Monday, December 21, 2009

குற்றம் - நடந்தது என்ன?

ஒரு குடும்பம். அம்மா, அப்பா, மூன்று மகன்கள். முதல் இரண்டு மகன்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது. 


மூத்த மகன் அரசியல் கட்சி ஒன்றில் அடிமட்டத் தொண்டன். நிரந்தர வருமானம் இல்லை. மனைவியும் சாதாரண குடும்பத்திலிருந்து நகை நட்டு எதுவுமில்லாமல் வாழ்க்கைப்பட்டு வந்தவள். இவர்களுக்கு நான்கு குழந்தைகள். 


இரண்டாவது மகன் வாத்தியார் வேலை. சொற்ப சம்பளம். மனைவி நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்தவள். ஏதோ கைக்கும் கழுத்துக்கும் நகை போட்டிருக்கிறாள். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள்.


மூன்றாவது மகன் சொந்தமாகத் தொழில் செய்கிறான். மற்ற இருவரைக் காட்டிலும் நல்ல வருமானம். இவனுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. இவனுக்கு ஒரு வசதியான குடும்பத்தில் பெண் பார்க்கிறார்கள். அந்தப் பெண்ணுக்குத் தயக்கம். தான் இந்தக் கூட்டுக் குடும்பத்தில் போய் வாழ்ந்தால் தனக்கு உரிய மரியாதை கிடைக்குமா? என்று. இவர்கள் அவளிடம் பேசி சில பல வாக்குறுதிகளை அள்ளி வீசி அந்தப் பெண்ணை மருமகளாக்கி வீட்டுக்குக் கூட்டி வந்து விட்டார்கள்.


வந்த வேகத்தில் கொடுத்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விட்டு விட்டனர். அந்தப் பெண் கொண்டு வந்த நகைகளை அவள் சம்மதமில்லாமலே மற்ற மருமகள்களும் தாயும் அணியத் துவங்கி விட்டனர். அவள் கணவனின் வருமானமும் மொத்த குடும்பத்தால் பங்கு போடப்பட்டு அவளுக்கு சொற்ப அளவே கிடைத்தது. 


வருமானமே இல்லாத மூத்த மகன் குடும்பத்துக்குக் கிடைத்த வசதிகளை விட இவளுக்குக் குறைவாகக் கிடைப்பதாகவே நினைத்தாள். ஏனென்றால் இவள் பிறந்த வீட்டில் மிகுந்த வசதியுடன் இருந்தவள்.


எனவே அவள் ஒரு முடிவெடுக்கிறாள். தன் கணவனுடன் தனிக்குடித்தனம் போய் விட்டால் தனக்கு வேண்டிய உரிமைகள் கிடைத்துவிடும் என்று நம்புகிறாள். அதற்காக சாம, பேத, தண்ட முறைகளில் போராட்டம் நடத்துகிறாள். 


பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஊர்ப் பெரியவர்கள் அவர்களைத் தனியாகக் குடியமர்த்திவிடலாம் என்று முடிவெடுக்கின்றனர், இப்போது வீட்டில் அடிக்கிறது புயல். மற்ற மகன்களின் குடும்பம் இவர்களைத் தனியே குடியமர்த்தக் கூடாது என்று கொடி பிடிக்கின்றனர். இரண்டாவது மகன், அப்படி அவர்கள் தனியே போனால் நானும் போகிறேன் என்கிறான்.


இதைப் பார்த்த மற்ற வீடுகளிலும் தனிக் குடித்தனம் என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது. கொடுமை என்னவென்றால் கணவனும் மனைவியும் மட்டுமே உள்ள வீடுகளில் கூட தனிக்குடித்தனம் - கணவன் தனியாகவும் மனைவி தனியாகவும் - போக வேண்டும் என்றும் அதற்கு ஊர் ஒத்துக்கொள்ள வேண்டும் என்றும் குரல் கொடுக்கின்றனர். ஊர்ப் பெரியவர்கள் அவசரப்பட்டு விட்டோமே என்று கவலை கொள்கின்றனர்.


மேலே சொன்னது வி.சேகர் படக் கதையல்ல. ஆந்திரப் பிரதேசத்திலும் அதைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் நடை பெறும் கூத்துதான். 


