Tuesday, December 15, 2009

பிதற்றல்கள் - 12/15/2009

உண்மைக்கதை 
================


அந்த ஊரிலேயே அவன் தான் பெரிய ரவுடி. முரடன். அடுத்தவர்களைக் காயப்படுத்துவதைப்பற்றி அவன் கவலைப்பட்டதே இல்லை. அவன் ஆரம்பித்தான் என்றால் ரணகளம் தான். அவன் வருவதைப் பார்த்தாலே ஓடி ஒளிபவர்கள்தான் அதிகம். 


அப்படி ஓடி ஒளிந்துகொண்டிருந்தவர்களில் ஒருவன் தான் இவன். ஒருநாள் இவனது அழகான மனைவி அந்த முரடனின் கண்களில் பட்டு விட்டாள். அவ்வளவுதான் அந்த முரடன் அவளைச் சின்னாபின்னமாக்கிவிட்டான். அந்த வேதனையிலேயே உயிரையும் விட்டுவிட்டாள். 


அதுவரை சாதுவாக இருந்த இவன் தன் மனைவிக்கு ஏற்பட்ட முடிவை பார்த்ததும் சும்மா இருக்க முடியவில்லை. அந்த முரடனைப் பழி வாங்க முடிவு செய்தான். அவன் வழக்கமாக வரும் பாதையிலிருந்த ஒரு பாறைக்குப் பின்னால் பதுங்கிக் கொண்டான். பாறையின் நிறமும் இவன் சட்டையில்லாத மேனியின் நிறமும் ஒன்றாக இருக்கவே இவன் பதுங்கியிருப்பதை யாரும் அந்த முரடன் உட்படப் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை.


பதுங்கியிருந்தவன் அந்த முரடன் அருகே வரவும் அவனே எதிர்பார்க்காத வண்ணம் அவன் மீது பாய்ந்தான். தனது கைகளால் அந்த முரடனை வளைத்து அவனது ஆயுதத்தை உபயோகிக்க விடாமல் செய்தான். அதன் பிறகு என்ன நடந்தது என்பதை இங்கே பாருங்கள்.


இந்தியா - ஸ்ரீலங்கா முதல் ஒருநாள் போட்டி
===========================================
இந்த இடுகையை நான் தட்டிக் கொண்டிருக்கும்போது இன்னொரு சன்னலில் இந்தியா ஸ்ரீலங்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சேவாக்கும் தோனியும் இலங்கை பந்து வீச்சாளர்களை பொளந்துகட்டிக் கொண்டிருந்தார்கள். தில்ஷனின் பந்தை சேவாக் விரட்டி விரட்டி அடிக்க அப்போது சங்கக்கராவையும் தில்சனையும் மாறி மாறிக் காட்டினார்கள். அவர்கள் இதைத்தான் பேசியிருக்க வேண்டும்


சங்கக்கரா: ஆஃப்சைட்ல போடாதடா அடிக்கிறான்னு தெரியுதில்ல.
தில்ஷன்  : எப்பிடிப் போட்டாலும் அடிக்கிறாண்டா


(இதை தட்டி முடிப்பதற்குள் சேவாக்கும் தோனியும் அடுத்தடுத்து அவுட்டாகி பெவிலியன் திரும்பி விட்டனர் :-( கருநாக்கு(விரல்?) துக்கிரி)


தொடரும் கதைப் பதிவு
=======================
என்னுடைய முந்தைய இடுகை எழுத்தாளர் விசா அவர்கள் எழுதிய ஒரு கதையின் தொடர்ச்சி என்பதை தமிழ் கூறும் நல்லுலகம் அறியும். அந்த இடுகைக்கு பின்னூட்டம் போட்ட விசா, கதை எழுதும் ஆர்வம் உள்ள பத்து பதிவர்கள் ஆளுக்கு ஒரு அத்தியாயமாக  ஒரு கதை எழுதலாமே என்ற யோசனை தெரிவித்தார். நல்ல யோசனைதான். விருப்பமுள்ளவர்கள் கை தூக்குங்கள் (அட பின்னூட்டம் போடுங்கய்யா)


குளிர்காலமும் குழாய் வெடிப்பும்
================================
இதோ அதோ என்று இழுத்துக் கொண்டிருந்த குளிர் காலம் வந்தே விட்டது. மூன்று நாட்களாகப் பனிப்பொழிவு. அதனால் வெளியே கடும் குளிர். இந்தக் குளிரில் எங்கள் வீட்டிலிருந்த குழாய் ஒன்று வெடித்து வீட்டின் நிலவறையில் தண்ணீர். ஒரு இரவு முழுக்க வீட்டில் தண்ணீர் இல்லாமல் (தண்ணீர்க் குழாயை மூடி விட்டதால்). இதைப் பற்றியும் அதை சரி செய்த வீர தீரத்தைப் பற்றியும் விரைவில் தனி இடுகையாக (சன் பிக்சர்ஸ் பேனரில்) வெளியிடப்படும் என்று எச்சரித்துக் கொள்கிறேன்.


அப்புறம் பாக்கலாம்.

