Wednesday, March 10, 2010

பூ வலி - 2
முன் முன் குறிப்பு: தயவு செய்து மன திடம் இல்லாதவர்கள், கர்ப்பிணிகள் இந்தக் கதைத் தொடரைப் படிக்க வேண்டாம்.

முன்குறிப்பு: சத்தியமாக மொத்தக் கதையையும் எழுதிவிட்டேன். கதை ரெண்டு பதிவுல முடிஞ்சிரும்னு நெனச்சேன். மூணாயிருச்சி.. சாரி.. :))

இரவு மணி 9:00

டாக்டர் மறுபடி வந்தார். சிவாவும் சப் வேயிலிருந்து அம்மாவுக்கு ஒரு சாண்ட்விச்சோடு வந்து நின்றார். அம்மாவைச் சமாதானப் படுத்தும் முயற்சியில் டாக்டர் இறங்கினார்.

சிவா என் அருகில் வந்து அமர்ந்து தன் கைகளைக் குவித்து அதற்குள் என் கையை வைத்துக் கொண்டார்.

“குட்டிம்மா.. உங்கம்மா சொல்றதுல எனக்கு விருப்பம் இல்லை. வேற வழியே இல்லைன்னா சிசேரியன் செய்யலாம். வம்பா நாமளா செய்யக்கூடாது. இன்னும் கொஞ்ச நேரம் பாருப்பா. உன்னால வலி பொறுக்க முடியலைங்கற கட்டத்துல எபிட்யூரல் எடுக்கிறதுதான் சரியான சொல்யூசனா எனக்குத் தெரியுது. நீ என்ன சொல்ற?”

“நானும் அப்பிடித்தான் நெனக்கிறேன் சிவா. அம்மாவுக்கு ஒரு விசயம் ரெக்கார்ட் ஆயிடுச்சின்னா அதை மாத்த முடியாது. நான் எபிட்யூரல் எடுத்துக்கிறேன்”

“தேங்க்ஸ் மா” யாரும் பார்க்காத நேரத்தில் என் நெற்றியில் உதட்டை ஒற்றி விலகினார்.

மறுபடி வலி ஆரம்பித்து விட்டது. மானிட்டரைப் பார்த்தேன். சில மணிநேரங்களுக்கு முன்னால் என்னால் பொறுத்துக்கொள்ள முடிந்த அதே அளவு வலி தான், ஆனால் இப்போது பொறுக்க முடியவில்லை. என் சக்தியை இழந்து வருகிறேனா?

டாக்டர் திரை விலக்கி உள்ளே வந்தார். “ஸீ, உமா. நான் உனக்கு எபிட்யூரல் போட பரிந்துரை செய்கிறேன். இதை எடுத்துக் கொள்வதும் எடுத்துக் கொள்ளாததும் உன் இஷ்டம். உன் அம்மாவை என்னால் சமாதானம் செய்ய முடியவில்லை. நீ என்ன சொல்கிறாய்?”

“எடுத்துக்கொள்கிறேன் டாக்டர்”

டாக்டர் ஒருமுறை சோதித்துப் பார்த்தார். “குட் உமா, டயலேஷன் இப்போது 5, 5.5 செமீ வந்து விட்டது. குழந்தையின் பொசிஷனும் -1 வந்து விட்டது. எபிட்யூரல் எடுத்துக் கொண்டு, காண்ட்ராக்‌ஷன்ஸை இண்ட்யூஸ் செய்தால் டயலேஷன் 10 செமீ வந்து விடும். ஆல் த பெஸ்ட்”

டாக்டர் நர்ஸிடம் சில உத்தரவுகளைப் பிறப்பித்துவிட்டு சென்றார்.

***********************************************
இரவு மணி 11:30

பல முறை வலியெடுத்து ஐஸ் கட்டிகளால் நாக்கையும் தொண்டையையும் நனைத்துக் கொண்டாயிற்று. கடைசியில் அனெஸ்தீஷியாலஜிஸ்ட் எபிட்யூரல் கிட்டோடு உள்ளே நுழைந்தார். அவர் பின்னாலேயே டாக்டரும்.

“எபிட்யூரல் போடும் போது ஒருவர் மட்டுமே உடன் இருக்கலாம். யார் இருக்கப் போகிறீர்கள்?”

என் அம்மாவை முந்திக் கொண்டு சிவா “நான் இருக்கிறேன்” என்று சொன்னார். அம்மா முகத்தில் உயிரே இல்லை.

டாக்டர் அம்மாவுக்குத் துணையாக அறையை விட்டு வெளியேறினார். படுக்கையில் என் பக்கவாட்டில் அமரச் செய்து விட்டு என் முதுகுக்குப் பின்னால் வந்தார் அனெஸ்தீஷியாலஜிஸ்ட்.

