Wednesday, May 5, 2010

கனவு தேசம் - 4

பாகம்-1 பாகம்-2 பாகம்-3

விசா வாங்கி, விமானம் ஏறி, இமிக்ரேஷனைத் தாண்டி அமெரிக்காவில் கால் பதித்தாயிற்று. அடுத்தது என்ன?

அமெரிக்காவுக்கு வரும் ஒவ்வொருவருக்கும் அவர்களது பாஸ்போர்ட்டுக்கு அடுத்த படியாக முக்கியமானது இன்ஸ்யூரன்ஸ் அட்டை. எதற்காக இன்ஸ்யூரன்ஸ் எடுக்க வேண்டும்? எடுக்காவிட்டால் என்ன என்று கேட்கலாம். அதை விளக்குவதே இந்த பகுதி.

அமெரிக்காவில் மருத்துவ செலவுகள் அதிகம். எவ்வளவு அதிகம்? ஒரு உதாரணம்

நாங்கள் அமெரிக்கா வந்த ஒரு வாரத்துக்குள் என் மனைவி காய்கறி நறுக்கும் போது கையையும் சேர்த்து அறுத்துக் கொண்டார். நான் ஊருக்குப் புதிதென்பதால் என்னுடன் பணி புரிந்த அக்கட தேசத்து நண்பர் ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். எங்கள் இன்ஸ்யூரன்ஸ் அப்போது வரவில்லை என்பதால் எங்கள் கையில் இருந்து பணம் கொடுக்க வேண்டியதிருந்தது. இரண்டு தையல் போட்டதற்கு பில் எவ்வளவு தெரியுமா? $250.00 இந்தியப் பணத்தில் கிட்டத்தட்ட 11,250/-

ஏன் அமெரிக்காவில் மருத்துவ செலவுகள் அதிகமாக இருக்கிறது? இதைப் பற்றி மட்டுமே ஒரு பெரிய தொடரே எழுதலாம். இருந்தாலும் சுருக்கமாக.

1. அமெரிக்காவில் அவசர சிகிச்சைக்கு - எமெர்ஜென்சி ரூம் - அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு இன்ஸ்யூரன்ஸ் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிகிச்சை அளித்தேத் தீர வேண்டும் என்பது கட்டாயம். இங்கே ஒருவர் குண்டடிப் பட்டு மருத்துவமனைக்குப் போனாலும் கூட போலீஸ் கம்ப்ளெயிண்ட் கேட்க மாட்டார்கள். உடனே மருத்துவ உதவி வழங்கப்படும். அப்படி செலவாகும் பணத்தை மருத்துவமனைகள் மற்ற அவசரமல்லாத (Non-emergency) நோயாளிக்கான சேவையின் மீது திணிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

2. அமெரிக்காவில் தவறாக டயக்னைஸ் (நோயைக் கண்டுபிடித்தல்) செய்துவிட்டாலோ, இல்லை தவறான சிகிச்சை செய்துவிட்டாலோ, மருத்துவரின்/மருத்துவமனையின் மீது வழக்குப் போடலாம். போட்டு அந்த மருத்துவர் தன் வாழ்நாளில் சம்பாதித்த அத்தனை பணத்தையும் நஷ்ட ஈடாக வாங்கிவிடலாம். இப்படிப் போடப் படும் வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகம். இந்த மாதிரி போடப்படும் வழக்குகளை எதிர்கொள்ள ஆகும் செலவையும் தங்கள் பேஷண்டுகளின் மீது திணிக்கின்றனர் மருத்துவர்கள்/மருத்துவமனைகள்.

3. அமெரிக்க இன்ஸ்யூரன்ஸ் கம்பெனிகள் அனைத்தும் தனியார் வசம் உள்ளன. அமெரிக்க மருத்துவத்தொழிலையே ஆட்டிப் படைப்பவர்கள் இவர்கள்தாம். மருத்துவ செலவை அதிகமாக வைத்திருப்பதன் மூலம் அனைவரையும் இன்ஸ்யூரன்ஸ் எடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் வைத்திருக்கின்றன.