இதில் மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்? ஜார்கண்ட்டின் நிலையை தெலுங்கானா மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். ஒரு குறைந்த பட்ச செயல்திட்டத்தை தெலுங்கானாவுக்கு வகுக்க வேண்டும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள் அந்தத் திட்டங்கள் மாநில அரசால் நிறைவேற்றப் படாவிட்டால் தனி மாநிலம் அளிப்பதாக உத்திரவாதம் அளிக்க வேண்டும். இதுதான் இப்போதைக்கு ஒரு சரியான முடிவாக இருக்கும்.


அதோடு தனித் தெலுங்கானா கோருபவர்கள் தங்களின் நியாயங்களை அனைவரும் அறியும்படி பிரசாரம் செய்ய வேண்டும். இல்லையென்றால் என்.டி.டி.வி போன்ற அரை வேக்காட்டு ஊடகங்கள் வெளியிலிருந்து பார்ப்பவர்களின் மனதில் இப்படி தவறான எண்ணத்தை விதைத்துவிடும்.



(குற்றப்பத்திரிக்கை தொடரும்)

30 comments:

Chitra said...

யோசித்து செயல்பட வேண்டிய விஷயந்தான். அரசியல்வாதிகளின் பகடை காய்களாக மக்கள் ஆக்கப் படுகிறார்கள்.

பின்னோக்கி said...

கடைசியில சரியான டிவிஸ்ட். இத நீங்க கதையாவே எழுதியிருக்கலாம். கண்டுபிடிக்கவே முடியலை. பிரிக்குறது நல்லதா கெட்டதான்னு புரியலை. அரசாங்கம் கொஞ்சம் தொலைநோக்கு பார்வையுடன் செயல் படவேண்டும்.

vasu balaji said...

வல்லபாய் பட்டேல் போன்ற தலைவர்கள் இல்லாமையே இந்த சீர்கேட்டுக்கு காரணம். அரசியல் படுத்தும் பாடுதானேயொழிய சாமானியனின் நலன் பெரிதேயல்ல.

ப்ரியமுடன் வசந்த் said...

ம்ம் விவரிப்பும் உதாரணமும் கரெக்ட்ட்..

VISA said...

//கணவன் தனியாகவும் மனைவி தனியாகவும் - போக வேண்டும் என்றும் அதற்கு ஊர் ஒத்துக்கொள்ள வேண்டும் என்றும் குரல் கொடுக்கின்றனர். ஊர்ப் பெரியவர்கள் அவசரப்பட்டு விட்டோமே என்று கவலை கொள்கின்றனர்.//

ஏய் ஆமா இந்த ஐடியா நல்லா இருக்கே....

கலகலப்ரியா said...

இந்த விஷயத்த இப்டி கூட சொல்லலாமா.. அருமை அருமை... (இந்த பிரச்சன என்னன்னு இனிமேதான் தெரிஞ்சுக்கணும்.. =)))...

நசரேயன் said...

கேட்டுக்கிறேன்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

// வெளியிலிருந்து பார்ப்பவர்களின் மனதில் //

வெளியிலிருந்து பார்ப்பவர்கள் என்பதை ஒப்புக் கொள்கிறோம். அதே நேரத்தில்

//கொடுமை என்னவென்றால் கணவனும் மனைவியும் மட்டுமே உள்ள வீடுகளில் கூட தனிக்குடித்தனம் - கணவன் தனியாகவும் மனைவி தனியாகவும் - போக வேண்டும் என்றும் அதற்கு ஊர் ஒத்துக்கொள்ள வேண்டும் என்றும் குரல் கொடுக்கின்றனர்//

குரல் வருகிறதல்லவா.., அந்தக்குரல் எங்கள் வீட்டிலிருந்தும் வந்துவிட கூடாது என்ற பதைபதைப்பு எங்களுக்கு இருக்கிறதே..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//தன் கணவனுடன் தனிக்குடித்தனம் போய் விட்டால் தனக்கு வேண்டிய உரிமைகள் கிடைத்துவிடும் என்று நம்புகிறாள். அதற்காக சாம, பேத, தண்ட முறைகளில் போராட்டம் நடத்துகிறாள். //


நாளை இவர்களுக்கும் மூன்றோ நான்கோ குழந்தைகள் பிறந்து (தெலுங்கானா பகுதியில் எத்தனை மாவட்டங்கள் என்று சொல்லுங்கள் தலைவரே) அவர்களிலும் ஒரு மருமகளுக்கு கிடைக்கும் மரியாதை அடுத்த மருமகளுக்கு கிடைக்கவில்லை என்று தனிக்குடித்தனம் போனால் இந்த மூன்றாவது மருமகள் ஒத்துக் கொள்வாரா..,

அல்லது தனிக்குடித்தனம் வேண்டூம் என்று உண்ணாவிரதம் இப்போது உண்ணாவிரதம் இருப்பவர் அப்போது தனிக்குடித்தனம் வேண்டாம் என்று உண்ணாவிரதம் இருப்பாரா?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பிரச்சனை மகன்களுக்கு நடுவில் இல்லை.., கடைசி மருமகளால் தான் என்று ஒத்துக்கொள்கிறீர்களா..?

