Sunday, May 24, 2009
தோள் கொடு தோழா
நடந்து முடிந்த "தீவிரவாதத்துக்கு" எதிரான இந்த போரில் பல ஆயிரம் அப்பாவி மக்கள் பலி ஆகியுள்ளனர். இந்த போரில் நடந்த மனித உரிமை மீறலை விசாரணை செய்ய ஐரோப்பிய நாடுகள் செய்யும் முயற்சிக்கு தடை போட இலங்கை அரசு முயன்று வருகிறது.
முதலில் மக்கள் இறக்கவில்லை, இறந்தவர்கள் அனைவரும் புலிகளே என்று இராணுவம் சொல்லி வந்தது. பின் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வெளியேறும் மக்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொள்வதாக தெரிவித்தது. இந்த இரண்டு செய்திகளில் எது உண்மையாக இருந்தாலும் எதற்காக ஐ.நா வின் முயற்சிக்கு தடை போட வேண்டும்? உன் முதுகில் அழுக்கு இல்லை என்றால் எதற்காக கவலை படுகிறாய்? வந்து பார் என்று சொல்ல வேண்டியது தானே?
இலங்கை அரசின் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதை பார்க்கும் பொழுது மனம் வலிக்கிறது. ஆயுதம் வழங்கினார்கள், தொழில் நுட்பம் சொல்லிக் கொடுத்தார்கள். அதன் பின் ஆள் பலமும் வழங்கினார்கள். அதை எல்லாம் பொறுத்து போனோம். இப்போது இந்த விசாரணையை தடுக்க கூடவா உதவி புரிய வேண்டும்?
நாம் இந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு வோட்டு போட்டதன் மூலம் நம் கைகளில் தேர்தல் மைக்கு பதிலாக ஈழத் தமிழர்களின் ரத்தத்தை வைத்துக் கொண்டோம். அந்த கரையை இப்போது வடுவாக மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறோம்.. கரையை போக்கி விடலாம் நண்பர்களே. வடு மாறாது.
முத்தமிழ் அறிஞர் "தமிழின காவலன்" கலைஞருக்கு இப்போது அவர் கட்சி எம்.பி களுக்கு மந்திரி பதவி வாங்கி தரும் "பாரிய" கடமை இருக்கிறது. அதை முடித்த பிறகாவது ஈழத்தமிழனைப் பற்றி சிந்திப்பாரா தெரியவில்லை? அனைவரும் போன பின்னால் இரங்கற்பா எழுதி புண்ணியமில்லை தலைவரே.
பல வலை மனைகளில் ஈழத் தமிழர் பற்றி வரும் செய்திகளுக்கு மனம் புண்படும்படி பின்னூட்டம் போடும் தோழர்களே. அழுகின்ற மனிதனுக்கு தோள் கொடுங்கள், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீர்கள். எங்களைக் காப்பாற்று என்று வரும் மனிதனிடம் நியாய அநியாயம் பேசுவதால் அவன் உயிரைக் காப்பாற்ற முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
Thursday, May 14, 2009
விதி
அமெரிக்க பொருளாதார வீழ்ச்சிக்கு பின் ஒவ்வொரு நிறுவனமும் தங்களது செலவை குறைக்க ஆட்குறைப்பு ஆயுதத்தை கையில் எடுத்து விட்டன. இதன் சம்மந்தமாகத்தான் இவன் மேலதிகாரி இவன் குழுவில் இருக்கும் அனைவரையும் கூட்டி ஆட்குறைப்பு நடத்த வேண்டிய கட்டாயத்தில் நிறுவனம் தள்ளப்பட்டு விட்டதாகவும், பணியில் இருந்து ஒய்வு பெற விரும்புபவர்களுக்கு நல்ல ஓய்வுக்கால நலன்களுடன் அனுப்பி வைக்கப் படுவார்கள் என்றும், அப்படி விருப்ப ஒய்வு பெருபவர்களுடைய எண்ணிக்கை பணி நீக்கம் செய்யப்படவேண்டிய எண்ணிக்கையை விட குறைவாக இருக்கும் பட்சத்தில் மேலும் சிலர் கட்டாயப் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அறிவித்தார். இவன்தான் இந்த நிறுவனத்தில் கடைசியாக சேர்ந்தவன். அதனால் முதலில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப் படுபவன் இவனாகத்தான் இருக்கும். இந்த நினைவே இவனை தூங்க விடாமல் படுத்தி எடுத்தது. இதுவே இந்தியாவாக இருந்திருந்தால் ரொம்பவும் கவலை பட வேண்டியது இல்லை. அந்நிய நாட்டில் வந்து இப்படி நடந்தால் என்ன செய்வது?