என் ஹாஸ்பிட்டல் உடையின் பின் பட்டன்களை அவிழ்த்துவிட்டு, என்னைக் குனிந்து உட்காரச் சொன்னார். என் முதுகெலும்புப் புடைப்பை அவர் தடவிப் பார்ப்பதை என்னால் உணர முடிந்தது. அதன் மேல் எதையோ குளிர்ச்சியாகத் தடவினார். பின் ஊசி ஒன்றைக் குத்தினார்.

“ஐ ஜஸ்ட் கேவ் யூ லோக்கல் அனெஸ்தீஷியா. கேன் யூ ஃபீல் திஸ்”

“நோ டாக்டர்”

அதன் பிறகு பல யுகங்கள் கழிந்த பிறகு அனெஸ்தீஷியாலஜிஸ்ட், “இட்ஸ் ஆல் டன். யூ வில் நாட் ஃபீல் எ திங் நவ்” என்று சொன்னார்.

அப்போது தான் உணர்ந்தேன். அடிவயிற்று வலி நின்று போயிருந்தது. நம்பிக்கையில்லாமல் மானிட்டரைப் பார்த்தேன். அதில் காண்ட்ராக்‌ஷன்கள் மேலேயும் கீழேயும் போய்க்கொண்டு தான் இருந்தன.

என் எண்ணங்களைப் புரிந்து கொண்டதைப் போல நர்ஸ் புன்னகைத்தாள்.

“நீ இப்போது சிறிது நேரம் தூங்கக்கூட செய்யலாம். டாக்டர் காண்ட்ராக்‌ஷன்களை அதிகப் படுத்த ஆக்ஸிடாக்ஸின் கொடுக்கச் சொல்லியிருக்கிறார்.”

வலி குறைந்த நிம்மதியில் நன்றாக சாய்ந்து படுத்துக் கொண்டேன். அம்மா அறையில் இருந்த இன்னொரு சோஃபா கம் பெட்டில் படுத்துக் கொண்டார். சிவா இரண்டு சேர்களை எனக்கருகில் இழுத்துப் போட்டுக் கொண்டு அதில் படுத்துக் கொண்டார். நானும் கண்ணசந்தேன். மானிட்டரில் குழந்தையின் இதயத் துடிப்பு மட்டும் “டொக் டொக்” என்று கேட்டுக் கொண்டே இருந்தது.

****************************************************
அதிகாலை மணி 3:00

குழந்தையின் இதயத் துடிப்பு குறைந்தது போல எனக்குத் தோன்றவும் தூக்கம் கலைந்து எழுந்தேன். சிவாவின் முகத்தில் கவலைக் கோடுகள்.

“என்னாச்சி சிவா?”

“ஒண்ணுமில்லம்மா. பேபியோட ஹார்ட் பீட் கொஞ்சம் குறைஞ்ச மாதிரி இருக்கு. நர்ஸ் டாக்டருக்கு கால் செஞ்சிருக்கா”

“இப்ப என்ன பண்ணுவாங்க சிவா” எனக்குள் எதோ உடைந்தது.

“நர்ஸ், இப்படி ஒரு நிலையில் டாக்டர் என்ன முடிவு எடுப்பார்கள்?”

“சி-செக்‌ஷன் செய்வார்கள்”

என் கையை அழுத்தியதில் சிவாவின் கவலை புரிந்தது. எனக்கும் அழுகை வந்தது.

குழந்தை வயிற்றில் அசைவது தெரியவில்லை என்றால் செய்து பார்க்கச் சொல்லி டாக்டர் முன்பு சொன்னது என் நினைவுக்கு வந்து - “இனிப்புத் தண்ணீர் ஏதாவது கொடுத்துப் பார்க்கலாமா?”

“ஷ்யூர்” என்று சொல்லி நர்ஸ் வெளியே சென்றாள்.

“டோண்ட் வொர்ரிமா. நல்லபடியா நடக்கும்.” என் தலையைக் கோதி ஆறுதல் சொன்னார்.

நர்ஸ் கொண்டு வந்த ஜூஸைப் பருகினேன். சிறிது நேரத்தில் குழந்தையின் இதயத் துடிப்பு சீரானது.

“குழந்தையின் காலில் ப்ளாசெண்டா சுற்றி இருந்திருக்கலாம். சுகர் வாட்டர் எடுத்ததும் கை காலை அசைத்திருக்கும், சுற்றியது சரியாகியிருக்கும்” - நர்ஸ் இதயத்துடிப்பு குறைந்ததற்கும் சரியானதற்கும் விளக்கம் கொடுத்தாள்.

*********************************************
அதிகாலை மணி 4:30

ரவுண்ட்ஸ் டாக்டர் சோதனை செய்தார்.