Unknown said...

// Chitra said...
யோசித்து செயல்பட வேண்டிய விஷயந்தான். அரசியல்வாதிகளின் பகடை காய்களாக மக்கள் ஆக்கப் படுகிறார்கள்.//

வழி மொழிகிறேன்

Unknown said...

// பின்னோக்கி said...
கடைசியில சரியான டிவிஸ்ட். இத நீங்க கதையாவே எழுதியிருக்கலாம். கண்டுபிடிக்கவே முடியலை. பிரிக்குறது நல்லதா கெட்டதான்னு புரியலை. அரசாங்கம் கொஞ்சம் தொலைநோக்கு பார்வையுடன் செயல் படவேண்டும்.
//

நன்றி பின்னோக்கி. கதையா எழுதலாம்னுதான் யோசிச்சேன்

Unknown said...

//வானம்பாடிகள் said...
வல்லபாய் பட்டேல் போன்ற தலைவர்கள் இல்லாமையே இந்த சீர்கேட்டுக்கு காரணம். அரசியல் படுத்தும் பாடுதானேயொழிய சாமானியனின் நலன் பெரிதேயல்ல.
//
என்னைக் கேட்டால் வல்லபாய் பட்டேல் தான் இந்த சீரழிவிற்குக் காரணம் என்பேன்.

Unknown said...

பிரியமுடன்...வசந்த் said...
ம்ம் விவரிப்பும் உதாரணமும் கரெக்ட்ட்..


நன்றி வசந்த்

Unknown said...

//VISA said...
//கணவன் தனியாகவும் மனைவி தனியாகவும் - போக வேண்டும் என்றும் அதற்கு ஊர் ஒத்துக்கொள்ள வேண்டும் என்றும் குரல் கொடுக்கின்றனர். ஊர்ப் பெரியவர்கள் அவசரப்பட்டு விட்டோமே என்று கவலை கொள்கின்றனர்.//

ஏய் ஆமா இந்த ஐடியா நல்லா இருக்கே..'

//

வீட்டுல சொல்லிட்டு வந்துட்டிங்களா?

Unknown said...

//கலகலப்ரியா said...
இந்த விஷயத்த இப்டி கூட சொல்லலாமா.. அருமை அருமை... (இந்த பிரச்சன என்னன்னு இனிமேதான் தெரிஞ்சுக்கணும்.. =)))...
//

இதத் தான் பகடிங்கறதா?

Unknown said...

//நசரேயன் said...
கேட்டுக்கிறேன்//

நன்றி

Unknown said...

////கொடுமை என்னவென்றால் கணவனும் மனைவியும் மட்டுமே உள்ள வீடுகளில் கூட தனிக்குடித்தனம் - கணவன் தனியாகவும் மனைவி தனியாகவும் - போக வேண்டும் என்றும் அதற்கு ஊர் ஒத்துக்கொள்ள வேண்டும் என்றும் குரல் கொடுக்கின்றனர்//

குரல் வருகிறதல்லவா.., அந்தக்குரல் எங்கள் வீட்டிலிருந்தும் வந்துவிட கூடாது என்ற பதைபதைப்பு எங்களுக்கு இருக்கிறதே..,
//

அதே பதைபதைப்பு எனக்கும் இருக்கிறது. அதைத்தான் கணவன் மனைவி என்றும் அவர்கள் பிரியக்கூடாது என்றும் கூறியிருக்கிறேன்.

Unknown said...