ரகுவின் மனம் பல ஆண்டுகள் பின்னோக்கி பயணம் செய்தது. பி.எஸ்.சி இயற்பியல் படிக்க சேர்ந்த பொது இவன் குறிக்கோள் சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி இல் பி.டெக் செருவதாகவே இருந்தது. பி.டெக் ஆட்டோமொபைல் அவனுக்கு பிடித்தமான படிப்பு. ஆனால் காலம் அவனை கணினி படிக்க வைத்து அமெரிக்காவிற்கு கொண்டு வந்து சேர்த்து விட்டது. முதல்வன் படத்தில் அர்ஜுனின் அப்பா சொல்வது போல வாழ்க்கைக்கு ஒரு ரீவைண்ட் பட்டன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? கடவுளே அப்படி ஏதாவது அதிசயம் செய்துவிட மாட்டாயா? என்று கிறுக்குத்தனமாக நினைத்துகொண்டே தூங்கிப்போனான்.
இவனது வேண்டுதலைக் கேட்ட கடவுள் "ததாஸ்து" என்று ஆசிர்வாதம் செய்தார்.
ரகு படுக்கையில் இருந்து எழுந்துகொள்ளாமலே மணியைப் பார்த்தான். இன்று தான் கடைசி பரீட்சை. வேதியியல் - கொஞ்சம் கூட பிடிக்கவே பிடிக்காத பாடம். இதை மட்டும் முடித்து விட்டால் அதன் பிறகு வாழ்க்கையில் இதை படிக்கவே வேண்டியது இல்லை.
"ரகு.. எழுந்துக்கொடா பரிச்சைக்கு நேரமாச்சு" அம்மாவின் குரல் கேட்டது.
எழுந்து காலைக்கடன்களை முடித்துக்கொண்டு குளித்து விட்டு சமையல் அறைக்குள் நுழைந்தான்.
"என்னம்மா டிபன் இன்னைக்கு?" என்று கேட்டவாறு சாப்பாட்டு மேசையின் முன் அமர்ந்தான்.
"இட்டிலி சுட்டிருக்கேண்டா. நேத்து எம்.ஐ.டி ல இருந்து அட்மிசன் கார்டு வந்துச்சிடா. எடுத்து மேசை மேல வச்சிருக்கேன். அப்பா படத்துக்கு முன்னால் வச்சி கும்பிட்டுட்டு பரிச்சைக்கு போ." என்று சொல்லிக்கொண்டே இட்லிகளை பரிமாறினார்.
சாப்பிட்டு விட்டு பரிசை எழுதினான். நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்று எம்.ஐ.டியில் பி.டெக் ஆடொமொபைல் படிப்பில் சேர்ந்தான். அங்கும் தானுண்டு தன் படிப்புண்டு என்று படித்து நல்ல ஒரு நிறுவனத்தில் பணி அமர்ந்தான். ஒரு வருடம் முடிந்த சமயம், G.R.E தேர்வு எழுதி ஜெர்மனி நாட்டில் எம்.எஸ் சேர்ந்தான்.
எம்.எஸ் படித்து முடிக்கும் பொது அமெரிக்க நிறுவனம் ஒன்றில் நல்ல சம்பளத்தில் பணி அமர்ந்தான். காலத்தின் போக்கில் இவனுக்கு திருமணமும் ஆகி ஒரு குழந்தையும் பிறந்தது.
அன்று இவன் பணி புரியும் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி நிறுவன ஊழியர்கள் அனைவருடனும் ஒளிப்பட தொலை பேசி மூலம் உரை ஆற்றினார். இன்றைய பொருளாதார நிலைமையில் அவர்களின் நிறுவனம் எப்படி ஒரு இக்காட்டான சூழ்நிலையில் உள்ளது என்றும், மத்திய அரசின் பொருளாதார உதவியை பெற்றிட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதையும், ஆட்குறைப்பு செய்ய வேண்டிய நிலைமையையும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல எல்லாருக்கு உறைக்கும்படி வலியது வலியது.வலியது வலியது.வலியது. தனக்கு நிறுவனத்தில் இருக்கும் "கடின உழைப்பாளி" என்ற பெயர் தன்னுடைய வேலையைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையோடு வீட்டுக்கு வந்தான்.