Sunday, December 13, 2009

ஐயா ஒரு பதிவு எழுத வழி கிடைச்சிருச்சி - விசாவின் கதைக்கு முடிவு

நண்பர் விசா ஒரு ரோலர் கோஸ்டர் கதை எழுதிட்டு அவர் அதுக்குக் குடுத்த முடிவு அவருக்கே பிடிக்கலை, நீங்க யாராவது நல்ல முடிவு இருந்தா சொல்லுங்கன்னு கேட்டிருந்தார்.

முடிவா எழுதுறதுக்குப் பதிலா அடுத்த பாகம் மாதிரி கதைய தொடரலாம்னு கீழ எழுதிட்டேன் 

(ரெண்டு நாளா என்ன பதிவெழுதலாம்னு யோசிச்சு யோசிச்சு மூளையை (இருந்தாத்தானன்னு கலகலப்ரியா நறநறக்குறது கேக்குது) கசக்கிக்கிட்டே இருந்தேன். ஆபத்பாந்தவன் அனாதரட்சகனா விசா ஹெல்ப்பிட்டாரு)
*******************************************************************  
விழித்துப் பார்த்தபோது மருத்துவமனையில் இருந்தேன். என்னைச் சுற்றி சில நண்பர்கள். என் மனைவியைத்தேடினேன். என்னால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அனைவரையும் சுற்றிய என் கண்கள் அங்கே நின்றிருந்த என் வக்கீலிடம் நின்றது.

“என்ன சார் ஆச்சு? நந்தினி எங்க?”

“நீங்க முதல்ல நல்லா ரெஸ்ட் எடுங்க. டிஸ்சார்ஜ் ஆனதும் எல்லா பேசலாம்”

“இல்ல சார். நான் இப்போவே அவளப் பாக்கணும்.”

“சும்மா படுத்துக்குங்க ஆனந்த். அந்தக் கூட்டம் அடிச்சதுல படாத இடத்துல பட்டு கோமா ஸ்டேஜ் வரைக்கும் போய் ஒரு மாசம் கழிச்சு இன்னிக்குதான் எழுந்திருக்கிங்க. நாளைக்கிக் காலைல டிஸ்சார்ஜ் ஆயிரலாம்”

என் நந்தினி எங்கே போயிருப்பாள்? என் மீது அப்படியென்ன அவளுக்குக் கோபம். அடுத்த ஆட்களிடம் அடி வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு? என் துரோகம் அவளை அவ்வளவு பாதித்து விட்டதா? கோமாவில் இருக்கும் என்னை வந்து பார்க்கக் கூட மனம் வராத அளவுக்குக் கல் நெஞ்சமாகி விட்டதா என்ன? யோசித்துக் கொண்டே தூங்கிப் போனேன்.

************************************************************************

காம்பவுண்ட் கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்த என்னை வரவேற்றது வாசல் கதவில் தொங்கிய பூட்டு. உடன் வந்த வக்கீல் தனது கையில் இருந்த சாவியால் கதவைத் திறந்தார்.

“ஏன் வீடு பூட்டியிருக்கு? நந்தினி எங்க?”

“உள்ள வாங்க எல்லாத்தையும் விவரமா சொல்றேன்”

ஹாலில் ஒரு மேஜை போடப்பட்டு அதில் நந்தினியின் பெரிய புகைப்படம் ஃப்ரேம் போட்டு வைக்கப்பட்டிருந்தது. அதில் போடப்பட்டிருந்த வாடிப்போன மாலை நந்தினி உயிரோடில்லை என்பதை சத்தம் போட்டு அறிவித்துக் கொண்டிருந்தது.

என் தொண்டை முள்ளில் வார்த்தை மீன்கள் சிக்கிக் கொண்டன. கண்களில் கண்ணீர் தன்னிச்சையாக வழிந்தது. பேச முடியாமல் வக்கிலைப் பார்த்தேன்.

“நீங்க ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆகி பத்து நாள்ல உங்க வொயிஃப் சூசைட் பண்ணிக்கிட்டாங்க. என்ன எதுக்குன்னு எதுவுமே எழுதி வக்கல. நீங்க எப்ப ரெகவர் ஆவீங்கன்னு தெரியாததால எல்லா சடங்குகளையும் நாங்களே முடிச்சிட்டோம். கண் முழிச்ச உடனே உங்கக் கிட்ட சொல்லவேணாமின்னு தான் நேத்தே சொல்லல”

என் உள்ளுக்குள் ஏதோ உடைந்தது. மண்டி போட்டு அழத் தொடங்கினேன். இதை விட எனக்கு நந்தினியால் பெரிய தண்டனை கொடுக்க முடியாது. வக்கீல் போய் பல மணி நேரம் ஆன பின்னும் அப்படியே உட்கார்ந்திருந்தேன்

********************************************************

மூலையில் தூசு படிந்து கிடந்த கணினியைத் தூசு தட்டினேன். நந்தினி இல்லாமல் எப்படி வாழப்போகிறேன். ஆனால் வாழ்ந்துதான் ஆக வேண்டும். கணினியை உயிர்ப்பித்து என் ஜிமெயில் அக்கவுண்டில் நுழைந்து பார்த்தேன். தேவையில்லாத மெயில்களைக் கழித்துக் கொண்டே வந்தேன். நந்தினி ஆனந்த் என்ற அந்த அனுப்புநரைக் கண்டதும் என் கைகள் நின்றன. எலியை முடுக்கி அந்த மெயிலைத் திறந்தேன்.