//நாளை இவர்களுக்கும் மூன்றோ நான்கோ குழந்தைகள் பிறந்து (தெலுங்கானா பகுதியில் எத்தனை மாவட்டங்கள் என்று சொல்லுங்கள் தலைவரே) அவர்களிலும் ஒரு மருமகளுக்கு கிடைக்கும் மரியாதை அடுத்த மருமகளுக்கு கிடைக்கவில்லை என்று தனிக்குடித்தனம் போனால் இந்த மூன்றாவது மருமகள் ஒத்துக் கொள்வாரா..,

அல்லது தனிக்குடித்தனம் வேண்டூம் என்று உண்ணாவிரதம் இப்போது உண்ணாவிரதம் இருப்பவர் அப்போது தனிக்குடித்தனம் வேண்டாம் என்று உண்ணாவிரதம் இருப்பாரா?
//

இதைத்தான் தெலுங்கானாவுக்காக போராடுபவர்கள் சரியாக பிரச்சாரம் செய்யாமல் விட்டு விட்டார்கள். தெலுங்கானாவை இணைத்த போது - ஜெண்டில்மேன்ஸ் அக்ரிமெண்ட் ஒன்று போடப்பட்டது - இந்த இணைப்பு திருமணத்தைப் போன்றது. எப்போது பிடிக்கவில்லயோ அப்போது விவாகரத்து செய்து கொள்ளலாம் என்று. அந்த அக்ரிமெண்ட்டை குப்பையில் தூக்கிப் போட்டவர்களை எந்த குழிக்குள் தள்ளுவது?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள் அந்தத் திட்டங்கள் மாநில அரசால் நிறைவேற்றப் படாவிட்டால் தனி மாநிலம் அளிப்பதாக உத்திரவாதம் அளிக்க வேண்டும்//

குறிப்பிட்ட ஆண்டுக்குள் மருமகளுக்கு வயதாகி அடுத்த மருமகள் வந்து விடுவாரே.., அதற்கு மருமகள் இப்போது ஒத்துக் கொள்வாரா..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//தெலுங்கானாவை இணைத்த போது - ஜெண்டில்மேன்ஸ் அக்ரிமெண்ட் ஒன்று போடப்பட்டது - இந்த இணைப்பு திருமணத்தைப் போன்றது. எப்போது பிடிக்கவில்லயோ அப்போது விவாகரத்து செய்து கொள்ளலாம் என்று. அந்த அக்ரிமெண்ட்டை குப்பையில் தூக்கிப் போட்டவர்களை எந்த குழிக்குள் தள்ளுவது?//

திருமணம் என்ற அழகிய அற்புதமான பதத்தை உபயோகப் படுத்தி இருக்கிறீர்கள்.

திருமணத்தில் ஏற்படும் ஏமாற்றத்தை சரியான வழிமுறைகளை முயற்சி செய்ய வேண்டும். விவாகரத்துச் செய்யும் அளவிற்கு ஏமாற்றபடவில்லை.

தகவல் தொழிற்நுட்ப வகையறாக்கள் தெலுங்கானா பகுதியில் இடம்பெற்றுள்ளன என்பதை மனதில் கொள்ளுங்கள்..,

Unknown said...

//பிரச்சனை மகன்களுக்கு நடுவில் இல்லை.., கடைசி மருமகளால் தான் என்று ஒத்துக்கொள்கிறீர்களா..?
//

நானும் தெலுங்கானாவை தனியாகப் பிரித்து விட வேண்டும் என்று சொல்லவில்லை. நடுவண் அரசு தொலை நோக்குப் பார்வையுடன் செயல்பட வேண்டும் என்பதே என் ஆசை. அதே சமயம் தெலுங்கானவை வெளியில் இருந்து பார்க்கும் நம் போன்றவர்கள் விஷயம் புரியாமல் விஷமமாகப் பேசும் போது அவர்களுக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும் என்பதை நாம் உணர்ந்து பேச வேண்டும். என் முந்தய பதிவில் நானும் விளையாட்டாகத் தான் கூறியிருந்தேன். இலங்கையில் அடி பட்டுக் கொண்டிருக்கும் நம் சகோதரர்களிடம் போய், எதுக்கு இப்பிடி அடிச்சுக்குற, பேசாம சிங்களம் படிச்சுட்டு அவன் கிட்ட கை கட்டி சேவகம் செய்யலாமே. நீயும் நிம்மதியா இருக்கலாம் உன் புள்ள குட்டிகளும் சந்தோசமாக இருக்கும் என்று கூறினால் எப்படி இருக்கும்? உங்கள் நண்பர் கேட்ட கேள்விகள் எனக்கல்ல என் தெலுங்கானாவைச் சேர்ந்த ஒரு நண்பருக்கு இப்படித்தான் இருந்தது.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஆந்திராவில் இருப்பவர்கள் உண்மையான சகோதரர்கள்

Unknown said...

சரியான எடுத்து காட்டு...

Unknown said...

