அக்கட தேசத்து நண்பர் ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். எங்கள் இன்ஸ்யூரன்ஸ் அப்போது வரவில்லை என்பதால் எங்கள் கையில் இருந்து பணம் கொடுக்க வேண்டியதிருந்தது. இரண்டு தையல் போட்டதற்கு பில் எவ்வளவு தெரியுமா? $250.00 இந்தியப் பணத்தில் கிட்டத்தட்ட 11,250/-

ஏன் அமெரிக்காவில் மருத்துவ செலவுகள் அதிகமாக இருக்கிறது? இதைப் பற்றி மட்டுமே ஒரு பெரிய தொடரே எழுதலாம். இருந்தாலும் சுருக்கமாக.

1. அமெரிக்காவில் அவசர சிகிச்சைக்கு - எமெர்ஜென்சி ரூம் - அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு இன்ஸ்யூரன்ஸ் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிகிச்சை அளித்தேத் தீர வேண்டும் என்பது கட்டாயம். இங்கே ஒருவர் குண்டடிப் பட்டு மருத்துவமனைக்குப் போனாலும் கூட போலீஸ் கம்ப்ளெயிண்ட் கேட்க மாட்டார்கள். உடனே மருத்துவ உதவி வழங்கப்படும். அப்படி செலவாகும் பணத்தை மருத்துவமனைகள் மற்ற அவசரமல்லாத (Non-emergency) நோயாளிக்கான சேவையின் மீது திணிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

2. அமெரிக்காவில் தவறாக டயக்னைஸ் (நோயைக் கண்டுபிடித்தல்) செய்துவிட்டாலோ, இல்லை தவறான சிகிச்சை செய்துவிட்டாலோ, மருத்துவரின்/மருத்துவமனையின் மீது வழக்குப் போடலாம். போட்டு அந்த மருத்துவர் தன் வாழ்நாளில் சம்பாதித்த அத்தனை பணத்தையும் நஷ்ட ஈடாக வாங்கிவிடலாம். இப்படிப் போடப் படும் வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகம். இந்த மாதிரி போடப்படும் வழக்குகளை எதிர்கொள்ள ஆகும் செலவையும் தங்கள் பேஷண்டுகளின் மீது திணிக்கின்றனர் மருத்துவர்கள்/மருத்துவமனைகள்.

3. அமெரிக்க இன்ஸ்யூரன்ஸ் கம்பெனிகள் அனைத்தும் தனியார் வசம் உள்ளன. அமெரிக்க மருத்துவத்தொழிலையே ஆட்டிப் படைப்பவர்கள் இவர்கள்தாம். மருத்துவ செலவை அதிகமாக வைத்திருப்பதன் மூலம் அனைவரையும் இன்ஸ்யூரன்ஸ் எடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் வைத்திருக்கின்றன.

ஆனாலும் மருத்துவ வசதிகளில் அற்புதமாக இருக்கும். ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவரையும் ஒரே மாதிரி நடத்துவார்கள். ஒரு சிகிச்சை அளிக்கும் முன் அந்த சிகிச்சையைப் பற்றி பேஷண்டிடம் விளக்குவார்கள். மாற்று சிகிச்சை இருப்பின் அதைப் பற்றியும் பேஷண்டிடம் விளக்கி தேர்வை பேஷண்டிடமே விட்டு விடுவார்கள்.

மருத்துவர்களும் தேவையான சிகிச்சை மட்டுமே அளிக்க வேண்டும். நம்மூர் போல தேவையில்லாமல் மச்சானின் லேபில் இசிஜி, எக்ஸ்ரே எல்லாம் எடுக்கச் சொல்ல முடியாது.

பேஷண்டுகளின் மருத்துவ ஆவணங்களை பத்திரப்படுத்தி வைப்பது மருத்துவரின் கடமை. பேஷண்ட் வேறு டாக்டரைத் தேடிப் போய்விட்டாலும், குறைந்தது ஐந்து வருடங்கள் (குழந்தை நல மருத்துவர்கள் 20 வருடங்கள்) அந்த ஆவணங்களைப் பத்திரப் படுத்தி வைத்திருக்கவேண்டும்.

ஆக நீங்கள் வேலை செய்ய வருகிறீர்களோ, படிக்க வருகிறீர்களோ இல்லை சுற்றுப் பயணம் வருகிறீர்களோ மெடிக்கல் இன்ஸ்யூரன்ஸ் இல்லாமல் இருப்பது ரிஸ்க் தான்.

இதில் நம் மக்கள் என்ன என்ன கோல்மால்கள் செய்கிறார்கள்?