“டியர் ஆனந்த்,
இந்த மெயில நீங்க படிக்கும்போது நான் உயிரோட இருக்க மாட்டேன். நீங்க இப்பவும் கோமால தான் இருக்கிங்க. எழுந்து வருவிங்களான்னு எனக்குத் தெரியாது. எழுந்து ஒரு வேளை வந்தா என் சாவுக்கான காரணம் உங்களுக்குக் கண்டிப்பாத் தெரியணும். அதுக்கு தான் இந்த மெயில்.

அன்னைக்கு நீங்க என் கிட்ட அந்த சம்பவத்த சொன்ன உடனே எனக்கு முதல்ல அவ மேல கோவம் வந்தது. அப்புறம் உங்களையே மயக்கற அளவுக்கு அப்பிடி என்ன அவகிட்ட இருக்குனு தெரிஞ்சிக்கிட ஆவல் வந்தது. அவள ட்ராக் பண்ணி அவ ஒரு கால் கேர்ள்னு தெரிஞ்சி அவளப் பாக்குறதுக்காக ஹைதராபாத் போனேன். ஆனா நான் போறதுக்கு முன்னாடியே அவ செத்துக் கிடந்தா. போலீஸ் என்னக் குற்றவாளி ஆக்கிடுச்சி. அவ அப்பிடி ஒன்னும் அடிக்கிற அழகா எனக்குத் தெரியல. வக்கீல் என்ன பெயில்ல எடுத்துட்டு வரும்போது உங்க மேல எனக்குக் கோவம் வந்தது. அந்தக் கோவத்தோட வெளிப்பாட்டாததான் உங்களுக்கு அடி வாங்கிக் கொடுத்துட்டேன். ஆனா அது உங்கள கோமா வரைக்கும் கொண்டு போகும்னு எதிர் பார்க்கலை.

தப்பு பண்ணிட்டமேங்குற குற்ற உணர்ச்சி என்ன சிறுக சிறுக கொன்னுட்டிருந்திச்சி. இதை யெல்லாம் வக்கீல்கிட்ட சொல்லி வடிகால் தேடிக்கலாம்னு ஒரு நாள் வரச் சொன்னேன். எல்லாத்தையும் அவர் கிட்ட சொன்னேன். என் சுயபச்சாதாபம் என்னைக் கொன்னுடாம இருக்கக் கொஞ்சம் ட்ரிங்க்ஸ் எடுத்துக்கச் சொன்னதுனால நானும் கொஞ்சமா சாப்பிட்டேன். என் சுய இரக்கமும் குற்றமனப்பான்மையையும் பயன்படுதிக்கிட்ட வக்கீல் என்ன அதிகமா குடிக்க வச்சி என்னை நீங்க பண்ண அதே தப்ப செய்ய வச்சுட்டான். அந்த செக்ஸ் எனக்கு அப்போ தேவையான வடிகாலா இருந்தது. ரெண்டு மூணு தடவ அதுக்கப்புறமும் அந்தத் தப்ப செஞ்சிட்டேன். என் சுயத்துக்கு வந்தது உங்கள மறுபடி ஆஸ்பிட்டல்ல பாத்ததுக்கு அப்புறம் தான்.

நீங்க குடி போதைல செஞ்ச தப்பை, சுய நினைவுல இல்லாதப்ப செஞ்ச தப்பை, என் கிட்ட சொல்லாம மறச்சிருந்திருக்கலாம். ஆனா நீங்க என் மேல வச்சிருந்த அளவிட முடியாத அன்பினால சொன்னிங்க. உங்க மன்னிப்ப ஏத்திக்கிட்டு இருக்க வேண்டிய நானே உங்களுக்கு பெரிய தண்டனை கொடுத்துட்டேன். இப்போ அதே தப்பை நானே செய்திருக்கும் போது அதே மாதிரி தண்டனையை எனக்கும் கொடுத்துக்கிறது தானே நியாயம். அதுனால என் மரணத்துக்கு நான் மட்டுமே காரணம்

அன்பு மனைவி
நந்தினி.

படித்து முடித்ததும் என் கண்கள் குளமாயின. கணினியை அணைத்து விட்டு, என் அறைக்குள் இருந்த ரகசிய லாக்கரைத் திறந்தேன். உள்ளே இருந்த பதிவு செய்யப்பட்ட என் பிஸ்டலை எடுத்தேன்.

டிஸ்கி: முடிவு நல்லா இருந்தா இங்க பாராட்டுங்க. நல்லா இல்லைன்னா விசாவத் திட்டுங்க இப்பிடி ஒரு மோசமான முடிவு எழுதுற மாதிரி கதையப் படச்சதுக்காக.