ஆனாலும் மருத்துவ வசதிகளில் அற்புதமாக இருக்கும். ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவரையும் ஒரே மாதிரி நடத்துவார்கள். ஒரு சிகிச்சை அளிக்கும் முன் அந்த சிகிச்சையைப் பற்றி பேஷண்டிடம் விளக்குவார்கள். மாற்று சிகிச்சை இருப்பின் அதைப் பற்றியும் பேஷண்டிடம் விளக்கி தேர்வை பேஷண்டிடமே விட்டு விடுவார்கள்.

மருத்துவர்களும் தேவையான சிகிச்சை மட்டுமே அளிக்க வேண்டும். நம்மூர் போல தேவையில்லாமல் மச்சானின் லேபில் இசிஜி, எக்ஸ்ரே எல்லாம் எடுக்கச் சொல்ல முடியாது.

பேஷண்டுகளின் மருத்துவ ஆவணங்களை பத்திரப்படுத்தி வைப்பது மருத்துவரின் கடமை. பேஷண்ட் வேறு டாக்டரைத் தேடிப் போய்விட்டாலும், குறைந்தது ஐந்து வருடங்கள் (குழந்தை நல மருத்துவர்கள் 20 வருடங்கள்) அந்த ஆவணங்களைப் பத்திரப் படுத்தி வைத்திருக்கவேண்டும்.

ஆக நீங்கள் வேலை செய்ய வருகிறீர்களோ, படிக்க வருகிறீர்களோ இல்லை சுற்றுப் பயணம் வருகிறீர்களோ மெடிக்கல் இன்ஸ்யூரன்ஸ் இல்லாமல் இருப்பது ரிஸ்க் தான்.

இதில் நம் மக்கள் என்ன என்ன கோல்மால்கள் செய்கிறார்கள்?

1. பெற்றோர்களை அழைத்து வருபவர்கள் அவர்களுக்கு இன்ஸ்யூரன்ஸ் எடுக்காமல், எதாவது அவசரம் என்றால் அவர்களை மருத்துவமனையின் எமெர்ஜென்சி வார்டில் அட்மிட் செய்து விட்டு, யாரென்றே தெரியாது என்று சொல்லிவிடுகிறார்கள். (இன்ஸ்யூரன்ஸ் இல்லாமல் வந்த பெற்றோர்களில் ஒருவருக்கு கேன்சர் கண்டுபிடிக்கப்பட்டு இங்கே மருத்துவம் பார்த்ததால் $85,000 பில் வந்து கட்ட முடியாமல் சொல்லிக்கொள்ளாமல் இந்தியா ஓடிய குடும்பம் ஒன்றையும் எனக்குத் தெரியும்)

2. பல அக்கட நாட்டு மணமாகாத இளைஞர்கள் இன்ஸ்யூரன்ஸ் எடுப்பதில்லை. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் - தலைவலி, காய்ச்சல் என்றால் ஓவர் த கவுண்டர் மாத்திரை வாங்கிக் கொள்ளலாம். எங்கேயாவது அடிபட்டால் எமெர்ஜென்சி ரூமுக்குப் போய் வைத்தியம் பார்த்துக் கொள்ளலாம். சரி, எமெர்ஜென்சி ரூமுக்குப் போனால் சோசியல் செக்யூரிட்டி எண் கேட்பார்களே (இதைப் பற்றி அடுத்த பதிவில்) என்று கேட்டால், நான் ஷார்ட் டெர்ம் ட்ரைனிங்கிற்கு வந்துள்ளேன், எனக்கு எஸ்.எஸ்.என் இல்லை என்று சொல்ல்விடுவேன். தப்பான முகவரியையும் கொடுத்து விட்டால் பணம் கேட்டுத் துரத்தி வர முடியாதே? இப்படிப்பட்டவர்கள் இருப்பதாலும் மருத்துவ செலவு அதிகமாகிறது.

ஆகவே குறைந்த பட்ச மருத்துவ சேவைக்காவது இன்ஸ்யூரன்ஸ் வைத்துக் கொள்வது நல்லது.

அடுத்த பதிவில் சோசியல் செக்யூரிட்டி எண்ணைப் பற்றியும், ட்ரைவிங் லைசன்ஸ், கார் வாங்கி ரெஜிஸ்ட்ரேஷன் செய்வதைப் பற்றியும் விரிவாக எழுதுகிறேன்.

18 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Me the first..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இப்ப, பதிவ படிச்சுட்டு வாரேன் சார்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ரொம்ப யூஸ்புல் பதிவு..

Paleo God said...