1. பெற்றோர்களை அழைத்து வருபவர்கள் அவர்களுக்கு இன்ஸ்யூரன்ஸ் எடுக்காமல், எதாவது அவசரம் என்றால் அவர்களை மருத்துவமனையின் எமெர்ஜென்சி வார்டில் அட்மிட் செய்து விட்டு, யாரென்றே தெரியாது என்று சொல்லிவிடுகிறார்கள். (இன்ஸ்யூரன்ஸ் இல்லாமல் வந்த பெற்றோர்களில் ஒருவருக்கு கேன்சர் கண்டுபிடிக்கப்பட்டு இங்கே மருத்துவம் பார்த்ததால் $85,000 பில் வந்து கட்ட முடியாமல் சொல்லிக்கொள்ளாமல் இந்தியா ஓடிய குடும்பம் ஒன்றையும் எனக்குத் தெரியும்)

2. பல அக்கட நாட்டு மணமாகாத இளைஞர்கள் இன்ஸ்யூரன்ஸ் எடுப்பதில்லை. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் - தலைவலி, காய்ச்சல் என்றால் ஓவர் த கவுண்டர் மாத்திரை வாங்கிக் கொள்ளலாம். எங்கேயாவது அடிபட்டால் எமெர்ஜென்சி ரூமுக்குப் போய் வைத்தியம் பார்த்துக் கொள்ளலாம். சரி, எமெர்ஜென்சி ரூமுக்குப் போனால் சோசியல் செக்யூரிட்டி எண் கேட்பார்களே (இதைப் பற்றி அடுத்த பதிவில்) என்று கேட்டால், நான் ஷார்ட் டெர்ம் ட்ரைனிங்கிற்கு வந்துள்ளேன், எனக்கு எஸ்.எஸ்.என் இல்லை என்று சொல்ல்விடுவேன். தப்பான முகவரியையும் கொடுத்து விட்டால் பணம் கேட்டுத் துரத்தி வர முடியாதே? இப்படிப்பட்டவர்கள் இருப்பதாலும் மருத்துவ செலவு அதிகமாகிறது.

ஆகவே குறைந்த பட்ச மருத்துவ சேவைக்காவது இன்ஸ்யூரன்ஸ் வைத்துக் கொள்வது நல்லது.

அடுத்த பதிவில் சோசியல் செக்யூரிட்டி எண்ணைப் பற்றியும், ட்ரைவிங் லைசன்ஸ், கார் வாங்கி ரெஜிஸ்ட்ரேஷன் செய்வதைப் பற்றியும் விரிவாக எழுதுகிறேன்.

Wednesday, March 17, 2010

கனவு தேசம்

இந்தியாவில் என்றில்லை, உலகம் முழுக்கவே அமெரிக்கா ஒரு கனவு தேசம் என்றொரு நினைப்பு பரவலாக இருக்கிறது. அது உண்மையா? இல்லையா? என்பதை எடுத்துக் காட்டுவதே இப்பதிவுத் தொடரின் நோக்கம்.


1970களில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்த இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் தொழில்முறை பட்டப்படிப்பு படித்தவர்கள் – அதாவது டாக்டர்கள், இஞ்சினீயர்கள்.

அந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவில் படித்த இளைஞர்களுக்குத் தட்டுப்பாடு இருந்தது. ஏன் இருந்தது?

1940களில் அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டு வந்தது. அப்போது பெரும்பாலான ஆண்கள் போரில் படை வீரர்களாக பங்கு பெற்றிருந்தனர். அதனால் குழந்தைப் பிறப்பு கிட்டத்தட்ட இல்லவே இல்லை எனலாம். ஆக 1970களில் இளைஞர் தட்டுப்பாடு இருந்தது ஆச்சரியமில்லை தானே?

அப்போது இந்தியா போன்ற நாடுகளில் இருந்து படித்தவர்கள் சென்று அமெரிக்க விமான நிலையங்களில் இறங்கினால் போதும். அவர்களின் படிப்புத் தகுதியை பார்த்துவிட்டு விமான நிலையத்திலேயே க்ரீன் கார்ட் (நிரந்தரக் குடியிருப்பு உரிமை) வழங்குவார்களாம். அப்போது வந்தவர்களுக்கு கண்டிப்பாக அமெரிக்கா ஒரு கனவு தேசம் தான்.

ஏனென்றால் அப்போது இந்தியா வளர்ந்திருக்கவில்லை. டி.வி என்பதைப் பார்க்காத குடும்பங்கள் நிறைய. தொலைபேசி என்பது ஆடம்பரமாகக் கருதப்பட்டு வந்த நாட்கள் அவை. அப்படிப் பட்டவர்களுக்கு அமெரிக்காவில் இறங்கியது கார் வாங்குவது, ஃபோன் வைத்துக் கொள்வது தொலைக்காட்சிப் பெட்டியில் பத்துக்கும் மேற்பட்ட சானல்களைப் பார்ப்பது, எல்லாவற்றிற்கும் மேலாக கை நிறைய சம்பளம் வாங்குவது ஆகியவை பெரிய கனவு நனவானதாகவே இருந்திருக்கும்.