“டைலேஷன் இன்னும் 4 செமீ தான் இருக்கிறது. எஃபேஸ்மெண்ட் 50%. பொசிசன் -3. ஐ திங்க் திஸ் மே பீ எ சி-செக்‌ஷன்”

இடியைத்தூக்கி தலையில் இறக்கியது போல இருந்தது. இதற்காகவா இவ்வளவு நேரம் சிரமப் பட்டேன். பல மணி நேரம் வலிதாங்கி, எபிட்யூரல் எடுத்து..போங்கடா என்றிருந்தது.

சிவாவைப் பார்த்தேன். கண்கள் பனித்திருந்தது. அவருக்கும் என் போலவே எண்ணங்கள் ஓடியிருக்கும் என்று நினைக்கிறேன். படுக்கை மேல் இருந்த அவரது கையின் மேல் என் கையை வைத்தேன்.

“என்னம்மா இப்பிடி சொல்றாரு இந்த டாக்டர்?”

“ஆமா சிவா. எனக்கும் கவலையா இருக்கு. சி-செக்‌ஷன்னா முன்னாடியே செஞ்சிருக்கலாமே? இதுக்கு இவ்வளவு தூரம் நான் கஷ்டப்படனும்?”

“எதுக்கும் நம்ம டாக்டர் வரட்டும். அது வரைக்கும் வெயிட் பண்ணுவோம்”

9 comments:

Anonymous said...

முன்குறிப்புக்கு ஒரு ஆவ்வ்வ்வ்

vasu balaji said...

இதுக்கு எபிட்யூரல் இல்லாமலே நான் புள்ள பெத்துக்குவேன்.

மழை எப்ப பெய்யும், புள்ள எப்ப பொறக்கும்னு சொல்ல முடியாதுன்னு சும்மாவா சொன்னாங்க:)

அட போங்க! என்னா அமெரிக்கா. இதே இந்தியான்னா, 9ம் மாசம் செக்கப் வரப்பவே அந்தம்முனி கழுத்து, கை ல இருக்கிற நகை, கூட்டிட்டு வரவங்க நகை, புருஷன் காரன் வழிசல்லாம் பார்த்து சி செக்‌ஷன்னு டிசைட் பண்ணீடுவாங்க. நல்ல நாள் பார்த்து அட்மிட் ஆகற ஆப்ஷன் வேற.

Chitra said...

Insurance படுத்தும் பாடு.
Unless the Health Insurance company is convinced, the doctors do not rush in for C-section. :-(

பித்தனின் வாக்கு said...

என்னமே சயின்ஸ் வார்தை எல்லாம் வருது, ஆனா கதை எல்லாம் புரியுது, எங்க ஊர்ல சிசேரியனா? நார்மலான்னு மட்டும்தான் கேப்பாங்க. இப்ப இப்ப துட்டுக்கு ஆசைப்பட்டு எந்த டாக்டரும் நார்மலுக்கு விடுவதில்லை. எல்லாம் அறுத்து எடுத்துப் போடறாங்க. நன்றி.

க.பாலாசி said...

நான் கொழந்தையா பொறந்ததால இதுல வர்ர மெடி ட்ரீட்மெண்ட்டுக்கெல்லாம் மீனிங் தெரியல... ஆனாலும் அந்த ஃபீலிங்ஸ புரிஞ்சிக்க முடியுது....

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

சீட்டிங் சீட்டிங்.. அதெல்லாம் முடியாது.. முழுசா எழுதி முடிச்சாத்தான் படிப்பேன்..

vasu balaji said...

ணா. இன்னைக்கு முடிச்சிருங்ணா. எதிர் பதிவு போடணும்.:)

கலகலப்ரியா said...

நெக்ஸ்ட் பார்ட்டும் வர்ட்டும்...

Unknown said...

@சின்ன அம்மிணி -
சத்தியமா நாளைக்கே அடுத்த பார்ட் வெளிய வந்திரும்..

@வானம்பாடி - நன்றி சார்.

@சித்ரா - கரெக்டா சொன்னீங்க. சில நேரம் அது நல்லது தான் இல்லையா? இந்தியா மாதிரி தேவை இல்லாம சிசேரியன் செய்யறதை விட?

@பித்தனின் வாக்கு - கடைசி பாகத்துல சயின்ஸ் வார்த்தைக்கு எல்லாம் விளக்கம் போடுறேன்.

@க.பாலாசி - பித்தனுக்கு சொன்னதுதான் உங்களுக்கும்.

@எல் போர்ட்..பீ சீரியஸ் - நோ சீட்டிங். இப்பிடியெல்லாம் பேசினா அப்புறம் அழுதுருவேன்.

@வானம்பாடிகள் - எதிர் இடுகை எப்போ போடப் போறீங்க?