//3. அமெரிக்க இன்ஸ்யூரன்ஸ் கம்பெனிகள் அனைத்தும் தனியார் வசம் உள்ளன. அமெரிக்க மருத்துவத்தொழிலையே ஆட்டிப் படைப்பவர்கள் இவர்கள்தாம். மருத்துவ செலவை அதிகமாக வைத்திருப்பதன் மூலம் அனைவரையும் இன்ஸ்யூரன்ஸ் எடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் வைத்திருக்கின்றன.//

அப்ப கூடிய சீக்கிறம் நம்மூர்லயும் எதிர் பார்க்கலாம். ரைட்டு!

:)

ஈரோடு கதிர் said...

ஒபாமா போராடும் ஹெல்த்பில் பற்றியும் கொஞ்சம் விளக்கமாக எழுதுங்களேன்

Chitra said...

பெற்றோர்களை அழைத்து வருபவர்கள் அவர்களுக்கு இன்ஸ்யூரன்ஸ் எடுக்காமல், எதாவது அவசரம் என்றால் அவர்களை மருத்துவமனையின் எமெர்ஜென்சி வார்டில் அட்மிட் செய்து விட்டு, யாரென்றே தெரியாது என்று சொல்லிவிடுகிறார்கள். (இன்ஸ்யூரன்ஸ் இல்லாமல் வந்த பெற்றோர்களில் ஒருவருக்கு கேன்சர் கண்டுபிடிக்கப்பட்டு இங்கே மருத்துவம் பார்த்ததால் $85,000 பில் வந்து கட்ட முடியாமல் சொல்லிக்கொள்ளாமல் இந்தியா ஓடிய குடும்பம் ஒன்றையும் எனக்குத் தெரியும்)


....... சின்ன சின்ன விஷயங்களில் இருந்து பெரிய விஷயங்கள் வரை - few desis , தங்கள் கையை காலை வச்சு, பெயரை பல இடங்களில் நாஸ்த்தி பண்ணி வச்சுருக்காங்களே..... :-(

vasu balaji said...

என்னன்னமோ சொல்றீய!

ஜெய்லானி said...

ஏமாத்த ஐடியா வேற தறீங்க. ஆமா நீங்க நல்லவரா ? கெட்டவரா ?

நாடோடி said...

விரிவான‌ அல‌ச‌ல்... தொட‌ருங்க‌ள்..

எல் கே said...

nalla pani. todarattum

பிரபாகர் said...

நண்பர்கள் மூலம் ஏற்கனவெ கேள்விப்பட்டாலும் நிறைய உபயோகமான தகவல்கள்... இன்னும் நிறைய எழுதுங்கள்...

பிரபாகர்...

Anonymous said...

இந்தியால ஓவர்சீஸ் ட்ரைவிங் லைசென்ஸ் எடுத்துட்டு அங்க வந்து ஓட்றவங்க பத்தியும் கொஞ்சம் சொல்லுங்க

பனித்துளி சங்கர் said...

தெரியாத பல தகவல்களை இந்த பதிவின் வாயிலாக அறிந்துகொண்டேன் . பகிர்வுக்கு நன்றி !

பிரேமா மகள் said...

நல்ல தகவல்.//... நன்றி..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

:() ஆமா.. செலவு சாஸ்தின்னாலும் நல்லாப் பாக்கறாங்க இங்க.. ம்ம்..

"உழவன்" "Uzhavan" said...

ஓ.. இவ்வளவு இருக்கா?

அமுதா கிருஷ்ணா said...

நிறைய விஷயங்கள் தெரிந்துக் கொள்ள முடிந்தது...எனக்கு விருந்தினர் விசாக்கு ஏற்பாடு செய்து விடுங்கள்..மகன் மகள் தான் செய்யணுமா..ஃப்ரெண்ட்ஸும் செய்யலாம்ல...

கிரி said...

நம்ம ஆளுங்க எங்க சென்றாலும் அந்த ஊருல இருக்கிறவங்களுக்கே தெரியாத டெக்னிக் எல்லாம் கற்று தருவாங்க!

நீங்க கொஞ்சம் தாமதமா பதிவிடுவதால் முந்தைய பாகம் மறந்து விடுகிறது. அனைத்து பாகமும் முடிந்தவுடன் திரும்ப ஒரு முறை படிக்கணும்.