அடுத்த பத்து ஆண்டுகளில் அமெரிக்காவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியது. இந்த இளைஞர்களை Baby Boomers என்று அழைப்பார்கள். காரணம்? அதே உலகப்போர். உலகப்போர் முடிந்து நாடு திரும்பிய இளைஞர்களுக்கு 1950களில் குழந்தை உற்பத்தியைத் தவிர வேறு பெரிய பணி இல்லை போலும். அதனால் அதிகப்படியான இளைஞர்கள் 1980களில் இருந்தார்கள்.

இந்தக் காலகட்டத்தில் அமெரிக்கா வந்தேறிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த தன் பிடியை இறுக்கத் துவங்கியது.

விசா கட்டுப்பாடுகள் அதிகமாயின. 1990களின் இறுதியில் மீண்டும் இந்திய மூளை அவர்களுக்குத் தேவைப் பட்டது. இந்த முறை கணினித் துறையினர். ஆம், அனைவரும் கேள்விப்பட்டது தான். Y2K என்றழைக்கப்பட்ட பிரச்சனைக்குத் தீர்வெழுத இந்திய கணிப்பொறி வல்லுனர்கள் தேவைப் பட்டார்கள். மறுபடியும் இருகை விரித்து உள்ளே அழைத்துக் கொண்டது அமெரிக்கா.

அதோடு இந்திய மென்பொருள் நிறுவனங்கள் இப்போது மெதுவாக வளரத் துவங்கியிருந்தன. ஆஃப்ஷோர் மாடல் என்னும் வடிவில் கணினி வேலைகள் இந்தியாவுக்குப் படை எடுக்கத் துவங்கின. அதிலும் லாபம் பார்க்கத் துவங்கின அமெரிக்க கம்பெனிகள். ஆம், அமெரிக்காவில் ஒரு கணினி வல்லுனருக்கு ஒரு மணி நேரத்திற்கு $40-$50 வரை சம்பளம் கொடுக்க வேண்டும். அதோடு அவர்களுக்கான ஒரு இடம், ஒரு கணினி, கார் பார்க்கிங், மற்ற வசதிகள் என்றெல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்தால், ஒரு ஆளுக்கு $50-$60 வரை செலவிட வேண்டியிருக்கும். அதே நேரத்தில் இந்தியாவுக்கு அந்த வேலையை அனுப்பினால் $30-$40 க்குள் மொத்த செலவும் முடிந்து விடும். $20 வரை லாபம். இதெல்லாம் ஒரு மணி நேரத்திற்கு. ஒரு வாரத்துக்கு 40 மணி நேரம். 200 பேர் வேலையை இந்தியாவுக்கு அனுப்பியதாக கணக்கு வைத்துக் கொள்ளுங்க. 200 X 40 X 20 = $160,000 ஒரு வாரத்துக்கு மிச்சம். ஆக, மீண்டும் அமெரிக்காவில் வேலை வாய்ப்பு குறையத் துவங்கியது.

2000ம் ஆண்டு. புஷ் பதவி ஏற்றதும் அமெரிக்க பொருளாதாரம் சரியத் துவங்கியது. அதற்கு கிளிண்டனின் பொருளாதாரக் கொள்கை குற்றம் சாட்டப்பட்டது. பல இணைய நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன. மீண்டும் வேலையில்லாத் திண்டாட்டம் மெதுவாக தலை எடுக்கத் துவங்கியது.

போதாத குறைக்கு அல் கொயிதா 2001ல் உலக் வர்த்தக மையத்தை விமானங்கள் மூலம் தகர்த்தனர். உடனே வெகுண்டெழுந்த புஷ், ஆஃப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தார். அமெரிக்க பொருளாதாரம் சரியத் துவங்கியது.

2004ம் ஆண்டை ஒட்டி சற்றே நிமிரத் துவங்கிய பொருளாதாரத்தை இராக் மீது போர் தொடுத்து மீண்டும் குழியில் தள்ளத் துவங்கினார் புஷ்.

இது வரை அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியைக் கண்டாலும் அது பொது மக்களை அவ்வளவாகப் பாதிக்கவில்லை. ஆனால் 2008ம் ஆண்டில் நிதி நிறுவனங்கள் அதிகப்படியாகக் கொடுத்த வீட்டுக் கடன்களால் பாதிக்கப்பட்ட போது அது நேரடியாக மக்களைப் பாதிக்க ஆரம்பித்தது. பலர் வேலையை இழந்தனர். பலர் வீட்டை இழந்தனர்.

இப்போது அமெரிக்கப் பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது.

இப்போது தங்கள் நாட்டு குடிமக்களின் நலனையும் வேலையையும் பாதுகாக்க அமெரிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கியமாக விசா கட்டுப்பாட்டை அதிகப் படுத்தியிருக்கிறது.

ஒருவர் அமெரிக்காவுக்க வர விரும்பினால என்ன என்ன விசா வகைகள் இருக்கிறது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.