இரவு உணவு அருந்தியதும் வீட்டில் உள்ள தொலைக் காட்சி பெட்டிக்கு உயிர் கொடுத்தான். சி.என்.என் தொலைக்காட்சியில் அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியைப் பற்றி விவாதம் நடந்து கொண்டிருந்தது. அப்போது, மத்திய அரசின் பொருளாதார உதவியைப் பெரும் நிறுவனங்களுக்கு போடப்பட்டிருக்கும் நிபந்தனைகளில் விவாதம் செய்து கொண்டிருந்த மூன்று பெரும் ஒத்த மனதுடன் ஏற்றுக்கொண்ட நிபந்தனை - பொருளாதார உதவி பெரும் நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்ய வேண்டிய பட்சத்தில், முதலில் எச்-ஒன் பி விசாவில் பணி அமர்த்தப் பட்டவர்களையே நீக்க வேண்டும் என்பதே அது. ரகுவின் நடு மண்டையில் ஆணி இறங்கியதைப் போல இருந்தது.
ரகு தூக்கம் வராமல் புரண்டு படுத்தான். அவன் நிறுவன முதன்மை அதிகாரி இன்று பேசியது அவன் மனதை அரிததுக் கொண்டே இருந்தது.
....
....
முதல்வன் படத்தில் அர்ஜுனின் அப்பா சொல்வது போல வாழ்க்கைக்கு ஒரு ரீவைண்ட் பட்டன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? கடவுளே அப்படி ஏதாவது அதிசயம் செய்துவிட மாட்டாயா? என்று கிறுக்குத்தனமாக நினைத்துகொண்டே தூங்கிப்போனான்.
விதி வலியது.
Friday, May 8, 2009
மனதை பாதித்த வீடியோ
Thursday, May 7, 2009
நண்பர் அனுப்பிய கவிதை
இது நான் எழுதிய கவிதை அல்ல. எழுதும் அளவுக்கு புலமை பெற்றவனும் இல்லை. ஆனால் இந்த கவிதையை இங்கே பதிக்க வேண்டும் என்று நினைத்தேன். இதோ உங்கள் பார்வைக்கு.
வீட்டுக்கு மேல் போர் விமானங்கள் பறக்க
குழந்தைகளை இழுத்துக்கொண்டு நீங்கள்
ஓடி ஒளியும்போது...
கண்ணெதிரில் உங்கள் வீட்டுப் பெண்கள் கற்பழிக்கப்படும்போது...
உங்கள் சகோதரன் சுட்டுக் கொல்லப்படும்போது...
பட்டினியால் உங்கள் பெற்றோர் இறக்கும்போது...
அப்போதுதான்
போர் என்பது புரியும் எனில்,
அதுவரைக்கும் தமிழர்களே கிரிக்கெட் பாருங்கள்.
அடுத்த தேர்தல் வந்துவிட்டது
வரிசையில் நின்று வாக்களியுங்கள்.
பயணத்தில் உங்கள் இருக்கையில்
இன்னொருவர் அமர்ந்துகொண்டு
எழ மறுத்தால் என்ன செய்வீர்கள்?
சாலையில் உங்கள் வாகனத்தை
இன்னொரு வாகனம் இடித்துவிட்டால்
என்ன செய்வீர்கள்?
உங்கள் குழந்தையைப் பள்ளி ஆசிரியர்
காயம் வர அடித்துவிட்டால் என்ன செய்வீர்கள்?
பேருந்தில் உங்கள் மகளை இன்னொருவர் உரசுவதைப் பார்த்தால் என்ன செய்வீர்கள்?
உங்கள் வீட்டுக்குள் அத்துமீறி
சில அந்நியர் புகுந்தால்
என்ன செய்வீர்கள் மிஸ்டர் இந்தியன்?
இறையாண்மை பேசுவீர்களோ?
இதற்கெல்லாம்...
எதிர்த்தலே தீவிரவாதம் எனில்
இலங்கையில் நடப்பதும் அஃதே நண்ப!
ஆர்ப்பாட்டம் நடத்தியாச்சு
ஒப்பாரி வெச்சாச்சு
கண்டனக் கூட்டம் முடிஞ்சுது
கவிதை வாசிச்சாச்சு
கட்டுரைகள் எழுதியாச்சு
ஓவியம் வரைஞ்சாச்சு
ஊர்வலம் போயாச்சு
மனிதச் சங்கிலி
அடையாள உண்ணாவிரதம்
வழக்கறிஞர் போராட்டம்
மாணவர் போராட்டம்
திரையுலகப் போராட்டம்
கடையடைப்பு.
தந்தி அடித்து
மெயில் அனுப்பி
எஸ்.எம்.எஸ். விட்டு
வேலைநிறுத்தம் செஞ்சு
பேருந்துகள் கொளுத்தி
தூதரகங்களை நொறுக்கி
ஜெயிலுக்குப் போயி
சாகும் வரை உண்ணாவிரதமும் இருந்து
அட! பதினேழு பேர் தீக்குளிச்சுச் செத்தும்போயாச்சு.
.....க்காளி... என்னதான்யா செய்யறது இனி!