//தகவல் தொழிற்நுட்ப வகையறாக்கள் தெலுங்கானா பகுதியில் இடம்பெற்றுள்ளன என்பதை மனதில் கொள்ளுங்கள்.//

நீங்கள் ஹைதராபாத்தை மட்டும் மனதில் வைத்துப் பேசாதீர்கள்.
ஹைதையில் முதலீடு - நிலம் மற்றும் நிறுவனங்கள் - செய்திருக்கும் 98 சதவீதத்தினர் ஆந்திரா மற்றும் ராயலசீமாவைச் சேர்ந்தவர்களே. அதனால் தான் இவர்கள் பிரிக்கக் கூடாது என்று குரல் கொடுக்கின்றனர்.

கோதாவரியும் கிருஷ்ணாவும் தெலுங்கானா வழியாகத் தான் ஆந்திர மாநிலத்துக்குள் பாய்கிறது. ஆனால் அவர்களுக்கு கிடைக்கும் பங்கு மிகக் குறைவே. மீண்டும் ஒரு முறை சொல்கிறேன். நான் பிரிவினையை ஆதரிக்கவில்லை. ஆனால் நாம் வெளியிடும் கமெண்ட்டுகள் அவர்களின் மனதைப் புண்படுத்தா வண்ணம் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சகோதரர்கள் சண்டையை சுற்றி இருப்பவர்கள் சமாதானப் படுத்த வேண்டும். சகோதரர்கள் பங்காளிகளாக மாறிவிட்டால் அவர்களின் சண்டை என்றுமே ஓயாது. பல தலைமுறைகளுக்கு ஊரை ரெண்டாக்கி விடுவார்கள்

உதாரணம் உங்கள் பக்கத்துவீட்டிலேயே இருக்கலாம். இல்லையென்றால் இந்தியா- பாகிஸ்தான் உறவு

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ஹைதையில் முதலீடு - நிலம் மற்றும் நிறுவனங்கள் - செய்திருக்கும் 98 சதவீதத்தினர் ஆந்திரா மற்றும் ராயலசீமாவைச் சேர்ந்தவர்களே//

தனித்தெலுங்கானா அமைந்தால் இவர்கள் தெலுங்கானாவை விட்டு வெளியேறிவிடுவார்களா..,

அல்லது

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது நடந்தமாதிரி ஆகிவிடுமா?

அதற்குத் தீர்வு என்ன சொல்க்கிறார்கள்

Unknown said...

//சகோதரர்கள் சண்டையை சுற்றி இருப்பவர்கள் சமாதானப் படுத்த வேண்டும். சகோதரர்கள் பங்காளிகளாக மாறிவிட்டால் அவர்களின் சண்டை என்றுமே ஓயாது. பல தலைமுறைகளுக்கு ஊரை ரெண்டாக்கி விடுவார்கள்

உதாரணம் உங்கள் பக்கத்துவீட்டிலேயே இருக்கலாம். இல்லையென்றால் இந்தியா- பாகிஸ்தான் உறவு//

டாக்டர் சார். நீங்கள் இன்னும் என்னை தனித் தெலுங்கானாவுக்கு ஆதரவாளன் என்ற எண்ணத்திலேயே இருக்கிறீர்கள். நானும் உங்கள் பக்கம் தான். தனித் தெலுங்கானா வேண்டாம் என்று சொல்பவர்கள் கேட்பவர்களைப் பார்த்து நீங்கள் கேட்பது முட்டாள்தனம் என்று சொல்லாதீர்கள். Assertive ஆகப் பேசுங்கள் என்று தான் சொல்கிறேன்.

இதற்கு மேல் நான் விளக்க விரும்பவில்லை

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//தனித் தெலுங்கானா வேண்டாம் என்று சொல்பவர்கள் கேட்பவர்களைப் பார்த்து நீங்கள் கேட்பது முட்டாள்தனம் என்று சொல்லாதீர்கள். Assertive ஆகப் பேசுங்கள் என்று தான் சொல்கிறேன்.//

அவ்வாறே இருப்போம்..,

குடுகுடுப்பை said...

நானும் கூட தெலுங்கானா தேவை என்று நினைத்தவ்னே, இன்னும் கூட ராயலசீமா பகுதி தெலுங்கர்களின் அலட்சியப்பேச்சு தெலுங்கானா தேவை என்றே என்ன வைக்கிறது. ஆனால் ஜார்கண்ட் பாடம் இவைகளைவிட பயங்கரமானது.