Wednesday, May 6, 2009
சமூகக் கடமை
இதை எல்லாம் விட கொடுமை, என் பாட்டி. அவருக்கு வயது எழுபத்தைந்து. கிட்டத்தட்ட ஐம்பத்து வருடங்களாக வாக்களித்து வருகிறார். அவருடன் பேசிக்கொண்டிருந்த போது யாருக்கு வாக்களித்தாய் என்று என்னிடம் கேட்டார். நானும் நான் வாக்களித்த வாக்காளர் பெயரை சொல்லி, அவர் சின்னத்தையும் சொன்னேன். என் பாட்டியோ, மற்றொரு சின்னத்தை சொல்லி அதற்கு தான் வாக்களித்ததாக சொன்னதோடு, நான் அந்த சின்னத்திற்கு வாக்களிக்கததற்காக கோவித்துக் கொண்டார். நான் அந்த சின்னத்தில் நின்ற வாகாலரின் பெயர் உங்களுக்கு தெரியுமா என்று அவரிடம் கேட்டேன். அவரோ அதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் நான் அந்த கட்சிக்கு தான் போட்டேன், என்றார். இப்படிப் பட்டவர்கள் இருக்கும் வரைக்கும் அன்னை சோனியா காந்தியைப் போன்றவர்கள் இலங்கையில் இனப் படுகொலையை தொடர்ந்து கொண்டு தான் இருப்பார்கள்.
நான் வாக்களித்தவர், கரை படியாத கரங்களை உடையவர் என்றோ, இதுவரை எந்த ஊழல் குற்றச்சாட்டிலும் மாட்டிக் கொள்ளாதவர் என்றோ அவருக்கு நான் வாக்களிக்கவில்லை. அவர் கரங்கள் கரை படியாமல் இருப்பதற்கு அவருக்கு இதுவரை வாய்ப்பு கிடைக்காது கூட காரணமாய் இருக்கலாம். நான் அவருக்கு வாக்களித்ததற்கு காரணம், எந்த கூட்டணியில் இடம் பிடித்து இவர் பாராளுமன்றத்திற்கு சென்றாலும், அங்கே இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை தடுக்க பலமாக குரல் கொடுக்க இவரை விட்டால் யாரும் இல்லை என்ற காரணத்தால் தான். அவர் வெற்றி பெற ஆசி வழங்க வேண்டும் என்று இந்த ஈழப் பிரச்சினைக்காக உயிர் நீத்த பல நல்ல உள்ளங்களின் ஆன்மாக்களை வேண்டிக்கொள்கிறேன்.
Friday, May 1, 2009
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் - தொடர்கிறது
சிதம்பரத்தை எதிர்த்து ராசிவ் காந்தி.
சிவகங்கையில் சிதம்பரம் ராஜிவ் பெயரை சொல்லி வோட்டு கேட்க முடியாது. ஏனென்றால் ராஜிவ் காந்தி அவரை எதிர்த்து போட்டி போடுகிறார். ஆம், ஈழத்தமிழர்கள் அழிக்கப் படுவதற்கு பாசிச காங்கிரஸ்சே காரணம் என்பதால், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெரிய தலைகளை இந்தத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று மாணவர்கள் பலர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதில் ஒரு கட்டமாக சிதம்பரத்தை எதிர்த்து ராஜிவ் காந்தி என்ற சட்டக் கல்லூரி மாணவரை நிறுத்தி இருக்கின்றனர். இதில் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த பதிமூன்று கணினி பொறியாளர்களை கேள்விப்படாத நான்கு பிரிவுகளின் கீழ் கைது செய்திருக்கின்றனர் காவல் துறையினர்.
இ.வி.கே.எஸ்.இளங்கோவனின் செலக்டிவ் அம்னீசியா
ஈழத்தமிழர்களுக்காக தன் உயிரை ஈந்து மொத்த தமிழ் நாட்டையும் திரும்பி பார்க்க செய்த இளைஞன் முத்துக்குமாரை பற்றிய கேள்விக்கு அறிக்கை திலகம், பெரியாரின் பேரன் "முத்துக்குமரா? யாரது?" என்று கேள்வி கேட்டு இருக்கிறார். இவர், ஒரு வேலை வெற்றி பெற்று டெல்லிக்கு சென்று விட்டால், ஈரோடா அது எங்கே இருக்கிறது என்று கேட்க மாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம்? இதற்காகவாவது இவரை மண்ணைக் கவ்வ வைக்க வேண்டும் ஈரோட்டு மக்கள். இல்லையேல், அவர்களை முத்துக்குமாரின் ஆவி சத்தியமாக மன்னிக்காது.
மேலும் பார்ப்போம்.